நாநா சீவ வாதக் கட்டளை
ஓம்
தவத்திரு சேஷாத்திரி சிவனார் அருளிய
நாநா சீவ வாதக் கட்டளை
(மூலம் மட்டும்)
நாநா ஜீவ வாதக் கட்டளை = (ஒன்றேயான பரம்பொருளிடத்தில்) பல ஜீவர்கள் (கற்பிதமாகத்) தோன்றிய முறையைச் சொல்லுவது.
சிறப்புப் பாயிரம்
இப்பியி னிடையே எழும்இர சதம்போல் என்றுமாய் இலகிஇன் பாகி,
ஒப்பிட ஏதும் இன்றிய பிரமத்து உற்றிடும் பகுதிமுன் னாய,
அப்பிர பஞ்ச முறைமையைத் தூல அருந்ததி நியாயமே என்னச்,
செப்பினன் யாரும் தெளிவுறச் சேஷாத் திரிசிவன் என்னுமா தவனே.
பதப்பொருள் :
சேஷாத்திரி சிவன் என்னு(ம்) மாதவனே = சேஷாத்ரி சிவன் என்னும் பெயரினையுடைய பெருந்தவமுனிவர்.
யாரும் = (மந்தர் உள்பட) அனைவரும்,
தெளிவுற = தெளிவான அத்வைத ஞானத்தைப் பெற,
இப்பியினிடையே எழும் இரசதம் போல் = சிப்பியில் தோன்றும் வெள்ளி போல,
என்றுமாய் இலகி இன்பாகி = என்னும் உள்ளதாக, சித்தாக, ஆநந்தமாக (ஸச்சிதாநந்தமாக),
ஒப்பிட ஏதும் இன்றிய = தன்னுடன் ஒப்பிட இரண்டாவதாக ஒன்றும் இல்லாததாக (அத்வைதமாக),
பிரமத்து உற்றிடும் =.(இருக்கின்ற) ப்ரஹ்மத்தினிடத்தில் (கற்பிதமாகப்) பொருந்தியிருக்கின்ற,
பகுதி முன்னாய = ப்ரகிருதி முதலியனவான,
அப்பிரபஞ்ச முறைமையை = அந்த பிரபஞ்சம் தோன்றிய கிரமத்தை,
தூல அருந்ததி நியாயமே என்னச் = தூல அருந்ததி நியாயம் போல,
செப்பினன் = கூறினார். (நாநா ஜீவவாதக் கட்டளை என்னும் இந்நூலை ஆக்கினார்.)
தூல அருந்ததி நியாயம் = முதலில் ஸ்தூலமாக கண்ணுக்குத் தெரியும் வசிஷ்ட நக்ஷத்திரத்தினைக் காண்பித்து பின்னர் அதன் அருகில் ஸூஷ்மமாக உள்ள அருந்ததி நக்ஷத்திரத்தினைக் காட்டுவது ஆகும். அது போல இங்கு ஸ்தூலமாகத் தெரிகிற காரியமான உலகத்தினை முதலில் காண்பித்துப் பின்னர் இதற்குக் காரணமாக அதிஸூக்ஷ்மமாக உள்ள ப்ரஹ்மத்தைக் காட்டுதல் ஆகும்.
நாநா ஜீவவாதக் கட்டளை
இறைவணக்கம்
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகைபொன் னம்பலவன்
ஞானகுரு வாணியை உள்நாடு.
நூல் : 1
சுத்தப் பிரம்மமாய் இருக்கின்ற சர்வ சாக்ஷியினிடத்திலே, அக்னியின் சூடு போல, அபின்னமாக ஒரு சக்தி உண்டு. அந்த சக்தி அவ்வதீதப் பிரஹ்மத்தில் அடங்கி இருக்கும் போது அதற்கு சுத்த பிரம்மம் என்று பெயர். அந்த சக்தி விசிரிம்பித்து சுத்தப் பிரஹ்மத்தை வியாபிக்கும் போது அப்பிரஹ்மம் பரை வியாபகத்திற்குள் இருந்தபடியால் அதற்குப் பரப்பிரஹ்மம் என்று பெயர். இலக்ஷண சூனியமாய் இருக்கின்ற இச்சக்திக்குப் பிரஹ்மஸந்நிதானத்தில் புருட சமூகத்தில் ஸ்திரீக்கு இன்பம் சனித்தார்போல, அவிகிருத சத்துவ ரசஸ் தமோ குணங்கள் உண்டாயின. இவற்றுள், சுத்த சத்துவத்துக்கு, ஆநந்த ரூப சக்தி என்றும்,சுத்த ரஜஸிற்குச் சித்து ரூப சக்தி என்றும், சுத்த தமஸிற்கு சத் ரூப சக்தி என்றும் பெயர்.
இவற்றில் காரணமான ஆனந்தரூப சத்தியுடனே பரப்பிரஹ்மம் கூடி சர்வானந்தம் என்னும் சுழுத்தி அவத்தையை அடையும்போது, பரப்பிரஹ்மம் என்கின்ற பெயர் போய்ப் பரமானந்தர் என்னும் பெயர் வந்தது. இந்தப் பரமானந்தர், சித்ரூப சத்தியுடனே கூடிச் சர்வப் பிரகாசம் என்னும் சொப்பன அவத்தையை அடைகின்றபோது, பரமானந்தர் என்னும் பெயர் போய் தேசோமயர் என்னும் பெயர் வந்தது. இந்தத் தேஜோமயர் சத்ரூப சத்தியுடனே கூடி சர்வ வியாபகம் என்னும் சாக்கிர அவத்தையை அடையும்போது தேஜோமயர் என்னும் பெயர்போய்ப் பரிபூரணர் என்னும் பெயர் வந்தது
2.இந்த அகண்ட பரிபூரண சச்சிதானந்தப் பிரமத்தினிடத்திலே, சுத்தியில் ரஜதம்போல, மூலப்பிரகிருதி என்னும் ஒரு சத்தி உண்டு. அந்த மூலப் பிரகிருதியும் விகிர்த குணமாகிய முக்குணத்தோடு கூடியிருக்கும். அந்தப் பிரகிருதியின் சத்துவ குணம் மாயை என்றும், சர்வக்ஞ உபாதி என்றும், ஈசுர காரண சரீரம் என்றும் சொல்லப்படும். இந்த மாயையினிடத்திலே நிர்மல சலப்பிரதிபிம்பம் போலப் பிரமம் சுலட்சணமாகப் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியம் சர்வக்ஞனாகிய ஈசுரன் என்று சொல்லப்படும். இந்தச் சத்துவ குணமாயையினிடத்திலே, சத்துவத்தில் சத்துவம் சத்துவத்தில் ரஜஸு சத்துவத்தில் தமஸு" என மூன்று குணங்கள் உண்டு. இவைகளில், சத்துவத்தில் சத்துவம் பிரதானமாகும்போது, அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் சகத்தை இரட்சிக்கையினால் விஷ்ணு என்றும், சத்துவத்தில் ரஜஸ் பிரதானமாகும்போது, அதில் பிரதிபிப்பித்த ஈசுரன் சகத்தை சிருஷ்டிக்கையினால் பிரம்மா என்றும், சத்துவத்தில் தமஸ் பிரதானமாகும்போது, அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் சகத்தை உபசம்மாரம் பண்ணுகையினால் உருத்திரன் என்றும் சொல்லப்படுவான். இப்படி மூலப்பிரகிருதியின் சத்துவகுண கற்பனை சொல்லப்பட்டது.
3. இனி, மூலப்பிரகிருதியின் இரஜோ குணம் அநேக ரூபமாய்ப் பிரிந்து அவித்தைகள் என்றும் சீவ காரண சரீரங்கள் என்றும் ஒன்றற்கொன்று தாரதம்மியமாகச் சொல்லப்படும். இந்த அவித்தைகளிடத்திலும் மலின சலப் பிரதிபிம்பம்போல பிரமசைதன்னியம் பிரதிபிம்பிக்கும் இந்தப் பிரதிபிம்ப சைதன்னியங்கள் கிஞ்சிஞ்ஞர் என்றும் சீவசிதாபாசர் என்றும் பிராக்ஞர் என்றும் சொல்லப்படும். இந்த அவித்தைகளிடத்திலேயும் ரஜஸில் சத்துவம், ரஜஸில் ரஜஸ், ரஜஸில் தமஸ் என மூன்று குணங்கள் உண்டு. இரஜஸில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் தத்துவக் ஞானநிஷ்டன் ஆவன். இரஜஸில் ரஜஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் காமக் குரோதபரனாய்க் கர்மநிஷ்டன் ஆவன். இரஜஸில் தமஸு பிரதானமாகும்போது, அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் சோம்பல் நித்திரை, மயக்கம் அகிய இவைகளை அடைவன். இப்படி மூலப் பிரகிருதியின் இரஜோகுண கற்பனை சொல்லப்பட்டது.
4. இனி, மூலப் பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விஷேயம் என இரண்டு சத்திகள் உண்டு. இவ்விரண்டில், ஆவரண சத்தியானது தத்துவ ஞானியையும், ஈசுரனையும் தவிர மற்றைச் சீவருக்கெல்லாம் சரீரத்திரயம், சிதாபாசன், சாட்சி சைதன்னியம் என்னும் இவைகளின் ஒன்றற்கொன்று உள்ள பேதம் தெரியவொட்டாமல் மறைக்கும். இதனால் மறைபட்ட சீவர் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக நான் என்று அபிமானிப்பர். இந்த அபிமானம் அகங்காரக் கிரந்தி என்றும், சம்சாரபந்தம் என்றும் சொல்லப்படும். சற்குரு கடாக்ஷத்தினாலே, இந்த ஆவரணம் நீங்கி, இருபத்தொன்பது தத்துவங்களின் ஒன்றற்கொன்றுள்ள பேதம் தெரிகின்றதே முத்தி. இப்படி ஆவரண சத்தியின் காரியம் சொல்லப்பட்டது.
5. இனி, விக்ஷேய சத்தியினின்றும் சத்த தன்மாத்திரையான ஆகாசம் தோன்றிற்று. ஆகாசத்தினின்றும் பரிச தன்மாத்திரையான வாயு தோன்றிற்று. வாயுவினின்றும் ரூப தன்மாத்திரையான அக்கினி தோன்றிற்று. அக்கினியினின்றும் ரஸ தன்மாத்திரையான அப்பு தோன்றிற்று. அப்புவினின்றும் கந்த தன்மாத்திரையான பிருதிவி தோன்றிற்று. இந்தச் சூக்ஷம பஞ்சபூதத்திற்குக் காரணமாய் இருக்கின்ற விக்ஷேப சத்தியினிடத்திலே தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸ், தமஸில் தமஸு என்னும் இவை அற்பம் கருவாக இருந்தபடியால் அதன் காரியமாகிய இந்தத் தன்மாத்திரைகளான பஞ்ச பூதங்களும் முக்குணங்களுடனே பிறந்தன. இந்தப் பஞ்ச பூதங்கட்குத் தன்மாத்திரைகள் என்றும் அபஞ்சீகிருத பூதங்கள் என்றும், சூக்ஷம பூதங்கள் என்றும், முக்குண பூதங்கள் என்றும் சாஸ்திரங்களில் நாமம் சொல்லப்படும்.
6. இந்தச் சூக்ஷம பூதங்களினின்றும் சூக்ஷம சரீரங்களும், ஸ்தூல பூதங்களும் தோன்றும். அஃது எங்ஙனம் எனின் : ஆகாசம் முதலான பஞ்ச பூதங்களின் சத்துவ அம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை எடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது அந்தக்கரணம். இந்த அந்தக்கரணத்தில், ஆகாசத்தின் அம்சம் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் ஆகாசத்தைப்போலச் சகலமான கேள்விக்கும் இடம் கொடுத்துத் தரிக்கின்றது. இப்படித் தரிக்கின்ற விருத்திக்கு உள்ளம் என்று பெயர். இந்த அந்தக்கரணத்தில், வாயுவின் அம்சம் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் வாயுவைப்போல அலைகின்றது. இப்படி அலைகின்ற விருத்திக்கு மனம் என்று பெயர். இந்த அந்தக்கரணத்தில், அக்கினியின் அம்சம் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் அக்கினியைப்போல ஈது இன்னது என்று விளக்குவிக்கின்றது. இப்படி விளக்குவிக்கின்ற விருத்திக்குப் புத்தி என்று பெயர். இந்த அந்தக்கரணத்தில், அப்புவின் அம்சம் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் அப்புவைப் போல விஷயங்களில் பற்றி இழுக்கின்றது. இப்படி இழுக்கின்ற விருத்திக்குச் சித்தம் என்று பெயர். இந்த அந்தக்கரணத்தில், பிருதிவியின் அம்சம் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் பிருதிவியைப்போலக் கடினமாக நின்று நானென்று அபிமானிக்கின்றது. இந்த அபிமான விருத்திக்கு அகங்காரம் என்று பெயர்.
7. இன்னும், ஆகாசம் முதலான பஞ்ச பூதங்களினுடைய சத்துவ அம்சத்திலே, பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை எடுத்துத் தனித்தனியே வைத்தது சுரோத்திராதி ஞானேந்திரியம் என்று சொல்லப்படும். இவைகளில், சுரோத்திரம், ஆகாசத்தின் அம்சம் ஆனபடியால் ஆகாசத்தின் குணமான சத்தம் மாத்திரத்தை அறியும். துவக்கு, வாயுவின் அம்சம் ஆனபடியால் வாயுவின் குணமான பரிச மாத்திரத்தை அறியும். சக்ஷு, அக்கினியின் அம்சம் ஆனபடியால் அக்கினியின் குணமான ரூபமாத்திரத்தை அறியும். சிங்ஙுவை, அப்புவின் அம்சம் ஆனபடியால் அப்புவின் குணமான ரஸ மாத்திரத்தை அறியும். கிராணம் பிருதிவியின் அம்சம் ஆனபடியால் பிருதிவியின் குணமான கந்த மாத்திரத்தை அறியும். இப்படி ஐந்தும் ஒன்றோடொன்று கூடாதபடியால் ஒன்று மற்றொன்றின் குணத்தைக் கிரகிக்க அறியாது, அந்தக்கரணத்தில், ஐந்து மாத்திரையும் ஒன்றாய்க் கூடினது கொண்டு ஐந்து இந்திரியங்களினாலும், ஐந்து விஷயங்களையும் அறியும். இந்தச் சத்துவ குணத்தில் உண்டான அந்தக்கரணம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும், ஆகப்பத்தும் சத்துவ அம்சம் ஆனபடியால் ஞானசாதனம் ஆயின.
8. இன்னும், ஐந்து பூதங்களினுடைய இரஜோ அம்சத்திலே, பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை எடுத்து ஒன்றாகக் கூட்டிவைத்தது வியானாதி பஞ்ச வாயுக்கள். இவைகளில் வியானவாயு ஆகாசத்தின் அம்சம் ஆனபடியால் ஆகாசத்தைப்போலச் சர்வாங்கமும் வியாபித்திருக்கும். பிராணவாயு, வாயுவின் அம்சம் ஆனபடியால் வாயுவைப்போல இருதயத்திலிருந்து நாசிகாதி பரியந்தம் அலையும். அபானவாயு, அக்கினியின் அம்சம் ஆனபடியால் அக்கினியைப் போல சாடராக்கினியாக உஷ்ணித்துக் கொண்டு குதத்தைப் பற்றி நின்று, உண்ட அன்ன பானாதிகளைச் சீரணிப்பிக்கும். சமானவாயு, அப்புவின் அம்சம் ஆனபடியால் சரீர நடுவான நாபித்தானத்தில் நின்று உண்ட அன்னரசங்களை அப்புவைப்போல இழுக்கும். உதானவாயு, பிருதிவியின் அம்சம் ஆனபடியால் கண்டத்தைப் பற்றிப் பிருதிவியைப்போலக் கடினமாக நின்று, உண்ட அன்ன பானாதிகளைக் கடையும். இந்தப் பஞ்ச வாயுக்களையும் அல்லாமல், வாந்தி பண்ணுவிக்கின்றது நாகன் என்றும், விழிப்பிக்கின்றது கூர்மன் என்றும், குறுகுறுத்துத் தும்மச் செய்கின்றது கிரிகரன் என்றும், கொட்டாவி கொள்ளச் செய்கின்றது தேவதத்தன் என்றும், வீங்கச் செய்கின்றது தனஞ்சயன் என்றும், வேறே ஐந்து வாயுக்கள் உண்டென்று சிலர் சொல்லுவார். இவ்வைந்தும் பிராணனுடைய தொழில் ஆனபடியால் வேறல்ல.
9. இன்னும், ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்களினுடைய இரஜோ அம்சத்திலே, பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை எடுத்துத் தனித்தனியே வைத்தது வாக்காதி கர்மேந்திரியம் என்று சொல்லப்படும். இவைகளில், ஆகாசத்தின் இடமாக வாக்கு வசனிக்கும். வாயுவின் இடமாகப் பாணி இடுதல், ஏற்றல் செய்யும். அக்கினியின் இடமாகப் பாதம் நடக்கும். அப்புவின் இடமாகப் பாயுரு மலசலாதிகளை வெளியிலே தள்ளும். பிருதிவியின் இடமாக உபஸ்தம் சுகத்தைப் பண்ணும்; இந்த ஐந்தும் தனித்தனியே இருந்ததுகொண்டு மறுதொழில் செய்யமாட்டாது. வியானாதி வாயுக்கள் ஐந்து மாத்திரையும், ஒன்றாய்க் கூடினது கொண்டு, கர்மேந்திரியம் ஐந்தின் வழியினாலும் ஐந்து தொழில்களையும் செய்து முடிக்கும். இந்த வாயுக்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், ஆகப் பத்தும் இரஜோ அம்சம் ஆனபடியினால் கிரியா சாதனம் ஆயின. அந்தக்கரணம்-5, ஞானேந்திரியம்-5, வாயுக்கள்-5, கர்மேந்திரியம்-5, ஆக இருபது தத்துவமும் சூக்ஷ்ம சரீரம் என்று சொல்லப்படும். இந்தச் சரீரத்தை மாயாப் பிரதிபிம்பனாக இருக்கின்ற ஈசன், அவித்தையாப் பிரதிபிம்பர் ஆகிய ஜீவர்கள் அநேகர் ஆகையால் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சரீரமாகச் சிருஷ்டித்து அளித்தான். இப்படி சூக்ஷும சரீர கற்பனை சொல்லப்பட்டது.
10. இனி ஸ்தூல பூத உற்பத்தி சொல்லுகின்றோம். அஃது எங்ஙனம் எனின் - தமோ அம்சமாய் இருக்கின்ற ஐந்து பூதங்களையும், ஒவ்வொன்றை இரண்டு இரண்டாகப் பகுத்து, முதற்பாதி ஐந்தையும் ஒவ்வொன்றை நான்கு நான்காகப் பகுத்து, இரண்டாம் பாதி ஐந்தில், தன் அம்சத்துடனே கூட்டாமல் மற்றை நான்கு பூதங்களுடன் அரைக்கால் அரைக்கால் மாத்திரையாகக் கொடுக்கின்றது பஞ்சீகரணம் என்று சொல்லப்படும். இப்படிப் பஞ்சீகரணம் பண்ணின ஸ்தூல பூதங்களிலே ஆகாசத்திலே பரிசு, ரூப, ரஸ, கந்தம் ஆகிய நான்கு குணங்களும் வியாப்பியம் ஆனபடியால், அதிருசியமாய்ப் போக நிசகுணமாகிய சத்தம் திருசியமாம். வாயுவிலே ரூப, ரஸ, கந்தம் ஆகிய மூன்று குணங்களும் வியாப்பியம் ஆனபடியினால் அதிருசியமாய்ப் போகக் காரண குணமாகிய சத்தமும், நிச குணமாகிய பரிசமும் திருசியமாம். அக்கினியிலே ரஸ, கந்தம் ஆகிய இரண்டு குணங்களும் வியாப்பியம் ஆனபடியினால் அதிருசியமாய்ப் போக, காரண குணங்களாகிய சத்த, பரிசமும், நிச குணமாகிய ரூபமும் திருசியமாம். அப்புவிலே கந்தகுணம் வியாப்பியம் ஆனபடியினால் அதிருசியமாய்ப் போக, காரண குணங்களாகிய சத்த பரிச, ரூபமும், நிச குணமாகிய ரஸமும் திருசியமாம் பிருதிவியிலே, காரண குணங்களாகிய சத்த, பரிச, ரூப, ரஸமும், நிச குணமாகிய கந்தமும் திருசியமாம்.
11. முன் சூக்ஷ்ம பூதங்களினின்றும் சூக்ஷும சரீரங்கள் தோன்றினாற் போலப், பஞ்சீகரணம் பண்ணின ஸ்தூல பூதங்களினின்றும், ஆறு தத்துவமாய், நால்வகைப் பிறப்பாய், மூவகைச் சாதியாய் இருக்கின்ற ஸ்தூல சரீரங்கள் தோன்றின. இவற்றுள் ஆறு தத்துவங்களாவன:- சர்மம், உதிரம், மாமிசம், சனாயு, அத்தி, மஜ்ஜை என்னும் இவைகளாம். நால்வகைத் தோற்றங்களாவன:- சராயுஜம், அண்டஜம், சுவேதஜம், உத்பிஜ்ஜம் என்னும் இவைகளாம். மூவகைச் சாதிகளாவன - இகலோக பரலோகபுத்தி இருவகையும் கொடுக்கின்ற மனுட சரீரம் உத்தம சாதி. பரலோக புத்தியை மறைத்து, இகலோக புத்தியை மாத்திரம் கொடுக்கின்ற பசு, பட்சி முதலானவை மத்திய சாதி. இரண்டு லோக புத்தியையும் மறைத்திருக்கின்ற மரம், செடி, கொடி முதலியவை அதம சாதி, இப்படிப் பிருதிவி தத்துவமாய் இருக்கின்ற பூலோகத்தில் கண்டாற்போல, அப்பு, அக்கினி, வாயு, ஆகாசம் என்னப்பட்ட தத்துவங்களாய், நிரைநிரையே இருக்கின்ற பிதிர்லோகம், தேவலோகம், யட்ச கந்தர்வ சித்தர் லோகங்களிலும், நட்சத்திரமாகத் தோற்றுகின்ற சந்திரன் முதலான பிதிர்க்கள், சூரியன் முதலான தேவதைகள், கந்தருவர் சித்தர் எனப்பட்டவர்கள் உத்தம சாதி. காமதேனு, ஐராவதம், அன்னம், கருடன் முதலானவை மத்திம சாதி. கற்பக விருட்சம், பாரிசாதம் முதலானவை அதம சாதி. இந்தத் தூல சரீரமே அன்னமய கோசம். சூக்ஷ்ம சரீரம் மூன்று கோசங்களாய் இருக்கும். அஃது எங்ஙனம் எனின்:- பிராண வாயுவும் கர்மேந்திரியங்களும் கூடிப் பிராணமயகோசம், மனதும் ஞானேந்திரியங்களும் கூடி மனோமய கோசம், புத்தியும் ஞானேந்திரியங்களும் கூடி விஞ்ஞானமய கோசம். காரண சரீரமே ஆனந்தமய கோசம். இப்படிப் பஞ்ச கோசம் சொல்லப்பட்டன
12. ஆறு தத்துவங்களாய் இருக்கின்ற ஸ்தூல சரீரத்திலே, இருபது தத்துவங்களாய் இருக்கின்ற சூக்ஷம சரீரம் இருக்கின்றது. அஃது எப்படி எனின்:- கர்மேந்திரியங்களுள் வாக்கும், ஞானேந்திரியங்களுள் சிங்ஙுவையும், வாயில் இருக்கும். உதான வாயுவும், மனதும் கண்டத்தில் இருக்கும். பிராண வாயுவும், புத்தியும் இருதயத்தில் இருக்கும். சமான வாயுவும், சித்தமும் நாபியில் இருக்கும். அபான வாயுவும், பாயுருவும் குதத்தில் இருக்கும். வியான வாயுவும், ஞானேந்திரியங்களுள் துவக்கும், அகங்காரமும் சர்வாங்கமும் வியாபித்திருக்கும். உச்சியிலே உள்ளமும், கருவிழி நுனியிலே சக்ஷு இந்திரியமும், காதிற்குள்ளே சுரோத்ரேந்திரியமும், மூக்கு நுனியிலே கிராணேந்திரியமும், கழுத்திற்கு மேலே தனித்தனியே இருக்கும். கழுத்திற்குக் கீழே, கை, கால், குய்யங்களில், பாணி, பாதம், உபஸ்தம், மூன்றும் தனித்தனியே இருக்கும். இப்படி ஸ்தூல சரீர தத்துவங்கள் ஆறு, அதில் குடிபுகுந்த சூக்ஷம சரீர தத்துவங்கள் இருபது; ஆகத் தத்துவங்கள் இருபத்தாறும், பஞ்ச பூதங்களின் காரியம் ஆனபடியினாலே ஒருமைப்பாடாகக் காரிய சரீரம் என்று சொல்லப்படும்.
13. அவித்தையில் பிரதிபிம்பித்த சிதாபாசன், சாக்கிரத்திலே இந்த இருபத்தாறு தத்துவங்களுடனே கலந்த நின்றபோது, விசுவன் என்றும், வியாவகாரிக சீவன் என்றும் சொல்லப்படுவன். சொப்பனத்திலே, ஸ்தூல சரீரத்தைவிட்டு, அந்தக்கரணத்துடனே கூடி நின்ற போது, தைஜசன் என்றும், பிராதிபாசிக சீவன் என்றும், சொப்பன கற்பிதன் என்றும் சொல்லப்படுவன். சுழுத்தியிலே, காரிய சரீர தத்துவங்கள் இருபத்தாறையும் கைவிட்டுக் காரண சரீரத்தை மாத்திரம் பொருந்தியிருக்கும்போது, பிராக்ஞன் என்றும் பாரமார்த்திக சீவன் என்றும் சொல்லப்படுவன். பிரம சைதன்னியமும், சாக்கிரத்திற்குச் சாட்சியாய் இருக்கும்போது, சீவாத்மா என்றும், சொப்பனத்திற்குச் சாட்சியாய் இருக்கும்போது, அந்தராத்மா என்றும், சுழுத்திக்குச் சாட்சியாய் இருக்கும் போது, பரமாத்மா என்றும், அவத்தாத்திரய சாட்சியாய் இருக்கும்போது, ஞானாத்மா என்றும், கூடஸ்தன் என்றும் சொல்லப்படும். இப்படிச் சீவனுக்கு மூன்று சரீரங்களும், மூன்று அவத்தைகளும் சொல்லப்பட்டன.
14. இனி, ஈசுரனுக்கு மூன்று சரீரங்களும், மூன்று அவத்தைகளும் சொல்லும்படி: கற்பிதப் பிரபஞ்ச வடிவமாகத் தோற்றுகின்ற தூல பஞ்ச பூதங்களும், அந்தப் பூதங்களிலே தோன்றிய மூன்று சாதியாய் இருக்கின்ற தூல சரீர சமஷ்டியும் கூடி, ஈசுர தூல சரீரம் என்றும், விராட் என்றும் சொல்லப்படும். இதனுடனே கூடிச் சாக்கிராவத்தையைப் பொருந்துகின்ற ஈசுரன், வைசுவானரன் என்றும், இந்த இருவகைக்கும் அதிஷ்டான சைதன்னியம் பிரமா என்றும் சொல்லப்படும். சூக்ஷும பூதங்கள் ஐந்தும், அந்தப் பூதங்களிலே தோன்றிய, சூக்ஷும சரீர சமஷ்டியும் கூடி, ஈசுர சூக்ஷும சரீரம் என்றும் இரண்யகர்ப்பம் என்றும் சொல்லப்படும். இதனுடனே கூடிச் சொப்பனாவத்தையைப் பொருந்துகின்ற ஈகரன், சூத்திராத்மா என்றும், இந்த இருவகைக்கும் அதிஷ்டான சைதன்னியம் விஷ்ணு என்றும் சொல்லப்படும். இந்தத் தூலம், சூக்ஷுமம் இரண்டின் வாசனையுடனே கூடியிருக்கின்ற மாயை, ஈசுர காரண சரீரம் என்றும், அவ்வியாகிருதம் என்றும் சொல்லப்படும். இதனுடனே கூடிச் சுழுத்தி அவத்தையைப் பொருந்துகின்ற ஈசுரன், அந்தர்யாமி என்றும், இந்த இருவகைக்கும் அதிஷ்டான சைதன்னியம், உருத்திரன் என்றும் சொல்லப்படும். சீவன், தன் மூன்று அவத்தைகளிலும், தன் மூன்று சரீரங்களாயிருக்கின்ற இருபத்தேழு தத்துவங்களுடனும் நான் என்று கலந்து நிற்கின்றது போல, ஈசுரனும் தன் மூன்று அவத்தைகளிலும் தன் மூன்று சரீரங்களாயிருக்கின்ற முப்பத்து இரண்டு தத்துவங்களுடனும் கலந்து நிற்பன். ஆகையினாலே, சீவ சிதாபாசன் தன் சரீர மாத்திரமே கலந்து நிற்பன். ஈசுரன், தன் சரீரமாகிய சகல சரீரங்களோடும் சகல பிரபஞ்சங்களோடும் கலந்து நிற்பன். இந்த இரு வகைக்கும் சாட்சியாய் இருக்கின்ற பிரம சைதன்னியமும், சகல சரீரங்களிலும் சகல பிரபஞ்சங்களிலும் நிறைந்து, அப்பாலும் பத்துத் திக்கையும் அதிக்கிரமித்து எல்லை யற்றிருக்கும்.
15. சீவனுக்குத் தூல சரீர வியவகாரத்திற்கு, அன்னமயமான சட்கோச தத்துவங்கள் - 6, சூக்ஷும சரீர தத்துவங்கள் 20, சீவன், ஈசுரன், அவித்தை, வித்தை, பிரமம்-5 ஆகத் தத்துவங்கள்-31. சூக்ஷம சரீர வியவகாரத்திற்கு, சூக்ஷுமசரீர தத்துவங்கள் -20, சீவன், ஈசுரன், அவித்தை , வித்தை , பிரமம் 5 ஆகத் தத்துவங்கள்-25 காரண சரீர வியவகாரத்திற்கு, சீவன், ஈசுரன், அவித்தை, வித்தை, பிரமம்-5. சீவ வியவகாரத்திற்கு, சீவன், ஈசுரன், பிரமம்-3. சாட்சி வியவகாரத்திற்கு, சாட்சி-1. ஈசுரனுக்குத் தூல சரீர வியவகாரத்திற்கு, சமஷ்டி அன்னமயகோச தத்துவங்கள்-6, சமஷ்டி சூக்ஷும சரீர தத்துவங்கள்-20, சமஷ்டி சீவன், அவித்தை 2, ஈசுரன், வித்தை, பிரமம்-3, தூல பூதங்கள் 5, ஆகத் தத்துவங்கள் - 36. சூக்ஷும சரீர வியவகாரத்திற்குச் சமஷ்டி சூக்ஷும சரீர தத்துவங்கள்-20, சமஷ்டி சீவன், அவித்தை -2 சூக்ஷும பூதங்கள்-5, வித்தை, ஈகரன் பிரமம்-3 ஆகத் தத்துவங்கள்-30. காரண சரீர வியவகாரத்திற்கு வித்தை, ஈகரன் பிரமம்-3. ஈசுர வியவகாரத்திற்கு ஈசுரன், பிரமம்-2. பிரம வியவகாரத்திற்கு பிரமம்-1. இந்திரிய வியவகாரத்திற்கு இந்திரியம்-1, சட்கோச தத்துவங்கள் - 6, அந்தக்கரணம்-5, வாயு-5, சீவன், ஈசுரன், அவித்தை , வித்தை , பிரமம்-5 ஆகத் தத்துவங்கள்-22. மனோராச்சிய வியவகாரத்திற்கு, அந்தக்கரணம்-5, சீவன், ஈகரன், அவித்தை, வித்தை பிரமம்-5 ஆகத் தத்துவங்கள் - 10. இப்படித் தத்துவங்களினுடைய தோற்றமும், நிலையும் சொல்லப்பட்டன.
16. இனித் தத்துவங்கள் ஒடுங்குகின்ற முறை சொல்லுகின்றோம். சகல சீவரிடத்திலும் இருக்கின்ற தூல சரீரங்கள் அனைத்தும், தமக்கு ஆதாரமான தூல பூதங்களிலே மடிந்து பூதமாத்திரமாக ஒடுங்கும். தூல பூதங்களும், பஞ்சீகரணம்விட்டுத் தன்மாத்திரைகளான தமோகுண பூதங்களாக மிஞ்சும். அப்போது கேவலம் இரண்யகர்ப்ப அவத்தை என்று சொல்லப்படும். சூக்ஷும சரீர தத்துவங்கள் இருபதும் கட்டுவிட்டுப் பூதங்களினுடைய சத்துவ குணமும், இரஜோ குணமுமாக ஒடுங்கும்; அஃது எங்ஙனம் எனின் :- சகல பிராணிகளிடத்திலும் இருக்கின்ற அகங்காரமும், கிராணேந்திரியமும் உதானவாயுவும், உபஸ்தேந்திரியமும் பிருதிவியில் ஒடுங்கும். சித்தமும், சிங்ஙுவையும் சமானனும், பாயுருவும் அப்புவில் ஒடுங்கும். புத்தியும், சக்ஷுவும், அபானனும், பாதமும் அக்கினியில் ஒடுங்கும். மனதும், துவக்கும், பிராணனும், பாணியும் வாயுவில் ஒடுங்கும். உள்ளமும், சுரோத்திரமும், வியானனும், வாக்கும் ஆகாசத்தில் ஒடுங்கும். அப்போது பழையபடியே முக்குண பூதங்களாகும். இந்த சூக்ஷும பூதங்களும், பிருதிவி அப்புவில் கரைந்து ஒடுங்கும். அப்புவும், அக்கினியில் சுவறி ஒடுங்கும். அக்கினியும் விளக்குப்போல வாயுவில் அணைந்து ஒடுங்கும். வாயுவும், ஆகாசத்திலே ஓய்ந்து ஒடுங்கும். ஆகாசமும், விக்ஷேப சத்தியில் ஒடுங்கும். ஆவரண சத்தியும், விக்ஷேப சத்தியும், மூலப் பிரகிருதியின் தமோகுண மாத்திரமாய், ஆலமரம், ஆலம் விதையில் ஒடுங்கினால்போல, இன்னம் ஒரு சிருஷ்டிக்கு வித்தாக, அவித்தையிலும் மாயையிலும் ஒடுங்கும். இந்த அவித்தையும், மாயையும் அதி நுண்மையான மூலப் பிரகிருதி என்று சொல்லப்பட்ட விந்து தத்துவத்தில் ஒடுங்கும். அந்த விந்துவும், பாம்பு என்கின்ற பெயர்போய்ப் பழுதையாகக் கண்டாற்போலத் தனக்கு அதிஷ்டான சைதன்னியமான பிரம சைதன்னிய மாத்திரமாக ஒடுங்கும். இப்படிப் பொய்யெல்லாம் மெய்ப்பொருள் ஒன்றாகக் கண்டு, அதுவே சுபாவ சித்தமாய், நிசமாயிருக்கின்ற தன் வடிவு எனக்கண்டு தெளிந்து கவலை கெட்டிருக்கின்றவனே சீவன் முத்தன். இப்படித் தத்துவங்களின் ஒடுக்கம் சொல்லப்பட்டது.
17. இப்படித் தோன்றி ஒடுங்கின தத்துவங்கள்-36, அவையாவன:- பூதங்கள்-5 ஸ்தூல சரீர தத்துவங்கள்-6, சூக்ஷம சரீர தத்துவங்கள் -20, காரண சரீரமான மாயை, அவித்தை-2, இவற்றில் பிரதிபிம்பித்த சீவன், ஈசுரன்-2, இவைகட்கெல்லாம் அதிஷ்டான சைதன்னியமாய் இருக்கின்ற பிரமம் -1 (பிரமம் என்ற நாமமாத்திரம்) இவையாம். இவைகளில், பூதங்கள்-5, மாயை மாயாப் பிரதிபிம்பரான ஈசுரன்-1, பிரமம்-1 ஆக இந்த எட்டும் சகல பிராணிகளுக்கும் சமுதாயமாக அனுபவிக்கப்படும். மற்றை இருபத்தெட்டும், அவன் அவனுக்கு பிருதக் ஆக அனுபவிக்கப்படும். அஃது எங்ஙனம் எனில், பிருதிவி தத்துவம் ஒன்று இறக்கில் எல்லோருக்கும் ஆதாரம் இல்லை. மழை மறுக்கில், எல்லோருக்கும் சலம் இல்லை. தேயு இல்லாதிருந்தால், பாகம் இல்லை. வாடை, தென்றல் இல்லாவிட்டால், வாயு இயக்கம் இல்லை. ஆகாசம் இறக்கில் ஒருவருக்கும் அவகாசம் இல்லை. மாயையும், மாயாப் பிரதிபிம்பரும் இறக்கில் சகல சமயங்களுக்கும் தெய்வம் இல்லை. பிரமம் இல்லையேல் ஒருவருக்கும் அறிவு இல்லை. ஆகையால் இந்த எட்டும் எல்லோருக்கும் சமுதாயமாம். பிருதக் எங்ஙனம் எனின், ஒருவனுக்கு ஸ்தூல சரீரம் இறக்கில், எல்லோருக்கும் ஸ்தூல சரீரம் இறவாதபடியினாலும், சூக்ஷும சரீரத்தில் ஒருவனுக்கு அங்க வைகல்யம் (குறைவு) வந்தால் எல்லோருக்கும் வாராதபடியினாலும், முத்தராயிருந்த சுகர் வாமதேவர் முதலியோருக்கு அவித்தையும், சீவனும் இறந்துபோயிருக்க, மற்றையோருக்கெல்லாம் அவித்தையும் சீவனும் இறவாதபடியினாலும், இந்த இருபத்தெட்டுத் தத்துவங்களும், அவனவனுக்குப் பிருதக் என்பதில் சந்தேகமே இல்லை.
18. இந்தத் தத்துவங்கள் முப்பத்தாறில், எப்போதும், தானாகவே காணப்படுகிற தத்துவம் ஒன்று. எப்போதும் தனக்கு அந்நியமாகக் காணப்படுகிற தத்துவங்கள் ஏழு. தான் ஆகவும், தனக்கு அந்நியம் ஆகவும், அனுபவிக்கப்படுகிற தத்துவங்கள் இருபத்தெட்டு. அஃது எங்ஙனம் எனில், அவத்தாத்திரய சாட்சியாய் இருக்கின்ற பிரம சைதன்னியம், எல்லா அவத்தைகளிலும், தான் ஆக விளங்குகையினாலும், மற்றைத் தத்துவங்கள் போலத் தனக்கு அந்நியமாக விளங்காதபடியினாலும், அந்தப் பிரம சைதன்னியம் ஒன்று மட்டுமே தான் ஆகக் காணப்படுகிறது. பஞ்ச பூதங்கள், மாயை மாயாப் பிரதிபிம்பர் ஆக ஏழும் தம் தம் தொழிலான வெட்டு, கொத்து, உழவு, பஞ்ச கிருத்தியம், தசாவதாரம் முதலானவை, ஒரு காலும் தன்னுடைய தொழிலாகக் காணப்படாத படியினாலே, தனக்கு அந்நியங்களே அல்லாமல் தான் ஆகமாட்டா. மற்றை இருபத்தெட்டுத் தத்துவங்களுள்ளே நான் பிராமணன், நான் க்ஷத்திரியன், நான் வைசியன், நான் சூத்திரன், நான் பிரமசாரி, நான் கிருகஸ்தன், நான் வானப்பிரஸ்தன் நான் சந்நியாசி, நான் ஆண், நான் பெண், நான் கறுவல், சிவலை, கட்டையன், நெட்டையன், நான் பருத்தேன், இளைத்தேன் என்று தான் ஆக வழங்குகிற, ஸ்தூல சரீர ஆறு தத்துவங்களும், மற்றொரு வேளையிலே, தனக்குப் புறம்புபட்டு என் மாடு, என் கன்று என்றாற்போல, என் சரீரம் பருத்தது, இளைத்தது, நரைத்தது, என் சரீரம் பிறந்து இத்தனை நாளாயிற்று என்று, தான் வேறு தூல சரீரம் வேறாக வழங்குகிறபடியினாலும், நான் கண்டேன், கேட்டேன், தொட்டேன், போகித்தேன் கொடுத்தேன், வாங்கினேன், நடந்தேன், புசித்தேன், சிந்தித்தேன், நிச்சயித்தேன், இந்தப் பஞ்சத்திற்குச் சீவித்தேன் என்று தான் ஆக வழங்குகிற சூக்ஷும சரீர தத்துவங்கள் இருபதும், மற்றொரு வேளையிலே, தனக்குப் புறம்புபட்டு, என் வீடு, என் உடைமை (என் மாடு, என் கன்று) என்றாற்போல, என் கண், என் காது, என் மூக்கு, என் நாக்கு, என் கை, என் கால், என் மனம், என் புத்தி, என் அகங்காரம், என் சித்தம், என் பிராணன் என்று, தான் வேறு, அவைகள் வேறாக வழங்குகிறபடியினாலும், நான் அறிவேன், அறியேன் என்று, தான் ஆக வழங்குகிற அஞ்ஞானமும், சிதாபாசனும், மற்றொரு வேளையிலே தனக்குப் புறம்புபட்டு, என் அஞ்ஞானம், என் சீவன் என்று வழங்கக் கண்டபடியினாலும் இந்த இருபத்தெட்டுத் தத்துவங்களும், தான் ஆகவும், தனக்கு அந்நியம் ஆகவும், வழங்குகின்றது சித்தம்.
19. இப்படிச் சொன்ன குருவைப் பார்த்துச் சீடன் கேட்கும்படி: இந்த இருபத்தெட்டுத் தத்துவங்களும் தான் ஆனால், சாட்சியைப்போல, ஒரு தன்மையாகத் தோற்ற வேண்டுமே அல்லாமல், பஞ்ச பூதங்களைப் போலத் தனக்கு அந்நியமாகக் காணக் கணக்கில்லை இந்த இருபத்தெட்டும், தனக்கு அந்நியமேயானால், எப்போதும் புறம்புபட்டே இருக்க வேண்டுமல்லாமல், தான் ஆக வழங்கக் கணக்கில்லை. தானுமாய் தனக்கந்நியமுமாய் இருக்குமென்கிறது, இருட்டாதித்தன் என்றாற் போலும், வெள்ளாள தீக்ஷிதன் என்றாற் போலும், விருத்தமாம் என்னும் சங்கைக்கு:- பரமார்த்தமாகத் தான் என்கின்றது ஒரு வகையும், அத்தியாசத்தினாலே தான் என்கின்றது ஒரு வகையும், ஆக இருவகையும் உண்டு. சாட்சி சைதன்னியத்தைத் தான் என்கின்றது, பரமார்த்தம் அல்லாமல் உபசாரம் அல்ல. தனக்கு அந்நியமாய் இருக்கின்ற இந்த இருபத்தெட்டையும், தான் என்கின்றது. கட்டையைக் கள்ளன் என்றாற்போலும், பழுதையைப் பாம்பு என்றாற்போலும், புத்திர தாராதிகளைத் தான் என்றாற்போலும், மயக்கமே அல்லாமல் உண்மை அல்ல. ஆகையினால், அஞ்ஞானகாலம் தொடங்கித் தான் அல்ல என்று காணப்பட்ட தத்துவங்கள்- 7, இப்போது இப்படி விவேகம் பண்ணின பின், தான் அல்ல என்று காணப்பட்ட தத்துவங்கள் - 28, ஆக இந்த 35 தத்துவங்களையும், அததற்குச் சொன்ன, குணம் குறிகளுடனே கூடக் காண்கின்ற அறிவானது, கடத்தைப் பார்க்கின்றவன் கடத்திற்குப் புறம்பாகவே இருந்து, கடத்தைப் பார்க்கின்றது போல, அவைகளை அறிகின்றது என்றும், முப்பத்தாறாம் தத்துவமாகிய அதுவே தான் என்றும், அதுவே பரமசிவம் என்றும், கலக்கமறத் தெளிந்தவனே சிவ தரிசனம் உடைய சீவன் முத்தன் என்று சொல்லப்படுவன் என்று உத்தரம்.
20. இப்படிப் பிரமமே தாம் என்றும், மற்றை முப்பத்தைந்து தத்துவங்களும் தமக்கு அந்நியம் என்றும், பிரித்து அறியாத அவிவேகிகள், அகங்காரக் கிரந்தியினாலே, புத்திர தாராதிகள் தபிக்கின்றதைத் தாம் தபிக்கிறோம் என்கிற மூடகரம் போல, இந்த இருபத்தெட்டினுடைய தொழில்களையும் தம் தொழில் என்று மயங்குகின்றபடியினாலே, இந்த இருபத்தெட்டினாலும் ஆர்ச்சிக்கப்பட்ட புண்ணிய பாவங்களினால் கட்டுப்பட்டு அந்தக் கர்மத்தின்படியே சனன மரணாதி சம்சாரத்திலே அடிபடுகிறோம் என்று மயங்குவர். பிரம சைதன்னியமே தான் என்றும், மற்றை முப்பத்தைந்தும் தான் அல்ல என்றும் தெளிந்த விவேகியானவன், அகங்காரக் கிரந்தி அற்றபடியினால் இந்த இருபத்தெட்டினுடைய தொழில்களையும் நான் செய்யவில்லை என்றும், இந்த இருபத்தெட்டும் புசிக்கின்றதை நான் புசிக்கவில்லை என்றும், திடப்படத்தேறி மயக்க மற்று இருக்கின்றபடியினால், இந்த இருபத்தெட்டினாலும் ஆர்ச்சிக்கப்பட்ட புண்ணிய பாவங்களினின்றும் விடுபட்டுக் கர்மம் இல்லாதபடியினால், சனன மரணாதி சம்சாரம் இல்லாமல், முத்தனாய்ப் பிரம மாத்திரமாகவே இருப்பன். இவனைச் சீவன் முத்தன் என்றும், திடப் பிரக்ஞன் என்றும், அதிவர்ணாச்சிரமி என்றும், குணாதீதன் என்றும் பகவற்பத்தன் என்றும், பிராமணன் என்றும் வாசிட்டம் முதலிய சாஸ்திரங்கள் முறையிடுகின்றன. சகலரும் இந்தத் தத்துவங்களை விசாரம் பண்ணி மோட்சம் அடையக் கடவர்.
நாநா சீவ வாதக் கட்டளை முற்றிற்று.
Comments