Hindumatha Dharma Vilakkam - Chapter 15
🕉️
ஹிந்துமத தர்ம விளக்கம்
பாடம் 15
(01.10.2020)
வித்யா ஸ்தானங்கள்
இனி, ஸநாதன தர்மம் என்ற ஹிந்து மதத்துக்கு பிரமாணமாக - ஆதாரமாக - இருக்கக்கூடிய நூல்களைப் பற்றி பார்ப்போம். அவை சாஸ்த்ரங்கள் எனப்படுகின்றன. (அறிவைக் கொடுத்து ஜீவனைக் காப்பாற்றுவது என்பது பொருள்.)
வேதங்கள்
நான்கு : ரிக், யஜுர், ஸாம, அதர்வணம்.
1.ரிக் (புகழ்த்தும்) வேதம்
யாக கிரியைகளைப் பற்றிச் சொல்வது. இதை அறிந்து ஹோமம் செய்பவன் ஹோதா எனப்படுவான்.
2.யஜுர் (மகிழ்விக்கும்)
வேதம்
யாக தேவதைகளை அழைத்தல் துதித்தல், யாகசாலை அமைப்பு விவரம், ராஜஸூயம், அச்வமேதம் போன்ற யாக விவரணம், தினசரி செய்யவேண்டிய ஔபாஸனம், அக்நிஹோத்ரம் முதலிய விஷயங்கள். இவற்றை அறிந்து யாகத்தை நடத்துகிறவன் அத்வர்யு.
3.ஸாமம் (துக்கத்தைப் போக்கும்) வேதம்
யாக அதிஷ்டான தேவதையாகிய இறைவனை துதிக்க வேண்டிய கிரியைகள்.
ஸாமகானம் செய்பவன் உத்காதா.
4.அதர்வணம் (நன்மை பயக்கும்) வேதம்
ஹோதா, அத்வர்யு, உத்காதா இவர்களால் ஏற்படும் தவறுகளை நிவிர்த்திக்கின்ற கிரியைகளைச் சொல்வது. அரசனுக்கு ஏற்படும் ஆபத்துக்களை நிவர்த்தி செய்யவும், உலகத்திற்கு துரபிக்ஷத்தைப் போக்கி சுபிக்ஷத்தை உண்டு பண்ணவும், எதிரிகளை ஓட்டுவதற்கு பூதங்களை உண்டு பண்ணவும், ஸாதனமான பலவிதமான கிரியைகளைக் கூறுகின்றது. இதை அறிந்து செய்பவன் பிரம்மா எனப்படுகிறான்.
ரிக் வேதத்திற்கு பிருகஸ்பதியும், யஜுர் வேதத்திற்கு சுக்கிரனும், ஸாமவேதத்திற்கு அங்காரகனும், அதர்வண வேதத்திற்கு புதனும் அதிபதிகள்.
வேதங்களில் அமைப்பு
ரிக் வேதம் 21, யஜுர் வேதம் 100, சாமவேதம் ஆயிரம், அதர்வ வேதம் 9 சாகைகளைக் கொண்டது.
இவற்றுள் மந்திரங்கள், விதிகள், நிஷேதங்கள் அர்த்த வாதங்கள் இருக்கின்றன.
மந்த்ரங்கள்
ஜபம், ஹோமம், ஸ்துதி, தானம், ஆராதனம், யாகம் போன்றவற்றைச் செய்யும் காலங்களில் உச்சரிக்க கூடியவை மந்திரங்கள்.
மனனம் செய்பவனைக் காப்பாற்றுவது மந்திரங்கள்.
விதிவாக்யங்கள்
சத்தியம் பேசு; வத தர்மம் செய்; தினந்தோறும் சந்தியா தேவியை உபாசனை செய்; ஜீவன் உள்ளவரை அக்னிஹோத்ரம் செய்; வேதத்தை அத்யயனம் செய் போன்ற ஸத் காரியங்களில் நியமனம் செய்கின்றவை விதிவாக்யங்கள் எனப்படும். விதி என்றால் விதித்தல் ஏவுதல் என்று பொருள்.
நிஷேத வாக்யங்கள்
கள் குடியாதே; பிறர் மனைவியிடம் செல்லாதே போன்றவை நிஷேத வாக்கியங்கள். நிஷேதம் என்றால் தடுத்தல்.
அர்த்தவாத வாக்யங்கள்
விதித்த கர்மங்களை துதித்தும் நிஷேதித்த கர்மங்களை நிந்தித்தும் இருக்கும் வாக்கியங்கள் அர்த்தவாதம். அர்த்தவாதம் விஷயத்தை விளக்கிச் சொல்லுதல்.
வேதங்களை கர்மகாண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்றும் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். கர்மத்தின் சொரூபத்தை சொல்வது கர்மகாண்டம். யோகத்தின் சொரூபத்தை சொல்வது உபாசனா காண்டம். ப்ரஹ்மத்தின் சொரூபத்தை சொல்வது ஞான காண்டம். ஞானகாண்டம் வேதாந்தம் என்று உபநிஷத் என்றும் கூறப்படும். உபநிஷத் என்றால் பிரம்மத்தின் சமீபத்தில் சேர்ப்பிப்பவை என்று பொருள்.
உபவேதங்கள் - 4
ஆயுர்வேதம்
அர்த்தவேதம்
தநுர்வேதம்
காந்தர்வவேதம்
1.ஆயுர்வேதம்
உயிர்களுக்கு உண்டாகும் நோய்களைப் போக்குவதற்குரிய சிகித்சைகளைப் பற்றிக் கூறுவது. ஆயுள்வ்ருத்தியைக் கூறுவதால் ஆயுர்வேதம்.
2.அர்த்தவேதம்
தக்ஷிணை, ஹோமத்ரவ்யங்கள் பற்றிக் கூறுவது அர்த்தவேதம்.
3.தநுர்வேதம்
வில்வித்தையைப்பற்றிக் கூறுவது தநுர்வேதம்.
4.காந்தர்வ வேதம்
பலவிதமாக கீதங்களைப் பாடுவதைப் பற்றிய வித்யா காந்தர்வவேதம். தேவர்களில் ஒருபிரிவினரான கந்தர்வர்களுக்குப் பிரியமானதால் காந்தர்வவேதம்.
வேத அங்கங்கள் - 6
வேதத்தின் அர்த்தத்தை அறிவதன் பொருட்டு ஏற்பட்டவை வேதாங்கள்.
சிக்ஷா
வ்யாகரணம்
சந்தஸ்
நிருக்தம்
ஜ்யோதிஷம்
கல்பம்
1.சிக்ஷா (கற்பிப்பது) (ஒலியியல் - ஒலிக்கும் முறை)
சிக்ஷா வேதத்தை அத்யயனம் செய்யும் (படிக்கும்) முறையை தெரிவிக்கிறது.
2.வியாகரணம் (நன்றாக்குவது) (இலக்கணம் - சொல்லியல்) ப்ரகிருதி(பகுதி) விக்ருதி(விகுதி) என்ற விவேகத்தை முன்னிட்டுத் தப்பிதமில்லாமல் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய அறிவை உண்டுபண்ணுவது.
3.சந்தஸ் (சந்தோஷப்படுத்துவது) (யாப்பிலக்கணம்)
செய்யுளை யாக்கும் இலக்கணங்களைக் கூறுவது.
4.நிருக்தம் (நன்றாய்க் கூறுவது) நிகண்டு
சொற்களின் பொருளை அறிவிப்பது.
5. ஜ்யோதிஷம் (க்ரஹங்களைப்பற்றியது)
ககோள சாஸ்த்ரமும் பல சாஸ்த்ரமும் அடங்கியது. க்ரஹங்களின் ஸஞ்சாரத்தையும் அதனால் பிராணிகளுக்கு ஏற்படும் பலன்(பாதிப்பு)களைப் பற்றியும் கூறுவது.
6.கல்பம் (ஏற்படுத்துவது)
வேதத்தில் கூறிய அக்னி சம்பந்தமான கிரியைகளில் மந்த்ரங்களைச் சொல்லும் போது செய்யவேண்டிய தந்த்ரங்களைக் காட்டுகிற சாஸ்த்ரம் கல்பம். க்ருஹ்ய ஸூத்ரங்கள், தர்ம ஸூத்ரங்கள், ச்ரௌத ஸூத்ரங்கள், சுல்வஸூத்ரங்கள்(க்ஷேத்ர கணிதமுறை) ஆகியவை கல்பத்தில் அடங்கியிருக்கின்றன.
உப அங்கங்கள்
மீமாம்ஸா, நியாயம், தர்ம சாஸ்த்ரம், புராணம்.
1.மீமாம்ஸா
வேதத்திலுள்ள மாறுபட்ட வாக்யங்களின் பொருளை நிர்ணயிக்கும் விசாரம் - ஆராய்ச்சி.
பூர்வமீமாம்ஸா - கர்மகாண்ட விசாரம் - ஜைமினி மஹரிஷி.
உத்தர மீமாம்ஸா
ஞானகாண்ட விசாரம் - வியாச மஹரிஷி.
2.நியாயம் - தர்க்க சாஸ்த்ரம்
பதார்த்தங்கள் எத்தனை என்பதையும் அவற்றின் லக்ஷணங்களையும் விவரிப்பது.
3.தர்மம் - ஸ்ம்ருதிகள்
ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் முதலியவற்றைக் கூறுவதும் பிரவ்ருத்தி(இல்லறம்), நிவ்ருத்தி(துறவறம்) மார்க்க தர்மங்களைக் கூறுவதும் தர்ம சாஸ்த்ரமாகும். அவை 18.
18 உபஸ்ம்ருதிகளும் உள்ளன.
அவற்றும் நான்கு முக்கியமானவை.
கிருதயுகத்தில் மனுஸ்ம்ருதி, திரேதாயுகத்தில் கௌதமஸ்ம்ருதி, த்வாபரயுகத்தில் சங்க, லிகித ஸ்ம்ருதிகள், கலியுகத்தில் பராசர ஸ்ம்ருதி.
4.புராணங்கள், இதிஹாஸங்கள்
புராதன சரித்திரத்தைக் கூறுவன புராணங்கள். தர்மம் முதலான நான்குவிதமான புருஷார்த்தங்களைப் பற்றி பற்பல கதைகளின் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்கிற பூர்வ காலத்திய சரித்திரங்கள் அடங்கியது. இதிஹாஸம் = இவ்வாறு முன் நடந்தது. அவை இரண்டு - ராமாயணம், மஹாபாரதம்.
புராணம் என்பது முக்ய ஸ்ருஷ்டி, உப ஸ்ருஷ்டி, வம்சாவளி, மன்வந்தரங்கள், வம்ச சரித்திரங்கள் இவைகளைக் கூறும் நூல். அவை 18. உபபுராணங்கள் 18 ம் உள்ளன.
மொத்தம் இருநூறு கோடி க்ரந்தங்கள்(ச்லோகங்கள்) சுருங்கி தற்போது 4,32,000 க்ரந்தங்களாக இருக்கின்றன.
உபநிஷத்துகள்
உடல் தத்த்வம், மனத்தத்த்வம், ஆத்ம தத்த்வம் மூன்மையும் பற்றிச் சொல்பவை உபநிஷத்துகள். இது வேதத்தின் இறுதிப் பகுதியாக இருப்பதால் வேதாந்தம் என்று சொல்லப்படுகிறது. ஜீவனை பரமாத்மாவிடம் சேர்ப்பிப்பது என்பது உபநிஷத் என்ற சொல்லின் பொருள். உபநிஷத்துகள் பல உள்ளன. 108 முக்கியமானவை. அவற்றுள்ளும் 10 அல்லது 12 பிரஸித்தமானவை. அவை ஈசவாஸ்யம், கேனம், கடம், ப்ரச்னம், முண்டகம், மாண்டூக்யம், ஐதரேயம், கௌஷீதகி, தைத்தீரியம், சுவேதாச்வதரம், பிருகதாரண்யகம், சாந்தோக்யம் என்பனவாம். இவற்றுக்கு சங்கரர், நீலகண்டர், ராமானுஜர், மத்வர் ஆகிய ஆசார்களாலும் அவர்களது ஆதி சிஷ்யர்களாலும் பாஷ்யம் எனும் விரிவுரை வெவ்வேறு ஸித்தாங்களாகச் செய்யப்பட்டிருக்கின்றன.
சாரீரக மீமாம்ஸா எனும் ப்ரஹ்ம ஸூத்ரம்
சரீரத்தினுள் கட்டுண்டதுபோல இருக்கின்ற ஜீவாத்மாவைப் பற்றி ஆராய்தல் சாரீரக மீமாம்ஸா. ஸூத்ரம்போல் ஸூக்ஷ்மமாய் இருப்பதாலும் உபநிஷத் கருத்துகளை தொகுத்துக் கொடுப்பதாலும் ஸூத்ரம். அதிகமான கருத்துக்களை அடக்கிக் கொண்டிருக்கிற சுருக்கமான வாக்கியங்களுக்கு ஸூத்ரம் என்று பெயர். ஒவ்வொன்றும் நான்கு பாதங்களைக் கொண்ட நான்கு அத்யாயங்களைக் கொண்டது. எண்ணற்ற விதமான விளக்கவுரைகளைக் கொண்டது என்பதால் ஒப்பு உயர்வற்ற ஒரு நூல்.
இப்படி ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாஸங்கள் மற்றும் உரைகள் முதலியவைகளில் வேதார்த்தத்தை அனுஸரித்திருப்பவை மட்டுமே ப்ரமாணங்கள் ஆகும்.
ஆகமம்
வேதத்தில் மறைந்திருக்கின்ற விஷயங்களை வருவித்துக் கொடுப்பவை ஆகமங்கள். உருவத்துடன் கூடிய பரம்பொருளான பகவானை வெளியிலும் மனத்திலும் ஆராதித்து அவனிடம் போய்ச் சேருவதற்கான நெறிமுறைகளை அறிவிப்பன ஆகம சாஸ்த்ரங்கள். வேதப்பொருளை எளிதாக அரியமுடியாத காலத்தில் ரிஷிகள் வாயிலாக இறைவன் அருளியவைதான் ஆகமங்கள். ஆகமம் என்பதற்கு இறைவனிடமிருந்து வந்தவை என்ற பொருளுமுண்டு.
ஆகமங்கள் சைவம் வைஷ்ணவம் என இருவகைப்படும். சிவபெருமானிடமிருந்து வெளிப்பட்டவை, சிவனைப் பற்றியவை சைவம். மஹாவிஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்டவை, விஷ்ணுவைப் பற்றியவை வைஷ்ணவம்.
ஆகமத்தில் கூறப்படும் பொதுவான விஷயங்களாவன:
1.ஆலயங்களை நிர்மாணித்தல், 2. அவற்றிலுள்ள பரிவார தேவதைகள், முக்கிய தேவதைகள் இன்னவை எனல். 3. அவற்றின் உயரம், அகலம், பருமன், அங்கங்களின் அமைப்பு சின்னங்களின் இருப்பு,
பிரதிஷ்டை செய்யவேண்டிய இடங்கள்.
4. பிம்பங்களின் பிரதிஷ்டா விதிகள், நித்ய பூஜா விதிகள், உத்ஸவ பூஜா விதிகள், தப்பிதங்களுக்கு பிராயச்சித்த விதிகள் , அவற்றிற்குரிய தத்திரங்களும், மந்திரங்களும். 5. பூஜகர்களின் தகுதி, ஒழுங்கு விதிகள். 6. பக்தர்தளுக்கான நெறிமுறைகள். 7. பொருள் கொடுப்பவர்கள், சில்பிகள், கோயிலதிகாரிகள், வேலைக்காரர்கள் இப்படி இன்னும் பல்வேறு விஷயங்கள்.
சைவம்
சைவ ஆகமங்கள் 28.
சிவதீக்ஷைகள் நான்கு.
1.சமயம் 2. விசேஷம் 3.நிர்வாணம் 4. ஆசார்யாபிஷேகம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம்.
சிவாலயப் பணிசெய்தல் சரியை.
சிவவழிபாடு கிரியை.
சிவதியானம் யோகம்.
சிவானுபவம் ஞானம்.
சரியை முதலானவை நன்நான்கு உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 16 பேதங்களாகக் கூறப்படுகின்றன.
வைஷ்ணவம்
வைகானஸம், பாஞ்சராத்ரம் என வைஷ்ண ஆகமம் இருவகைப்படும். பெருமாளிடம் இருந்து விகனஸ் என்ற முனிவர் வழியாக வந்தது வைகானஸம். 5 நாட்களில் உபதேசிக்கப்பட்டது பாஞ்சராத்ரம்.
சாஸ்திரங்களை பிரமாணமாகக் கொண்டு அவற்றின்படி வாழ்வது தான் ஒரு ஹிந்துவின் தர்மம். முதலில் பிரவிர்த்தி மார்க்கத்தையும் பிறகு நிவிர்த்தி மார்க்கத்தையும் பின்பற்றி முறையாக வாழ்ந்து தர்மம், பக்தி, ஞானம் இவற்றின் வாயிலாக இறைவனை அடைந்து பிறவாநிலையைப் பெறுவதுதான் மோக்ஷம். பிறவியிலிருந்து நிரந்தர விடுதலை. அதுவே ஒரு ஹிந்துவின் ஒரே லட்சியம்.
ஹிந்து மத தர்ம விளக்கம் முதல் பாகம் முற்றிற்று.
🕉️🕉️🕉️
Comments