Hindumatha Dharma Vilakkam - Chapter 16
ஹிந்துமத தர்ம விளக்கம்
பாடம் - 16
கர்மம்
கர்மம் என்றால் வினை, செயல். செயலை செய்ய உதவும் கருவி கரணம் எனப்படும். அவற்றுள் முக்கியமானவை மூன்று. மனம், வாக்கு, காயம் (உடல்). இவை திரிகரணங்கள் எனப்படும். இவற்றால் செய்யப்படும் கர்மங்கள் முறையே மானஸிகம், வாசிகம், காயிகம் எனப்படும். அக்கர்மங்கள் இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை. இவற்றின் பயன்கள் முறையே நன்மை, தீமை - புண்யம், பாபம் - எனப்படும்.
பகவத்கீதையில் பகவான் கர்மத்தையும், விகர்மத்தையும், அகர்மத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறார்.
கர்மத்தின் பிரிவுகள்
நல்வினை, தீவினை எவை என்பது சாஸ்த்ரங்களில் விதி, நிஷேதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
விதிகள்
செய் என்று விதிக்கப்பட்டவை விதிகள், அதாவது நல்வினைகள். அவை நான்கு பிரிவுகளாக உள்ளன.
1.நித்யம், 2.நைமித்யம், 3.காம்யம், 4. பிராயச்சித்தம்.
1.நித்யகர்மா
நாள்தோறும் செய்யவேண்டியவை. அவை ஜபம், தியானம், பூஜை, பாராயணம், படித்தல் போன்றவை. இவை பஞ்சமஹாயஜ்ஞம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
உடல் ஆரோக்யமாகவும், பலம் பொருந்தியதாகவும் இருக்க, தினசரி குளிப்பது, உடற்பயிற்சி செய்வது போல, மனம் தூய்மையானதாகவும் வலிமை உடையதாகும் இருப்பதற்கு இவை அவசியம் செய்யப்பட வேண்டியவை.
2.நைமித்திகம்
நிமித்தம் ஏற்படும்போது செய்யப்படுபவை நைமித்திகம். அமாவாசை, கிரகண காலங்களில் செய்யப்படும் தர்ப்பணம் ச்ராத்தம், ஜபம் போன்றவை.
3.காம்யம்
ஒரு விருப்பத்தை - ஆசையை - தேவையை முன்னிட்டு செய்யப்படுவது காம்யம். புத்ரகாமேஷ்டி போன்றவை. இதனால் ஒரு புண்ணியம் ஏற்பட்டு அதனால் விரும்பியது நிறைவேறும்.
4.ப்ராயச்சித்தம்
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாபத்தை நீக்குவதற்காக செய்யப்படுவது. நித்ய, நைமித்திக கர்மாக்களை செய்யாமல் விடுவதாலும், நிஷித்த கர்மத்தை செய்வதாலும் பாபம் ஏற்படும்.
விரதமிருத்தல், தானம் கொடுத்தல் போன்றவை.
நிஷித்த கர்மா - தீவினை
இது பாதகம் என்றும் சொல்லப்படுகின்றது. பாதகம் மனிதனைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது.
இது மஹாபாதகம், ஸமபாதகம், உபபாதகம் என்று மூன்று விதம்.
மஹாபாதகங்கள்
கொலை செய்தல், கள்ளுண்ணல், தங்கத்தை திருடுதல், குரு மனைவியுடன் கூடல், இவை நான்கும் செய்பவர்களுடன் சினேகம் கொண்டிருத்தல். இவை ஐந்தும் பஞ்ச மகாபாதகங்கள் எனப்படுகின்றன.
ஸமபாதகங்கள்
இவை மஹாபாதகங்களுக்குச் ஸமமானவை.
குருவை அவமதித்தல், வேதசாஸ்த்ரங்களை நிந்தித்தல், மறந்துவிடுதல் இவை கொலைக்கு ஸமமானவை.
உண்ணக்கூடாததை உண்ணணுதல், கபடமாகப் பேசுதல், பொய் பேசுதல், பொய்சாட்சி சொல்லுதல் போன்றவை மது அருந்துதலுக்கு ஸமமானவை.
குதிரை, ரத்னம், மனிதன், பெண், பூமி, பசு, அடைக்கலம் வைத்த பொருள் இவற்றை அபகரித்தல் தங்கம் திருடுதலுக்கு ஸமமானவை.
நண்பனின் மனைவி, மகள், உறவுப்பெண், ஸமகோத்திரத்தில் பிறந்த பெண், மருமகள் இவர்களுடன் கூடுதல் குருபத்னியை கூடுதலுக்கு ஸமமாகும்.
உபபாதகங்கள்
பசுவதை, விதித்த கர்மங்களை செய்யாதிருத்தல், கடனைத் தீர்க்காமல் மோசம் செய்தல், திருடுடல், ப்ராணிகளை வதம் செய்தல், சட்டவிரோதமான செயல்களைச் செய்தல், நாஸ்திகனாக இருத்தல், விரதங்களை முடிக்காமல் பாதியில் விட்டுவிடுதல், மகன் மகள் மனைவி விற்றுவிடல், பொதுத்தடாகம், நந்தவனம் போன்றவற்றை விற்றல், பிறர் உணவை உண்டு பருத்திருத்தல், அரசுநிதியைத் திருடல், கடமை தவறுதல் போன்றவை உபபாதகங்கள்.
விதித்த கர்மங்களை - நல்வினைகளைச் - செய்தல் புண்ணியத்தையும், நிஷித்த கர்மங்களை - தீவினைகளைச் - செய்தல் பாபத்தையும் உண்டுபண்ணும்.
புண்ணியத்தினால் இன்பமும் பாபத்தினால் துன்பமும் அனுபவிக்கப்படுகிறது.
ஒருமூட்டை நெல் பலமூட்டை நெல்மணிகளை உண்டுபண்ணுவது போல, ஒரு பிறவியில் செய்த வினையின் பயன் கிரமமாக பலபிறவிகளில் அனுபவிக்கப்படுகின்றது.
செயலைத் தூண்டும் எண்ணங்கள்
வினைப்பயன்கள் வாஸனைகளாக மனதில் சேர்ந்திருந்து, அவ்வப்பொழுது எண்ணங்களாக வெளிப்படுகின்றன. அவை பதினாறு விதமாக இருக்கின்றன.
அவை :
1. ராகம் (ஆண், பெண் விருப்பம்),
2. த்வேஷம் (தீங்கு செய்தோருக்கு தீங்கு செய்யும் எண்ணம்),
3. காமம் (வீடு, நிலம், பெண் போன்ற போக விஷயங்களை அடையவேண்டுமென்ற விருப்பம்),
4. குரோதம் (காமத்தில் தடை ஏற்பட்டால் ஏற்படும் வெறுப்பு),
5.லோபம் (அடைந்த பொருளின் மேலுள்ள பற்று),
6. மோகம் (தர்மாதர்ம அறிவு மயக்கம்),
7. மதம் (தன்னால், தன்பொருளால் செய்யமுடியாதது ஒன்றுமில்லை என்ற இறுமாப்பு),
8. மாத்ஸர்யம் (பிறர் சிறப்புப் பொறுக்க முடியாமை),
9. ஈர்ஷியை (பிறரிடம் இல்லாத துன்பம் எனக்கு மாத்திரம் வந்ததே என்ற எரிச்சல்) ,
10.அஸுயை (தன் துன்பம் பிறர்க்கில்லையே என்ற சிந்தை),
11.தம்பம் (தர்மத்தினால் புகழ் வேண்டுமென்ற எண்ணம்),
12. தர்ப்பம் (எனக்குச் சமமானவன் இல்லை என்ற எண்ணம்),
13. அகங்காரம் (நான் செய்கிறேன் என்ற எண்ணம்),
14. இச்சை (பசி, தாஹம் போன்றவற்றை ஆஹாரம் முதலியவற்றால் போக்கவேண்டுமென்ற விருப்பம்),
15. சிரத்தை (சாஸ்த்ரத்திலும் குருவுபதேசத்திலுமுள்ள நம்பிக்கை),
16. பக்தி (தாய், தந்தை, பெரியோர், நல்லவர், குரு, கடவுள் இவர்களிடம் உள்ள அன்பு).
ராகம் முதல் அஹங்காரம் ஈறாகவுள்ள பதிமூன்றும் தீவினையைத் தூண்டும் மாசுகள். இவை நீக்கப்பட வேண்டியவை.
(மனத்துக்கண் மாசிலன் ஆதல்… திருக்குறள்)
இச்சை சரீரம் உள்ளவரை இருக்கும்.
ச்ரத்தா, பக்தி இரண்டும் விரும்பி முயற்சியுடன் வளர்த்துக் கொள்ளவேண்டியவை.
கர்மங்களின் விளைவு பிறவிகள். ஆகவே, கர்மங்களுக்கேற்ப ஏற்படும் பிறவிகளின் வகைகளை இனிப் பார்க்கலாம்.
கர்மமும் பிறப்பும்
பலவித பிறவிகள்
"சத்துவ குணம் உள்ளவர்கள் தேவர்கள் ஆகவும், ரஜோ குணம் உள்ளவர்கள் மனிதர்களாகவும், தமோ குணம் உள்ளவர்கள் பசு பக்ஷி மரம் செடி கொடி முதலியனவாகும் பிறக்கிறார்கள்."
- பகவத் கீதை அத்தியாயம் 14.18.
"புண்ணியத்தினால் அடையப்படுவது தேவ சரீரம்; பாபத்தினால் அடையப்படுவது விலங்கு, தாவர சரீரம். இரண்டும் கலந்த மிச்ரத்தினால் அடையப்படுவது மனுஷ்ய சரீரம்.
- வாசுதேவ மனனம், வர்ணகம் 5.
இதனால் கர்மம் மூன்று வகைப்படும். புண்ணியம், பாபம், மிச்ரம். ஒவ்வொன்றும் உத்தமம், மத்யமம் அதமம் என்ற ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. ஆகவே புண்ய உத்தமம், புண்ய மத்யமம், புண்ய அதமம், பாபோத்தமம், பாபமத்யமம், பாபாதமம் மிச்ரோத்தமம், மிச்ரமத்யமம், மிச்ராதமம் என்று கர்மம் ஒன்பது வகைப்படுகிறது. இம்மாதிரியான கர்மங்களின் பிரிவுகளினால் பிறவிகளும் பல வகைப்படுகின்றன.
புண்யப்பிறவிகள்
புண்யோத்தமம் - பிரம்மா, மனுக்கள், ஸப்தரிஷிகள்…
புண்யமத்யமம் - இந்திரன் முதலான தேவர்கள்
புண்யாதமம் - யக்ஷர், கின்னரர், ஸித்தர்…
பாபப்பிறவிகள்
பாபோத்தமம் - விஷவிருக்ஷங்கள், முள் மரங்கள்; புலி, கரடி, சிங்கம் முதலிய துஷ்ட மிருகங்கள்; பாம்பு தேள் முதலிய துஷ்டஜந்துக்கள்.
பாபமத்யமம் - மா பலா தென்னை முதலிய மரங்கள்; பழம், பூ இலைகளினால் பிற உயிர்களுக்கு உபயோகமாக இருக்கின்ற செடிகொடிகள்; எருமை, கழுதை, பன்றி முதலிய விலங்குகள்.
பாபாதமம் - ஆல், அரசு, புரசு, வில்வம் போன்ற மரங்கள்; துளசி, அருகு, போன்ற செடிகள் பசு, குதிரை போன்ற விலங்குகள்.
மிச்ரோத்தமம் - ஞானம் அடைய வேண்டும், மோக்ஷம் அடைய வேண்டும் ஆகிய விருப்பத்தோடு தர்மத்தையும், ஆன்மிக சாதனைகளையும் தீவிரமாகக் கடைப்பிடிக்கின்ற மனிதர்கள்.
மிச்ரமத்யமம் - தர்மமாக வாழ்க்கையோடு கர்மயோகம் ஆக சமூக நலனிலும் அக்கறை கொண்டு பரோபகாரமாக வாழ்கின்ற மனிதர்கள்.
மிச்ராதமம் - தேகமே ஆத்மா, போகமே மோக்ஷம் என்று பசு, பறவைகள் மிருகங்களை வதைத்து, மாமிசங்களை உண்டு, உலக சுகத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, வாழ்கின்ற மனிதர்கள்.
உணவின்றி நம்மால் உயிர்வாழ முடியாதாகையால் ஜீவ ஹிம்சை குறைவாக இருக்கின்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு பழுத்து உதிர்ந்த பழங்கள், உதிர்ந்து உலர்ந்த தானியங்கள் இப்படி… விதைகள் தானியங்களிலும் உயிர் இருக்கின்றது என்றாலும் அது விரிவடையாமல் இருப்பதால் ஹிம்சை குறைவு. தாவரங்கள் ஓரறிவு உயிரினங்கள். ஆகவே ஐந்தறிவுடைய உயிரினங்களை விட அவற்றிற்குக் துன்பம் குறைவு.
மேலும் தாவரங்கள் பழம், காய், பூ போன்றவற்றை உற்பத்தி செய்வது உயிரினங்கள் அவற்றை உண்டு அவற்றின் விதைகளை பல இடங்களுக்கு பரவச்செய்வதன் மூலம் தங்கள் இனத்தை விருத்தி செய்துகொள்வதற்காகவே.
மனித உடலிலிருந்தே ஜீவன் புண்ணிய, பாபங்களிலிருந்து விடுபட்டு, பிறவா நிலையை அடைய முடியும். பாபங்களை குறைத்துக் கொள்வதும், புண்ணிய கர்மங்களை மிகுதியாக செய்வதும், பலனை விரும்பாமல் கர்மயோகமாக மனத்தூய்மைக்காக கர்மங்களைச் செய்வதும், பிறகு ஆத்ம ஞானத்தின் வாயிலாக மோட்சத்தை அடைவதும் மனித பிறவியில் இருந்தே ஸாத்தியம். ஆகவே தேவர் முதலான எல்லா பிறவிகளைக் காட்டிலும் மனிதப்பிறவி மேலானது.
.
Comments