தவம்

      உத்தானபாதன் என்றோர் அரசன் இருந்தான். அவனுக்கு சுருசி, சுநீதி என இரண்டு மனைவியர் இருந்தனர். சுருசிக்கு உத்தமன் என்றொரு மகனும் சுநீதிக்கு துருவன் என்றொரு மகனும் இருந்தனர். அவர்களுள் அரசன் உத்தானபாதனுக்கு சுருசியும் அவளது மகன் உத்தமனும்தான் மிகவும் பிரியமானவர்களாக இருந்தனர். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. சுநீதியின் மகன் துருவன் நற்குணங்களும் நற்செய்கைகளும் கொண்டவன்.
    ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தந்தையைக் காண விரும்பி அந்தப்புரத்திற்குச் சென்றான்.  அங்கே அரசன், சுருசியுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் மடியில் உத்தமன் அமர்ந்திருந்தான். தந்தையின் மடியில் தன் சகோதரன் அமர்ந்திருப்பதைப் பார்த்த துருவன் தானும் அப்பாவின்மடியில் அமரவேண்டும் என ஆசைப்பட்டு அருகில் சென்றான். சுருசி அதை விரும்பமாட்டாள் என்பதை அறிந்திருந்த அரசன், துருவனின் விருப்பத்தை ஏற்கவில்லை. அதுமட்டுமல்ல, சுருசி துருவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, “பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய். என் வயிற்றில் பிறக்காமல், வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ, இத்தகைய உயர்ந்த சிம்மாஸனத்திற்கு ஆசைப்படலாமா? நீ இந்த அரசனின் மகன்தான் என்றாலும், அதற்கு நீ தகுந்தவனல்ல. என் மகனே அதற்குத் தகுதியுடையவன். பாக்யமில்லாத சுநீதி வயிற்றில் பிறந்ததை நீ நினைக்க வேண்டாமா? இங்கிருந்து போ!” என்று இழிவாகப் பேசினாள். அதைக் கேட்ட துருவன் கோபங்கொண்டு, மனக்கலக்கமடைந்து, வேகமாகத் திரும்பித் தன் தாயிடம் ஓடினான்.
   கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, கோபமாக வந்த துருவனை சுநீதி தன்மடியில் அமரவைத்து, “மகனே! என்ன நடந்தது? உன் கோபத்திற்குக் காரணம் என்ன?” என்று வினவினாள். துருவன் நடந்ததை விளக்கினான்.
  “மகனே! சுருசி சொன்னவை அனைத்தும் உண்மைதான். நான் பாக்யமற்றவள். சுருசி பாக்யசாலி. கணவன் தன்னிடத்தில் பிரியமாக இருப்பதற்குப் புண்ணியம் செய்திருக்கிறாள். நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டும் உடையவளாக இருக்கிறேன். உத்தமன் புண்ணியம் செய்தவன். அதனால் அவளுக்கு மகனாகப் பிறந்திருக்கிறான். நீயோ சொற்பப் புண்ணியம் உடையவன்; அதனால் என் வயிற்றில் பிறந்திருக்கிறாய். எல்லாம் அவரவர் விதிப்படியே நடக்கிறது. ஆகையால் ஐச்வர்யத்தை நினைத்து துக்கப்படாமல் இருப்பாயாக. சுருசி சொன்னவற்றைக் கேட்டு உனது மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மை உண்டாவதற்கு புண்ணியச் செயல்களைச் செய். தர்மாத்மாவாக இரு; நல்ல நடத்தையுள்ளவனாக, எல்லா உயிர்களிடத்தும் கருணையுள்ளவனாக, எல்லா மனிதர்களிடத்தும் அன்புள்ளவனாக இரு. நல்லவற்றைச்  செய்து நல்லவனாக வாழ்ந்துவந்தால், தண்ணீர் பள்ளத்தை நாடிச் செல்வதுபோல் செல்வங்களும் குணவானான மனிதனிடத்தில் தானாகவே வந்து சேர்கின்றன” என்று சுநீதி நீதி கூறினாள்.
       அதைக் கேட்ட துருவன், “தாயே! நீங்கள் சொன்ன வார்த்தைகள் காயம்பட்ட என் இதயத்தில் பதியவில்லை. நான் மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய முயற்சி செய்யப்போகிறேன். என் அண்ணன் உத்தமனே என் தந்தையின் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். நான் என் சுயசக்தியினாலே அதைவிட உயர்ந்த பதவியை அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்றுமகிழாமல் நானே முயன்று, அரசபதவியைவிட மிகவும் உயர்ந்த பதவியை தவத்தினால் சம்பாதிக்கிறேன்!” என்று சொன்னான்.
    அன்னையின் அனுமதிபெற்று அரண்மனையிலிருந்து விரைவாகப் புறப்பட்ட துருவன், நாட்டைக் கடந்து அருகாமையிலுள்ள காட்டை அடைந்தான். அங்கே, ஸப்தரிஷிகள் எனப் பெயர்பெற்ற ஏழுமுனிவர்களைக் கண்டான். அவர்களை வணங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டான். மேலும், “முனிவர்களே! நான் ராஜ்யத்தையோ மற்ற பொருள்களையோ விரும்பவில்லை; ஆனால் இதுவரை ஒருவனாலும் அனுபவிக்கப்படாததாய், அபூர்வமானதாய், எல்லா நிலைகளுக்கும் மேலானதான ஒரு நிலையை நானடைய விரும்புகிறேன். அதற்கான உபாயத்தை அடியேனுக்கு அருளவேண்டும்” என்று வேண்டினான்.
  அவர்கள், “அச்சுதனான ஸ்ரீமந்நாராயணனை சரணாகதியடைந்து வேண்டியவர், வேண்டிய பதவியைப் பெறுவர். ஆகவே நீ கோவிந்தனை ஆராதிப்பாயாக. உலக விஷயங்களைப் பற்றிய ஆசைகளைவிட்டு, விஷ்ணுவின் திருவடிகளையே நினைத்து இந்த மஹாமந்த்ரத்தை ஜபம் செய்வாயாக” என உபதேசித்தனர்.
   ஸப்தரிஷிகளிடம் உபதேசம் பெற்ற துருவன் மனமகிழ்ந்து அவர்களை வணங்கிவிட்டு, யமுனை நதிக்கரையிலுள்ள மதுவனத்திற்குச் சென்றான். அங்கு மாமுனிவர்கள் உபதேசித்தவண்ணம் ஸ்ரீவிஷ்ணுவைத் தியானம் செய்யத் தொடங்கினான்.
  துருவன் தன் இடக்காலை ஊன்றி வலக்காலை மடித்தும், பின்னர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்தும், பின்னர் ஒரே பாதத்தில் கட்டைவிரலால் பூமியில் நின்றும் கடுமையாகத் தவம் செய்தான்.
  துருவனின் தவத்தைக் கண்டு கலக்கமடைந்த தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் பூதகணங்களை ஏவி துருவனின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான். பூதகணங்கள் துருவனின் தாயைப்போல உருமாறி அன்பாகப் பேசியும், பலவிதமான பயங்கரமான காட்டு விலங்குகளைப்போல உருமாறி பயமுறுத்தியும் துருவனின் தவத்தைக் கலைக்க முயற்சித்து, தோல்வியடைந்தன. துருவன் உறுதியான உள்ளத்துடன் ஸ்ரீமந் நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்து, வேறொன்றும் அறியாமல் இருந்தான்.
  தேவர்கள் மஹாவிஷ்ணுவிடமே சென்று வேண்டினர். ஸ்ரீவிஷ்ணு, “கவலைப்படாதீர்கள், உங்களுடைய எந்தப் பதவியையும் விரும்பி சிறுவன் துருவன் தவம் செய்யவில்லை. நீங்கள் கலக்கமடையாமல் உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள். நான் துருவனுக்கு இஷ்டமான வரத்தைக் கொடுத்து அவன் தவத்தை நிறுத்துகிறேன்” என்று அருளிச்செய்தார்.
   அதன்பின்னர் எல்லா உயிர்களிலும் உறைபவரான ஸ்ரீவிஷ்ணு பகவான், நான்கு திருத்தோளுடைய திருமேனியுடன் மஹாபாக்யசாலியான துருவன் முன்பு காட்சி கொடுத்து, “மகனே! உனக்கு நன்மை உண்டாகக்கடவது. நீ உனது மனத்தை என்மீது நிலையாக நிறுத்தியதால் நான் மகிழ்ந்தேன்; உனக்கு விருப்பமான வரத்தைக்கேள்!” என்றார்.
  துருவன் கண்குளிர பகவானின் திருவுருவத்தைத் தர்சித்து, அவர் திருவடிகளில் வீழ்ந்துவணங்கி, மெய்சிலிர்க்க, பக்தியுடன், “ஸ்வாமி! சிறுவனான எனக்கு உம்மை எவ்வாறு துதிப்பது என்று தெரியவில்லை. எனவே உம்மைப் பற்றிய ஞானத்தை எனக்கு அருள்வீராக” என பிரார்த்தித்தான். அவ்வாறே அருளிய பகவான், மேலும், “நீ வேண்டிய வரத்தைக் கேட்பாயாக” என்றார்.
   துருவன், “தேவதேவனே! அடியேனது விருப்பம் உமக்குத் தெரிந்தேஇருக்கும். எனது மாற்றாந்தாயான சுருசியானவள் தனது வயிற்றில் பிறவாததால் அரசபதவிக்கு நான் தகுந்தவனல்ல” என்று என்னைப் பார்த்து இறுமாப்புடன் ஏளனம் செய்தாள். ஆகையால் உலகிற்கு ஆதாரமும் எல்லாவற்றிற்கும் மேலானதும் அழிவற்றதுமான ஓர் உன்னதநிலையை அடைய நான் விரும்புகிறேன். திருவருள் புரிய வேண்டும்!” என வேண்டினான்.
    ஸ்ரீபகவான் துருவனை கருணை நிறைந்த கண்களால் பார்த்து, “பாலனே! நீ விரும்பிய பதவியை அடைவாய். மூன்று உலகங்களுக்கும் மேன்மையானதாக, எல்லா கிரக, நக்ஷத்ரங்களுக்கும் ஆதாரமானதாக, ஸப்தரிஷி மண்டலத்திற்கும் சித்தர்கள் ஸஞ்சரிக்கும் ஸ்தானங்களுக்கும் மிக மேலானதாதத் திகழும் ஸ்தானத்தை அடைந்து கல்பகாலம் வரையிலும் சுகமாக இருப்பாயாக. உன் தாயான சுநீதியும் நக்ஷத்ரரூபமாக கல்பாந்தம் வரையிலும் உன் அருகிலேயே இருப்பாள். ‘துருவ நக்ஷத்ரமாகத்’ திகழும் உன்னை யார் அதிகாலையிலும் மாலையிலும் வணங்குகிறாரோ அவர் மஹாபுண்யத்தைப் பெறுவார்” என்று அருளினார்.
     இவ்விதமாக, சிறுவனாக இருந்தாலும் மனவுறுதியுடன் கடுந்தவம் செய்து வேண்டிய வரம் பெற்று மிக உயர்ந்த நிலையை அடைந்தான் துருவன்.

                      வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
                       ஈண்டு முயலப் படும்.
                          - திருக்குறள்: 265

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101