கட்டுப்பாடும் சுதந்திரமும்

    தாய் குழந்தையைக் கட்டுப்படுத்துகிறாள். பெரியவர்கள் சிறியவர்களைக் கட்டுப்படுத்துகின்றனர். ஆசிரியர் மாணவனைக் கட்டுப்படுத்துகிறார். முதலாளி தொழிலாளியைக் கட்டுப்படுத்துகிறார். மதம், ஸமுதாயம், சட்டம் ஆகியவை ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்படுத்துகின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்புவரை கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ஆனால் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்பது ஒவ்வோர் உயிரின் பிரகடனமாகவும் இருக்கிறது. அப்பொழுது கட்டுப்பாடு என்பது எதற்கு?
    சுதந்திரதாஹமுள்ள ஓர் இளைஞன் சாலையில் ஒழுங்கின்றி குறுக்கும் நெடுக்குமாக சென்றுகொண்டிருந்தான். சாலைவிதிகளைப் பின்பற்றுவது மூடத்தனம், அடிமைத்தனம், தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பது அவன் கருத்து.
    அவனது தாறுமாறான பயணத்தைத் திட்டிச் சென்றனர் சிலர். வேடிக்கை பார்த்துச் சென்றன குழந்தைகள். தங்களது திறமையால் விபத்தைத் தவிர்த்துச் சென்றனர் சிலர். எதிர்பாராத ஸமயத்தில் எதிர்பார்த்திருந்த விபத்து நடந்தது. விதிமீறிப் போனவனை விதி கொண்டு போயிற்று. அந்த கறுப்புச் சட்டைக்காரன் உடலை வெள்ளைத்துணி போர்த்தி எடுத்துச் சென்றனர். எனில் சுதந்திரம் என்பது என்ன?
    சாலைவிதிகள் தடையற்ற வாஹன போக்குவரத்திற்கு இன்றியமையாதன. சாலைவிதிகளைக் கட்டுப்பாடாக தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதாக நினைக்காமல் அவற்றின் அவச்யத்தை உணர்ந்து அவனாகவே ஒழுங்குடன் நடந்திருக்கலாம். அல்லது சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தாவது சாலைவிதிகளைப் பின்பற்றியிருக்கலாம்.
    தர்மம், சட்டம் ஒழுங்கென்பது தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பது அல்ல காப்பது. எவனொருவன் சட்டம் ஒழுங்கை மீறுகிறானோ அவனது சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஒரு மனிதன் சுயநலத்தினால் இன்னொருவனுடைய சுதந்திரத்தில் குறுக்கிடும்பொழுது சட்டம் குறுக்கிட்டு இவனது சுதந்திரத்தைப் பறிக்கிறது. எனவே ஒருவன் தன் சுதந்திரத்தை இழக்காமல் இருக்க மற்றவருடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும்.
    விவேகமுள்ள ஒரு மனிதன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறான். நல்ல பண்புகளையும், பழக்கவழக்கங்களையும், ஒழுக்கத்தையும், சமூகவிதிகளையும், சட்டத்தையும் கட்டுப்பாடுகளாக, தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதாக நினைப்பதில்லை. விலங்குகளுக்கு விதிமுறைகள் ஏதுமில்லை. சாஸ்த்ரங்களும் ஸம்ப்ரதாயங்களும் இல்லை. எனில் சாஸ்த்ரங்களும் சட்டங்களும் மனிதர்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. தனிமனித நலனுக்காகவும் சமூகத்தின் சீரான இயக்கத்திற்காகவும் இயற்றப்பட்டவை.
    ‘தர்மம் சர’ ‘ஸத்யம் வத’ ‘அறம் செய விரும்பு’ ‘பொய்யற்க’ என்று மறைநூல்கள் ஆணையிட்டாலும் இவை நமக்கு நாமே இட்டுகொள்ளவேண்டிய கட்டளைகள்; சாஸ்த்ரம் நமக்கு அவற்றை எடுத்துத் கொடுக்கின்றன, அறிவுறுத்துகின்றன என்றே விவேகமுள்ளவன் எண்ணுகிறான்.
    கல்வி கேள்வி வாயிலாக முறையாகக் கற்றவன் குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நாணுடைமை, குடிசெயல்வகை போன்ற குடிமைப் பண்புகளை முயற்சியுடன் பயிற்சி செய்து அவற்றைத் தன் இயல்பாக்கிக் கொள்கிறான்.
    இயல்பாகவே உண்மைபேசுவதில் விருப்பமுள்ளவனுக்கு ‘பொய் பேசாதே’ என்பது கட்டுப்பாடாகத் தெரிவதில்லை. அதர்ம நாட்டமுள்ளவனே அவ்வாறு கருதுகிறான். தன் விருப்பு வெறுப்பினால் சமூகக் கட்டுப்பாட்டை மீறி அவன் பொய் சொல்கின்றபொழுது சமூகத்தால், சட்டத்தால் அவன் கண்டிக்கவும் தண்டிக்கவும் படுகிறான். தண்டனைக்குட்படும்பொழுது அவன் சுதந்திரம் பறிபோகிறது. அப்பொழுது அவனது சுதந்திர இழப்பிற்கு அவனே காரணமாய் இருக்கிறான். தவறு செய்யும் குழந்தையே பெற்றோரால் ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறது. ஒழுக்கமுள்ள குழந்தை அல்ல.
    எவன் தன்னை வென்றவனோ அவன் தனக்குத் தானே நண்பனாயிருக்கிறான். தன்னை வெல்லாதவன் தனக்குத்தானே எதிரியைப்போல் இருக்கிறான்.
                                                                               - ஸ்ரீமத் பகவத்கீதை 6:6
    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.                        - திருக்குறள் 121
    சுயகட்டுப்பாடுள்ள மனிதன் தன்னைத்தான் வென்றவன் ஆகிறான். அவனே எப்பொழுதும் சுதந்திரவானாக இருக்கிறான். அவனுக்கு சமூகத்தைக் கண்டு சட்டத்தைக் கண்டு அச்சமில்லை. மாறாக கீழான குணங்களுள்ளவன் அச்சத்தினாலேயே ஆசாரமுடையவனாக வாழ்கிறான். அச்சமின்றி ஆசாரத்தை மீறுபவன், கட்டுப்பாடற்று வாழ்பவன் ஆரம்பத்தில் சுதந்திரவானாக தெரிந்தாலும் காலப்போக்கில் உலக விஷயங்களுக்கு அடிமையானவன் ஆகிறான். அந்த அடிமைத்தனம் மேலும் பல விதிமீறல்களை - தவறுகளைச் செய்யச் செல்கிறது. விதிமீறலால் அவன் தன் சமூக சுதந்திரத்தை முற்றிலும் இழக்கிறான். பின் அச்சத்துடனே அவன் வாழ்வு செல்கிறது.
    எனவே, சுதந்திரம் என்பது சுயகட்டுப்பாட்டுடன் வாழ்வது. கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் வாழ்வது அல்ல.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101