Hindumatha Dharma Vilakkam - Chapter 17
ஹிந்துமத தர்ம விளக்கம்
பாடம் - 17
(22.10.2020)
சென்ற வாரம்…
கர்மம்
நல்வினை (புண்யம்) = விதி
வேதத்தில் விதிக்கப்பட்டவை நித்தியம், நைமித்திகம், காமியம், பிராயச்சித்தம்.
தீவினை(பாபம்) = நிஷித்தம்
மஹாபாதகங்கள், ஸமபாதகங்கள், உபபாதகங்கள்.
கர்மத்தைத் தூண்டும் வாஸனைகள் எண்ணங்களாக 16 விதம்.
கர்மத்தின் அடிப்படையில் பிறவிகள்
புண்ணியமிகுதி, பாபமிகுதி, மிச்ரம் (இரண்டும் கலந்தது). ஒவ்வொன்றிலும் மூன்று உட்பிரிவுகள் - உத்தமம் மத்திமம் அதமம்.
இதனடிப்படையில் பிறவிகள்.
இனி...
கர்மத்தைச் செய்யும் கருவிகள்
மனிதன் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களால் புண்ணியம், பாபம், மிஸ்ரம் என்ற மூவிதமான செயல்களையும் செய்கின்றான். ஆகவே கர்மம் வேறு விதமாக திரும்பவும் ஒன்பது வகைப்படுகிறது. அவை மானஸபுண்ணியம், மானஸபாபம், மானஸமிச்ரம், வாசிகபுண்யம், வாசிக பாபம், வாசிகமிச்ரம், காயிகபுண்யம், காயிகபாபம், காயிகமிச்ரம்.
மானஸ புண்ய கர்மம்
வைராக்கியம், பக்தி, ஞானம் இவற்றை பெற வேண்டும் என்றும் இவற்றின் சாதனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மனதில் நினைத்தல். பரோபகாரம் செய்யவேண்டும், ஜபம், தியானம் செய்ய வேண்டும், எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதலும் மானச புண்ணியம் ஆகும்.
மானஸ பாப கர்மம்
உடல் மற்றும் உலக சுகத்திற்காக பிறருக்கு கெடுதல் செய்யவும், வேத, ஆகம சாஸ்திரங்களையும், பெரியோர் உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்தலும் இவை பிரமாணங்கள் ஆகாது என்று மனதில் நினைத்தலும் மானச பாபம் ஆகும்.
மானஸ மிச்ர கர்மம்
மேற்கூறிய புண்ணியமான எண்ணங்களும் பாபமான எண்ணங்களும் கலந்து இருத்தல்.
வாசிக புண்ய கர்மம்
வேத ஆகம நூல்களை படித்தல், காயத்ரி, பஞ்சாக்ஷரி, அஷ்டாக்ஷரி முதலிய மந்திரங்களை ஜபித்தல், இனிமையான உண்மையான வார்த்தைகளை அன்புடன் பேசுதல், நாம சங்கீர்த்தனம் பாடுதல் போன்றவை வாசிகபுண்ணியம் ஆகும்.
வாசிக பாப கர்மம்
மகான்களையும், பெரியோர்களையும், வேதங்களையும் நிந்தித்தல், பொய், கோள், பிறர் மனம் புண்படுமாறு கடுமையான வார்த்தைகள், கேலி வார்த்தைகளைப் பேசுதல் போன்றவை வாசிகபாவமாகும்.
வாசிக மிச்ர கர்மம்
மேற்சொன்ன இரண்டையும் அவ்வப்பொழுது அனுஷ்டித்தல் வாசிகமிச்ரம் ஆகும்.
காயிக புண்ணிய கர்மம்
புண்ணிய தீர்த்தங்களில் நீராடல், புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை செல்லுதல், பெற்றோர், குரு முதலிய பெரியோர்களை வீழ்ந்து வணங்குதல், சிவன், விஷ்ணு போன்ற தேவதைகளின் விக்ரகங்களை பூஜித்தல், நல்லோர்களைப் பார்க்கத் தேடிச் செல்லுதல், அவர்கள் சொற்படி நடத்தல், பிறரின் நன்மைக்காக சேவை செய்தல், தகுதியானவர்களுக்கு தானம் செய்தல் போன்றவை காயிக புண்ணியமாகும்.
காயிகபாபம்
பிற மனிதர்களை, உயிர்களை ஹிம்சித்தல், பிறர் மனைவியுடன் சேருதல், தீயோருடன் சேர்ந்து தீயவற்றை (தனக்குத் தானே) செய்தல், பிறருக்கு கெடுதல் செய்தல், பிறர் பொருளை அபகரித்தல், பொதுச்சொத்தை சேதம் செய்தல், பொது நீர்நிலைகளை மாசுபடுத்துதல் போன்றவை காயிக பாவமாகும்.
காயிகமிச்ர கர்மம்
புண்ணிய செயல்களையும் பாப செயல்களையும் கலந்து செய்தல் காயிக மிச்ரம். சட்டவிரோதமாகச் சேர்த்த பொருளால் பொருளால் புண்ணிய காரியங்களைச் செய்தல். உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்காது இருத்தல்.
ஒவ்வொருவரும் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை புண்ணிய கர்மங்களிலேயே செலுத்த முயற்சிக்க வேண்டும். படிப்படியாக பாப கர்மங்களைக் குறைத்துக்கொண்டு முற்றிலும் விட்டுவிட வேண்டும்.
உதாரணம்: ஈ, தேனீ. ஈ போல இல்லாமல் தேனீ போல வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
ஞமலிபோல் வாழேல். (ஞமலி = நாய்)
ஞிமிறென இன்புறு. (ஞிமிறு = தேனீ)
-புதிய ஆத்திசூடி
நல்லாரைக் காண்பதுவும் நன்றே….
தீயாரைக் காண்பதுவும் தீதே…
-ஔவையார்.
கர்மத்தின் ஒழிவு
கர்மத்தினால் பிறப்பும் பிறப்பினால் கர்மமும் சுழற்சியாய் உண்டாகி வருகின்றன. இதிலிருந்து விடுபடுவது எப்படி?
வினைப்பயன் செயல்படும் விதம்
உயிர்களை பிறவியில் கட்டுப்படுத்துகின்ற கர்மபலன் ஸஞ்சிதம், பிராரப்தம், ஆகாமி என மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றது.
ஸஞ்சிதம் - எஞ்சுவினை
சேர்த்துவைக்கப்பட்டது என்ற பொருள்.
பல ஜென்மங்களில் செய்யப்பட்ட கர்மங்களின் தொகுதி ஸஞ்சிதம்.
பிராரப்தம் - நிகழ்வினை
பலன் கொடுக்க ஆரம்பித்து நடந்து வருவது. இந்தப் பிறவி தோன்றுவதற்குக் காரணமான ஸஞ்சிதத்தின் ஒரு பகுதி வினைப்பயன்கள்.
ஆகாமி - வருவினை
இனி பலனைக் கொடுக்க வருவது. இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகளின் பயன். இது இப்பிறவி முடிந்த பிறகு ஸஞ்சிதத்தோடு சேர்ந்து, எதிர்வரும் பிறவிகளுக்குக் காரணமாக அமையும்.
ஒரு பிறவியில் செய்த வினைகளின் பயனை அனுபவிக்க பல பிறவிகள் ஆகின்றன.
பிறவியில் இருந்து நிரந்தரமாக விடுபட...
வேதாந்தம் எனப்படும் உபநிஷத் நூல்களை குரு வாயிலாக முறையாகக் கற்கின்றபொழுது ஆத்மா 'நைஷ்கர்ம்யம்' என்ற ஞானம் ஏற்படும். அனைத்திற்கும் ஆதாரமான ஆத்மா எதையும் செய்வதுமில்லை எதன் பலனை அனுபவிப்பதும் இல்லை. உடல் உலகம் அனைத்தும் மாயையினால் ஆத்மாவின் மேல் கற்பிக்கப்பட்டவை. ஆகவே, உண்மையில் இல்லாதவை என்ற திட அபரோக்ஷமான ஞானத்தினால் எல்லா வினைகளும் எரிக்கப்படுகின்றன. அஜ்ஞான காரியமான சரீர அபிமானம் நீங்கி, நான் ஆத்மா என்ற தெளிவான ஞானத்தினால் செயலற்ற தன்மை சித்திக்கின்றது.
அதன் பிறகு வினையை செய்தவனும் இல்லை, வினைப் பயன்களும் இல்லை. அந்த ஜீவன், ஜீவத்துவம் இறந்து ஆத்மாவாகவே இருந்து விடுகிறான். புண்ணிய பாவங்களைச் செய்தவன் இல்லை; ஆகவே புண்ணிய பாவங்களுக்கு போக்கிடம் இல்லை. ஆகவே, அவனுக்கு மீண்டும் பிறவி இல்லை. பிராரப்தம் இருக்கும்வரை உடலோடு வாழ்ந்துவிட்டு பிறவாத நிலையை அடைகின்றான்.
ஜொலிக்கின்ற நெருப்பு விறகுகளை எரிப்பது போன்று, ஞானம் என்ற அக்நி எல்லாக் கர்மங்களையும் சாம்பலாக்கி விடுகின்றது.
ஸ்ரீமத் பகவத்கீதை 4.37.
நான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்.
- திருக்குறள் 346.
இறுதியாக…
இந்துமத தர்ம விளக்கம் என்ற இந்த தொடர் சொற்பொழிவு இதனோடு நிறைவு செய்கின்றோம். ஹிந்து மதம் ஒரு மஹா சமுத்திரம். இன்னும் அனேக விஷயங்கள் அறிந்துகொள்வதற்கு இருக்கின்றன என்றாலும் இந்து மதத்தினுடைய அடிப்படைக் கட்டமைப்பை, கொள்கைகளை இதுவரை பார்த்திருக்கின்றோம். ஷந்மதங்கள் ஷட்தரிசனங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் இன்னும் பார்ப்பதற்கு இருக்கின்றன. இருந்தாலும்
முதல் நிலையில் இது போதுமானது என்று நினைக்கின்றேன். குருவருளும் இறைவன் ஸங்கல்பமும் இருந்தால் வாய்ப்பு கிடைத்தால் பின்னர் பார்க்கலாம்.
ஓம் தத்ஸத்!
|| ஶ்ரீகிருஷ்ணார்ப்பணம் ||
Comments