அடக்கம் உடைமை

    ஓர் அரசனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அரசன் சிறந்த கல்விமான். அவன் தம் பிள்ளைகள் நால்வரையும் கல்வி கற்றுக்கொள்ள ஒரு குருவினிடம் அனுப்பினான்.
      பிள்ளைகளுள் நான்காமவன் நாபாகன் படிப்பில் அதிக ஈடுபாடு உடையவன். அதனால் அவன் தன் குருவின் மனம் கோணாதபடி நடந்து வந்தான். குருவும் அவனைப் பாராட்டி அவனுக்கு நன்றாகக் கல்வி கற்றுக் கொடுத்தார்.
  நாபாகன் சுறுசுறுப்பாகப் படித்து வந்தான். மற்ற மூவரும் ஓரளவு படித்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். நாபாகன் மட்டும் படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து ஆர்வமுடன் படித்துவந்தான்.
  ”நாபாகன் படிப்பிலேயே கவனமாக இருக்கிறான். ஆகையால் இனிமேல் அவன் வரமாட்டான், குருகுலத்திலேயே தங்கிவிடுவான்” என்று அவனுடைய சகோதரர் மூவரும் தந்தையிடம் கூறினர். அரசன் இருந்த சொத்துக்களை மூவருக்கும் பகிர்ந்து கொடுத்தான்.
  சில வருடங்களுக்குப் பிறகு நாபாகன் படிப்பை முடித்து வீட்டிற்குத் திரும்பினான்.
   தன் அண்ணன்மார்கள் பாகம் பிரித்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்து “எனக்கு என்ன பாகம் வைத்தீர்கள்?” என்று கேட்டான்.
   மற்ற மூவரும் சேர்ந்து ஆலோசித்து “உன் தந்தையையே உனக்குப் பாகமாக வைத்தோம்” என்றனர்.
  நாபாகன் தந்தையிடம் சென்று தன் அண்ணன்மார்கள் சொன்னதைச் சொன்னான்.
  தந்தை, அவர்கள் திட்டமிட்டு நாபாகனை ஏமாற்றிவிட்டதை உணர்ந்தார். அவர்களை வெறுத்தார். செய்வதறியாது திகைத்தார். நாபாகனைப் பார்த்து   “மகனே, நீ வருத்தப்படாதே. உன்னிடம் கல்விச் செல்வம் இருக்கிறது. அது  அழியாதது. சகோதரர்களால் பங்கு போட்டுக்கொள்ள முடியாதது. திருடர்களால் திருடமுடியாதது. கற்றவனுக்கு செல்லும் இடமெங்கும் சிறப்புண்டு. அது உன்னைக் காக்கும்; உனக்கு வாழ்வளிக்கும். நீ நான் சொல்கிறபடி செய். ரிஷிகள் யாகம் செய்கிறார்கள். நீ அங்கே போய்ப் பார். அவர்கள் பலசமயங்களில் தவறாக மந்திரம் சொல்கிறார்கள். அந்த மந்திரம் உனக்குத் தெரியும். நீ அவர்களுக்கு சொல்லிக் கொடு. அவர்கள் உன் மீது விருப்பம் அடைவார்கள். யாகம் முடிந்ததும் அதில் மிச்சமாகும் பொருளை உனக்குக் கொடுப்பார்கள். நீ அதைப் பெற்றுக்கொண்டு சுகமாயிரு” என்றார்.
  நாபாகன் கோபத்தையும் வருத்தத்தையும் விட்டான். தன் தந்தையின் சொற்படியே யாகங்களுக்குப் போனான். ரிஷிகளுக்குத் தெரியாமல் இருந்த மந்திரங்களைக் கற்றுக்கொடுத்தான். ரிஷிகள் மகிழ்ச்சியடைந்து யாகம் முடிந்ததும் அதில் மிகுதியாயிருந்த பொருட்களை நாபாகனுக்குக் கொடுத்தனர்.
  ஒருநாள் நாபாகன் அவ்வாறு பொருட்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு பெரியவர் எதிர்ப்பட்டார். அவர் நாபாகனை நிறுத்தி “யாகத்தில் மிஞ்சும் பொருள் என்னைச் சேர்ந்தது. அதை நீ எப்படிக் கொண்டு போகிறாய்?” என்று கேட்டார்.
  நாபாகன் இது எனக்குக் கொடுக்கப்பட்டது என்று மறுத்துக் கூறினான். பெரியவர் விடவில்லை,  அது தனக்குச் சேரவேண்டியது  என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியாக நாபாகன் “சரி, அப்படியானால் என் தந்தையைக் கேட்போம். அவர் சொல்கிறபடி நடப்போம்,” என்று சொல்லி அவரைத் தன் தந்தையிடம் அழைத்துக்கொண்டு போனான்.
  அரசன் நடுநிலை தவறாதவன். ஆகையினால் அவர்கள் வழக்கைக் கேட்டு ஆலோசித்து “யாகத்தில் மிஞ்சும் பொருள் ருத்ரமூர்த்தியைச் சேர்ந்தது. இவர் ருத்ரமூர்த்தியானால் இந்தப் பொருள் இவரைச் சேர்ந்ததுதான்” என்றான்.
பெரியராக வந்தது ருத்ரமூர்த்தியாகிய சிவபெருமான்தான். உடனே அவர் தன் சொரூபத்தைக் காட்டினார். நாபாகன் அவரை வணங்கி அவர் பாதத்திலே பொருளை வைத்தான்.
    ருத்ரமூர்த்தி மகிழ்ச்சிகொண்டு நாபாகனை ஆசிர்வதித்து “நாபாகா! நீ நன்றாக சாஸ்த்ரங்கனளப் படித்தாய். படித்தவன் என்பதற்கு அடையாளமாக கோபத்தை விட்டு உன் தந்தை சொல்கேட்டு நடந்தாய். அதனால் உன் மீது எனக்குக் கருணை உண்டாயிற்று. நீ நல்லவன்; குற்றமற்றவன். உனக்கு ஒரு குறையும் வராது. உன் வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருளும் கொடுத்தோம், சுகமாயிரு!” என்று கூறி மறைந்தார்.
    பிறகு நாபாகன் தனது அண்ணன்மார்களைவிட மேலான செல்வம்பெற்று சுகமாக வாழ்ந்தான்.

                      கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
                      அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
                                                                                  - திருக்குறள் 130

    கோபத்தைக் கட்டுப்படுத்தி, கற்கவேண்டிய நூல்களை நன்கு கற்று, அடங்கி வாழ்பவனிடம் உரிய வழிகளைப் பார்த்து தர்மதேவதை சென்றுசேரும்.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101