அழுக்காறாமை

    ஓர் ஊரில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர்.  அண்ணன்  நல்ல குணங்கள் மிகுந்தவன்.  தர்மவான்.  தன்னைத் தேடி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்வான்.   தம்பியோ அண்ணனுக்கு நேர்எதிரான குணங்கள் உள்ளவன்.  வடிகட்டிய கஞ்சன். பேராசைக்காரன்.  பொறாமைபிடித்தவன்.  தம்பியின் மனைவியும் அவனைப்போலவே இருந்தாள்.
   ஒருசமயம் அண்ணனின் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டது. வறுமை அடைந்தான்.  உணவுக்கே கஷ்டமானது.  அப்பொழுது முதியவர் ஒருவர் அண்ணன் வீட்டிற்கு வந்தார்.
   “நான் வெகுதூரத்திலிருந்து வருகிறேன். மிகவும் பசிக்கிறது. தயவுசெய்து உண்பதற்கு ஏதாவது கொடுங்கள்” வேண்டினார் முதியவர்.
தன்சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்த அண்ணனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.  உடனே தன் மனைவியின் தாலியை விற்றோ, அடகு வைத்தோ பணம் புரட்டலாம் என்று மனைவியின் தாலியைப் பெற்று வெளியில் சென்றான்.
   அதையெல்லாம் கிழவரும் கவனித்தார்.  அவர் அண்ணன் மனைவியை அழைத்து, “நான் குளித்த பிறகுதான் உணவு உண்பேன், எனக்கு குளிக்க வெந்நீர் தரமுடியுமா?” எனக் கேட்டார். “சரி, போட்டுத் தருகிறேன்” என்று சொல்லி விறகடுப்பில் பெரிய அண்டாவில் வெந்நீர் காயவைத்தாள் அண்ணன் மனைவி.
   வெளியில் சென்ற அண்ணன் சமையலுக்குத் தேவையான பொருட்களுடன் திரும்பி வந்தான். 
   குளிப்பதற்குத் தயாரான முதியவர் இருவரையும் கூப்பிட்டு, “என்னைத் தூக்கி வெந்நீர் அண்டாவுக்குள் இறக்குங்கள்” என்றார். அதிர்ந்துபோன அவர்கள் தயங்கி நின்றனர்.
   “பயப்படாதீர்; எனக்கு ஒன்றும் ஆகாது, நான் சொன்னதுபோல் செய்யுங்கள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பெரியவர். வேறுவழியின்றி கடவுளை நினைத்து கிழவரை அண்டாவுக்குள் துாக்கிப் போட்டனர் கணவனும் மனைவியும்.
   குழந்தையைப்போல் விளையாடி ஆனந்தமாகக் குளித்துவிட்டு வந்தார் பெரியவர்.
   உணவு தயாராய் இருந்தது. வயிறு நிறைய உண்டுவிட்டு, “உங்கள் துன்பங்கள் எல்லாம் இன்றோடு முடிந்தன, ஆனந்தமாக இருங்கள்”  வாழ்த்திச் சென்றார் முதியவர்.
   பெரியவர் சென்றபிறகு, ‘வெந்நீர் அண்டாவை விளக்கி வைக்கலாம்’ என அண்டாவைக் கையில் எடுத்த அண்ணன் மனைவி ஆச்சர்யத்தில் திகைத்து நின்றாள். அண்டாவில் முத்தும் பவளமுமாக நவமணிகள் பளபளத்துக் கொண்டிருந்தன.
  மிகவும் மகிழ்ந்துபோன கணவனும் மனைவியும் இறைவனுக்கு நன்றி சொல்லி, அவற்றைக் கொண்டு வறுமையைப் போக்கி, வழக்கம்போல் தான தர்மங்கள் செய்து நிறைவுடன் வாழ்ந்து வரலாயினர்.
   இதைக் கேள்விப்பட்ட தம்பியும் அவன் மனைவியும் அண்ணனைப்போலத் தாங்களும் பணக்காரராக வேண்டும் என எண்ணினர்.
   தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு  பிச்சைக்காரக் கிழவரைச் சாப்பாடு போடுவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சாப்பிடுவதற்குமுன் குளிக்கவேண்டுமெனக்கூறி அவரை வெந்நீர் அண்டாவுக்குள் தூக்கிப் போட்டனர்.  இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பிச்சைக்காரர் உடம்பெல்லாம் வெந்நீரால் வெந்துபோக “அய்யோ! அம்மா!” என்று அலறி, துள்ளி எழுந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார்.
   தன்னைக் கொல்ல முயற்சித்ததாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
தங்களிடம் இருந்த செல்வத்தையும் இழந்து சிறையில் அடைபட்ட  அவர்கள், பொறாமையால் தங்களுக்கு விளைந்த அவலத்தை நினைத்து தாங்கொணா துன்பத்தை அனுபவித்தனர்.

                         அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
                         தீயுழி உய்த்து விடும்
                                                                         -- திருக்குறள் 168

    பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி செல்வத்தை அழித்து நரகத்தில் கொண்டுவிடும்.  


Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101