அறம் செய விரும்பு - 18
நியமத்தில் உள்ளவன் சாப்பிடக்கூடியவை
வாழையின் எல்லாப்பகுதிகளும், பலா, அவரை, பாகல், தேங்காய், நார்த்தை, பேரீச்சை, மாதுளை, நாவல், நெல்லி, இஞ்சி, கொத்தமல்லி, சுண்டைக்காய், புளி, இலந்தை, கண்டங்கத்திரி, விளா உளுந்து, துவரை, பயறு, நரிப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை, கருமொச்சை, கடுகு, எள், மிளகு, சீரகம், திப்பிலி, கருஞ்சீரகம், பரங்கி, பூசணி, வெள்ளரி, கண்டங்கத்திரி, கக்கரி, சேம்பு, சாமை, பொன்னாங்கண்ணி, திராக்ஷை, வல்லாரை, தூதுவளை, பசுவின் பால் தயிர் மோர் நெய், எருமை பால் தயிர் மோர் நெய் வெள்ளாட்டின் பால், கரணைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, அகத்தி, நெய்யில் பக்குவமானவை, ஆண்டவனுக்கு நிவேதனமானவை சேர்க்கத்தக்கது. சிஷ்டர்களான முன்னோர்கள் வழக்கில் இருந்தவைகளும் நல்லவையே.
நியமத்தில் உள்ளவன் சாப்பிடக்கூடாத பொருள்கள்
வெள்ளுள்ளி, வெங்காயம், செம்முருங்கை, முள்ளங்கி, கும்மட்டிக்காய், நாய்க்கொடை, சுரை, ஈன்று பத்து நாளாகாத பசுவின் பால், பெருங்காயம் தவிர மற்ற பிசின் கலந்தது, வெள்ளைக்கத்திரி, பசளை, கோவை, அத்தி, குசும்பா எள்ளு, கொள்ளு, நெய்க்கசண்டு, நீர் கலவாத மோர், காரணமின்றி எள்ளன்னம், பழைய அன்னம், கன்றில்லாமல் அல்லது வேறு கன்று ஊட்டி பால் தரும் பசுவின் பால், உப்புடன் சேர்ந்த பால், தாமிரபாத்திரத்தில் உள்ள தேன், தயிர், மோர், நெய் முதலியவை, வெண்கலப்பாத்திரத்தில் உள்ள கரும்புச்சாறு, இளநீர், இரவில் தயிர் நெல்லிக்காய் மாம்பழம் எள் கலந்த உணவு, ஸத்துமா, முட்டைப்பொரி முதலியவை. நீர்ச்சேம்பு, அப்போது ஆடிய எண்ணெய், பிறர் குடித்து மீந்த நீர், நாய் காக்கை பறவை பசு பூனை முகர்ந்து பார்த்ததும் எச்சிலாக்கியதும் (அதிக அளவில் சமைத்திருந்தால் சுத்திமுறை அறிந்து செய்து சேர்க்கத்தக்கதாயின் சேர்க்கலாம்.) ஒருவர் சாப்பிட்ட பின் மீதமுள்ள எச்சில் (குருவினுடையதைச் சீடனும்,பதியுடையதைப் பத்தினியும் தவிர) கேசம், நகம் போன்றவை கலந்தது. (அதனைச் சுற்றியுள்ள உணவை நீக்கி அவசியமாயின் உண்ணலாம். எறும்பு, ஈ, கொசு மொய்த்து சாப்பிடலாமா கூடாதா என்று ஐயம் உண்டாக்கும் உணவு, அருவருப்பும் உமட்டலும் தருவது, சுவை மாறியது, உருவம் மாறியது, மணம் மாறியது, உவர் மண்ணாலான உப்பு, செம்மறியாட்டுப் பால், காந்திப்போன அன்னம் முதலியவை, சாறு பிழிந்தெடுக்கப்பட்ட பழத்தோல்கள், எண்ணெய் எடுக்கப்பட்ட புண்ணாக்கு, காடி, நுரையுள்ள நெய், நெய்யின் ஏடு, புளித்ததயிர், ருசிகெட்ட மோர், கடைகளில் விற்கப்படுகின்ற பக்குவமான உணவு, பிரதமையில் பூசனி, ஷஷ்டியில் புடல், ஸப்தமியில் நெல்லிக்காய், திரயோதசியில் எள்ளு, சதுர்தசியில் புளி, பர்வகாலத்தில் நெல்லிக்காய், இறைவனுக்கு நிவேதனமாகாதது இவை நீக்கத்தக்கவை. அறியாமல் சேர்க்கப்பட்டிருந்தால் உபவாசம் இருக்க வேண்டும், இவையே சிகிச்சைக்குப் பயன்படுமானால் வேறு மாற்றுப் பொருள் கிடைக்காவிடில் சேர்க்கலாம்.
சாப்பிட்டபின்
சாப்பிட்டதும் உட்கார்ந்திருப்பவனுக்கு வயிறு பெருக்கும். நிற்பவனுக்கு உறுதி உண்டாகும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும். ஓடுபவனுக்கு அழிவு உண்டாகும். தூங்குகிறவனுக்கு உடல் பருக்கும். உண்டதும் மெதுவாக நூறடி நடந்து அரசன்போல் நிமிர்ந்து உட்கார வேண்டும்.
இதிஹாஸ, புராணங்களை கேட்பதும் படிப்பதும் நல்லது. அதன்பிறகு தன் குடும்பத்தின் பணிகளை செய்ய வேண்டும்.
தாம்பூலம்
உண்டதும் தாம்பூலம் போடுவதும் உண்டவர்களுக்குத் தாம்பூலம் தருவதும் நல்லது. பாக்கு அதிகமானால் நோய் வரும். வெற்றிலையின் நுனிக்காம்பு நடுவில் உள்ள நரம்பு இவற்றை நீக்கிப் பின்புறம் சுண்ணாம்பு தடவி பாக்கு சேர்த்து, சுண்ணாம்பு தடவிய பகுதியை உள்வைத்து மடித்து வாயிலிட்டு மெல்லவும். பகலில் சுண்ணாம்பு அதிகமாயும் காலையில் பாக்கு அதிகமாகவும் மாலையில் வெற்றிலை அதிகமாகவும் கூட்ட வேண்டும். தாம்பூலம் ஜீர்ணத்தைத் துரிதப்படுத்தும். வாய்மணக்கச் செய்யும். சுவையைக் கூட்டும். கலக்கத்தை நீக்கும். சுறுசுறுப்பைத் தரும். பிரும்மசாரியும், விரதத்தில் இருக்கின்ற கிருஹஸ்தனும் துறவியும் தாம்பூலம் போடக்கூடாது. அதிகமாகத் தாம்பூலம் பற்களிலும் கண்களிலும் நோய் உண்டாக்கும்.
தொடரும்...
Comments