Kaivalya Navanitham 2(61 - 120)
கைவல்ய நவநீதம்
ஸந்தேஹம் தெளிதல் படலம்
பாடல் : 61
மனைவி லங்கறு மைந்தனே கற்பக மரம்கனல் புனல்மூ ன்றும்,
தனைய டைந்தவர் வறுமையும் சீதமும் தாகமும் தவிர்த்தாளும்,
அனைய ஈசனும் அடைந்தவர்க்கு அருள்செய்வன் அகன்றவர்க்கு அருள்செய் யான்,
இனைய குற்றங்கள் எவர்குற்றம் ஆகுமென் றெண்ணிநீ அறிவாயே.
பொருள் :
மனை விலங்கு அறும் மைந்தனே = குடும்பமாகிய (ஸம்ஸாரத் தடை) விலகப்பெற்ற மகனே,
கற்பக மரம் கனல் புனல் மூன்றும் = கற்பக விருக்ஷம், நெருப்பு, நீர் ஆகிய மூன்றும் (பாரபக்ஷமில்லாமல்),
தனை அடைந்தவர் வறுமையும் சீதமும் தாகமும் தவிர்த்தாளும் = தனை நெருங்கி வந்தவர்களின் வறுமையையும், குளிரையும், தாஹத்தையும் (முறையே) நீக்கிக் காக்கும்.
அனைய ஈசனும் = அவை போல ஈச்வரனும்
அடைந்தவர்க்கு = (தான் அருளிய தர்மத்தின்படி வாழ்ந்து) தன்னை சரணம் அடைபவர்களுக்கு (பாரபக்ஷமற்று),
அருள்செய்வன் = அருள்புரிவான்,
அகன்றவர்க்கு அருள் செய்யான் = (விரோதித்து தன் தர்மத்தை விட்டு) விலகியவர்களுக்கு அருள் செய்ய மாட்டான்.
இனைய குற்றங்கள் = இத்தன்மையதான குற்றங்கள்,
எவர் குற்றம் ஆகும் என்று = யாருடைய குறை ஆகும் என்று,
எண்ணி நீ அறிவாயே = என்று நீ சிந்தித்துப் புரிந்து கெள்வாயாக!
பாடல் : 62
ஒன்று கேள்மக னேபுமான் முயற்சியால் உறைத்துமா நுடர்க்கு ஈசன்,
நன்று செய்யவே காட்டிய நூல்வழி நடந்துநல் லர்பின்னே, சென்று துட்டவா தனைவிட்டு விவேகராய்ச் செனித்தமாயை யைத்தள்ளி,
நின்று ஞானத்தை அடைந்தவர் பவங்கள்போம் நிச்சயம் இதுதானே.
பொருள் :
மகனே = மைந்தனே,
ஒன்று கேள் = { சகல ஞான சாஸ்த்ரங்களின் ஸாரமான) ஒரு உபதேசத்தை (சொல்கிறோம்) கேட்பாயாக,
புமான் முயற்சியால் உறைத்து = மனிதன் முயற்சியால் நிலை பெற்று,
மாநுடர்க்கு ஈசன் நன்று செய்யவே = மனிதர்களுக்கு ஈச்வரன் நன்மை செய்வதற்காகவே,
காட்டிய = அருளிச் செய்த,
நூல்வழி நடந்து = வேதத்தின் (மூன்று கர்மம், உபாஸனை, ஞானம் எனும்) வழியில் ஸாதனைகளைப் பின்பற்றி,,
நல்லர் பின்னே சென்று = நல்லவர்கள் காட்டிய அறவழியின் பின்னே சென்று வாழ்ந்து,
துட்ட வாதனை விட்டு = விருப்பு, வெறுப்பு போன்ற கெட்ட வாஸனைகளை நீக்கிவிட்டு,
விவேகராய் = (குருவுபதேசத்தால்) ஆத்ம அநாத்ம விவேகம் உடையவராகி,
செனித்த மாயையைத் தள்ளி = அவிவேகத்தால் உண்டான வேற்றுமை உணர்வை நீக்கி,
நின்று = (தன் அநுபூதியில் சிவோகம் என்று) நின்று,
ஞானத்தை அடைந்தவர் = (ஸந்தேகம் இன்றிய பிரஹ்ம ஆத்ம ஐக்கிய) ஞானத்தைப் பெற்றவருடைய,
பவங்கள் போம் = பிறவிகள் நீங்கிவிடும்.
இதுதானே நிச்சயம் = இதுவே (ச்ருதி, ஸ்ம்ருதிகளின்) சித்தாந்தமாகும்.
பாடல் : 63
இந்த ஞானந்தான் வருவதெப் படியெனில் இடைவிடா விசாரத்தால்,
வந்த டைந்திடும் விசாரந்தான் ஏதெனில் மனாதியாம் சரீரத்தில்,
இந்த நானெவன் சித்தெது சடமெது இரண்டுமொன் றாக்கூடும்,
பந்த மேதுவீ டேதென உசாவுதல் பகர்விசா ரமதாகும்.
பொருள் :
இந்த ஞானந்தான் = (பிறவி நீக்கத்திற்குக் காரணமான) இந்த ஆத்மஞானமானது,
வருவது எப்படி எனில் = வரும் வழி எது என்று நீ கேட்பாயாகில்,
இடைவிடா விசாரத்தால் = தொடர்ச்சியாக நீண்ட காலம் விருப்பத்தோடு செய்யும் சாஸ்த்ர ஆராய்ச்சியினாலே,
வந்து அடைந்திடும் = (ஆத்ம ஞானமானது) மனதில் தோன்றி நிற்கும்.
விசாரந்தான் ஏதெனில் = விசாரம் என்பது என்ன என்று கேட்பாயாகில்,
இந்த மனாதியாம் சரீரத்தில் = இம்மனம் முதலாகிய மூவுடல்களில்,
நான் எவன் = நான் என்ற சொல்லின் பொருள் யாது?,
சித் எது = இவைகளில் சித்தாக இருப்பது எது?,
சடம் எது = சடமானது எது?
இரண்டும் ஒன் றாக் கூடும் பந்தம் ஏது = சித் ஜடங்கள் இரண்டும் (தம் தாயப் பிண்டம் போல) ஒன்றாகச் சோ.கின்ற பந்தம் எது?,
வீடு ஏது ? = மோக்ஷம் என்பது யாது?,
என உசாவுதல் = என ஆராய்தல்,
பகர் விசாரம் அது ஆகும் = சாஸ்த்ரங்களாலும் பெரியோர்களாலும் கூறப்படும் விசாரம் என்பதன் பொருளாகும்.
பாடல் : 64
போன சன்மங்கள் தமிலநுட் டித்தநற் புண்ணிய பரிபாகம், ஞான மாக்குமே விசாரமேன் என்றிடில் நாமுரைத் திடக்கேளாய்,
ஆன புண்ணியம் ஈசுரார்ப் பணம்செயின் அசுசிபோம் சுசியாகும்,
மான தம்பினை விசாரித்து ஞானத்தை மருவுமென் றறிவாயே.
பொருள் :
போன சன்மங்கள் தமில் அநுட்டித்த = சென்ற பிறவிகளில் செய்த,
நல் புண்ணிய பரிபாகம் = நல்ல செயல்களின் விளைவாகத் தோன்றும் புண்ணியமானது,
ஞானம் ஆக்குமே = ஞானம் தோன்றும்படிச் செய்யுமே,
விசாரம் ஏன் என்றிடில் = சாஸ்த்ர சிரவண வாயிலாக ஆத்ம அநாத்ம ஆராய்ச்சி ஏன் செய்ய வேண்டும் என்று கேட்பாயாகில்,
நாம் உரைத்திடக் கேளாய் = அதற்கு நாம் கூறும் பதிலைக் கேட்பாயாக!
ஆன புண்ணியம் ஈசுர அர்ப்பணம் செயின் = தன் தர்மத்தை ஈச்வர அர்ப்பணமாகச் செய்தால்,
அசுசிபோம் சுசிஆகும் = (மனதிலுள்ள காமம் முதலான) அழுக்குகள் நீங்கும் (மனம்) தூய்மை ஆகும்,
மானதம் பினை விசாரித்து = தூய்மையான அம்மனமானது (தத், த்வம் பதங்களை குருவாயிலாக) ஆராய்ந்து,
ஞானத்தை மருவும் = ஞானத்தை அடையும்,
என்று அறிவாயே = என்று அறிந்துகொள்வாயாக.
பாடல் : 65
பத்தி யும்வயி ராக்கிய மும்பர லோகமும் அணிமாதி,
சித்தி யும்தவ நிட்டையும் யோகமும் தியானமும் சாரூப,
முத்தி யும்தரும் விசித்திர கருமங்கள் மோகம்மாத் திரம்தள்ளும்,
புத்தி தந்திடல் அருமையோ விசாரம்ஏன் புண்ணிய குருமூர்த்தி.
பொருள் :
பத்தியும் = இறைவனிடத்தில் அன்பும்,
வயிராக்கியமும் = அனைத்திலும் பற்றின்மையும்,
பரலோகமும் = சொர்க்கலோகமும்,
அணிமாதி சித்தியும் = அணிமா முதலான அஷ்ட சித்திகளும்,
தவ நிட்டையும் = தவவுறுதியும்,
யோகமும் = யம நியமாதி அஷ்டாங்க யோகமும்,
தியானமும் = ஸகுண, நிர்குணத் தியானமும்,
சாரூப முத்தியும் = சாரூப முக்தியும்,
தரும் விசித்திர கருமங்கள் = ( ஆகியவற்றைக்) கொடுக்கும் விதவிதமான கர்மங்கள்,
மோகம் மாத்திரம் தள்ளும் = (தன்னை ப்ரஹ்மமாக அறியாத) அறியாமையை மட்டுமே போக்கும்,
புத்தி தந்திடல் அருமையோ = ஞானத்தைத் தந்திடுதல் இயலாததா?
விசாரம் ஏன் = (குருவாயிலாக வேதாந்த சாஸ்த்ரங்ளைக் கேட்டு ஆராயும்) விசாரம் எதற்காக?
புண்ணிய குருமூர்த்தி = (எனும் ஐயம் தீர்க்க வேண்டுகிறேன்) புண்ணிய வடிவான குருநாதரே!பாடல் : 66
வேடம் மாறிய பேர்களை அறியவே வேண்டினால் மகனேகேள்,
கூடம் ஆமவர் சுபாவங்கள் சீலங்கள் குறிகளாய்ந் தறியாமல்,
ஓடி யும்குதித் தும்தலை கீழ்நின்றும் உயர்ந்தகம் பத்தேறி,
ஆடியும்பல கருமங்கள் செய்யினும் அவருண்மை தெரியாதே.
பொருள் :
மகனே கேள் = மைந்தனே, இதனைக் கேட்பாயாக!
வேடம் மாறிய பேர்களை = மாறுவேடத்தில் இருக்கும் மனிதர்களை,
அறியவே வேண்டினால் = (அவர்கள் உண்மையில் யார் என்று) அறிய விரும்பினால்,
கூடம் ஆம் அவர் = மறைந்திருப்பவையான அவரது,
சுபாவங்கள் = குணங்களையும்,
சீலங்கள் = ஒழுக்கங்களையும் (நடத்தைகளையும்),
குறிகள் = அடையாளங்களையும்,
ஆய்ந்து அறியாமல் = (அறிவைக் கொண்டு அவர் இன்னவரென்று) ஆராய்ந்து அறியாமல்,
ஓடியும் = (கால் வலிக்க நீண்டதூரம்) ஓடியும்
குதித்தும் = (உரத்திலிருந்து) குதித்தும்,
தலைகீழ் நீன்றும் = தலைகீழாக கால் மேலாக நின்றும்,
உயர்ந்த கம்பத்து ஏறி ஆடியும் = உயர்ந்த கத்தின் மேல் ஏறி கூத்தாடியும்,
பல கருமங்கள் செய்யினும் = இன்றும் அநேக செயல்களைச் செய்தாலும்,
அவர் உண்மை தெரியாதே = வேடம் மாறியவர் யார் எனும் உண்மை விளங்காது.
பாடல் : 67
இன்ன வாறந்தப் பிரமத்தை அறிவிக்கும் இலக்கணத்தால் வேதம்,
சொன்ன ஞானமும் விசாரத்தால் வருமன்றிச் சுருதிநூல் படித்தாலும்,
அன்ன தானங்கள் தவங்கள்மந் திரங்கள் ஆ சாரங்கள் யாகங்கள்,
என்ன செய்யினும் தன்னைத்தான் அறிகின்றது இவைகளால் வாராதே.
பொருள் :
இன்னவாறு = இந்த உதாரணப்படி,
அந்தப் பிரமத்தை = (பஞ்சகோசங்களோடு சேர்ந்து அவையே தானாகத் தோற்றும்) அந்த ப்ரஹ்மமாகிய ஆத்மாவை,
இலக்கணத்தால் = (சொரூபம், தடஸ்தம், அதத்வியாவிருத்தி)
எனும் மூன்றுவித இலக்கணங்களால்,
அறிவிக்கும் = அதிகாரிக்குத் தெரிவிக்கும்,
வேதம் சொன்ன ஞானமும் = வேதங்களால் விவரிக்கப்படும் (ப்ரஹ்ம ஆத்ம ஐக்கிய) ஞானமும்,
விசாரத்தால் வரும் அன்றி = (63 ம் செய்யுளில் கூறிய) விசாரத்தால் வருமே அல்லாமல்,,
சுருதி நூல் படித்தாலும் = வேத சாஸ்த்ரங்களை (வெறுமனே) கற்றாலும்,
அன்னதானங்கள் = அன்னதானம் முதலான தானங்களும்,
தவங்கள் = விரதங்களும்,
மந்திரங்கள் = மந்திர ஜபங்களும்,
ஆசாரங்கள் = அறவழியிலான நடத்தையும்,
யாகங்கள் = வேள்விகளும்,
என்ன செய்யினும் = ( ஆகிய இவைகளில்) என்ன செய்தாலும்,
தன்னைத் தான் அறிகின்றது = தன்னை (ஆத்மா வென்று) தான் அறியும் ஞானம்,
இவைகளால் வாராதே = இவற்றால் உளதாகாது.
பாடல் : 68
துளங்கு தர்ப்பணம் அழுக்கறக் கைக்கொண்டு துலக்கினால் போமன்றி,
விளங்கு புத்தியால் உலகிலார் துலக்கினார் விமலதே சிகமூர்த்தி,
களங்க மாகுமஞ் ஞானமும் அப்படிக் கருமத்தால் கழுவாமல், உளங்கு றித்தஞா னத்தினால் எப்படி ஒழியுமீ தருள்வீரே.
பொருள் :
துளங்கு தர்ப்பணம் அழுக்கு அற = ஒளிர்கின்ற கண்ணாடியில் ஏறிய அழுக்கு நீங்க,
கைக்கொண்டு துலக்கினால் போமன்றி = (அதை அகற்றவல்ல ஸாதனங்களைக்) கையில் கொண்டு துடைத்தால் போகுமே அன்றி,,
விளங்கு புத்தியால் = விளங்குகின்ற அறிவினால்,
உலகில் துலக்கினார் ஆர் = உலகத்தில் துடைத்தவர் யார்? (ஒருவருமில்லை),
விமல தேசிக மூர்த்தி = அவித்யாமலமற்ற குருநாதரே,
களங்கம் ஆகும் அஞ்ஞானமும் = களங்கமாகிய அவித்யையும்,
அப்படி = அவ்வுதாரணப்படி,
கருமத்தால் கழுவாமல் = கர்மத்தால் நீக்கப்படாமல்,
உளம் குறித்த ஞானத்தினால் = மனத்தினால் வரும் மித்யா எனும் ஞானத்தினால்,
எப்படி ஒழியும் = எவ்வாறு நீங்கும்,
ஈது அருள்வீரே = இதனை விளக்கி அருள்வீராக!
பாடல் : 69
தர்ப்ப ணத்தினில் களிம்புவாஸ் தவமலம் சகசமா தலின்மைந்தா,
கற்ப ளிங்கினில் கருநிறம் சகசமாக் கறுத்தன்று ஆரோபம்,
தர்ப்ப ணத்தினில் அழுக்கற வேண்டினால் சாதனத் தொழில் வேண்டும்,
கற்ப ளிங்கில்ஆ ரோபமே கறுப்பென்று கண்டிட மனம்போதும்.
பொருள் :
தர்ப்பணத்தினில் களிம்பு = (செம்புக்) கண்ணாடியிலுள்ள களிம்பு,
வாஸ்தவ மலம் சகஜம் ஆதலின் = உண்மை அழுக்காகவும், உடன்பிறந்ததாகவும் இருக்கிறது ஆகையால்,
மைந்தா = மகனே,
கற்பளிங்கினில் கருநிறம் = பளிங்குக் கல்லில் (ஸ்படிகக்கல்) தோன்றும் கருப்பு நிறம்,
சகசமாக் கறுத்தன்று = இயல்பாகக் கருத்திருப்பதல்ல,
ஆரோபம் = பொய்யாக வந்ததாகும்,
தர்ப்பணத்தினில் அழுக்கற வேண்டினால் = கண்ணாடியிலுள்ள களிம்பைப் போக்க வேண்டுமென்றால்,
சாதனத் தொழில் வேண்டும் = அதனைப் போக்க வல்ல சாதனமாகிய செயல் வேண்டும்,
கற்பளிங்கில் ஆரோபமே கறுப்பு என்று கண்டிட = படிகக்கல்லில் உள்ள கருப்பு பொய்யானது என்று அறிந்திடுவதற்கு,
மனம்போதும் = அறிவொன்றே போதும்.
பாடல் : 70
இங்கும் அப்படிச் சச்சிதா நந்தத்தில் இடர்சடம் பொய்மூன்றும்,
தங்கும் மாயையின் கற்பிதம் அன்றியே சகசவாஸ் தவமன்றே,
பங்க மாகுமஞ் ஞானத்தைக் கருமங்கள் பகைசெயாது உறவாக்கும்,
துங்க ஞானமே கருமவஞ் ஞானத்தைச் சுடுகின்ற நெருப்பாமே.
பொருள் :
இங்கும் = உதாரணத்தைப் போலவே இங்கும் (தார்ஷ்டாந்தத்திலும்),
அப்படி = படிகக்கல்லில் போல,
சச்சிதாநந்தத்தில் = ஸத்து, சித்து, ஆநந்த ஸ்வரூபமான ஆத்மாவாகிய தன்னில்,
பொய் சடம் இடர் மூன்றும் = அஸத்து, ஜடம், துக்கம் ஆகிய மூன்றும்,
தங்கும் மாயையின் கற்பிதமே அன்றி = (ஆத்மாவில் ஆரோபமாகத்) தங்கியிருக்கும் (மூவுடல் வடிவான) மாயையினுடைய கற்பிதமே அல்லாமல்,
சகச (ஸஹஜ) வாஸ்தவம் அன்றே = உன் பிறந்ததும் அன்று, ஸ்வரூபமும் அன்று,
பங்கம் ஆகும் அஞ்ஞானத்தை = நாசமாகும் தன்மையுடைய அஞ்ஞானத்தை,
கருமங்கள் பகைசெயாது = புண்ணிய கர்மங்கள் பகைத்து அழிக்காமல்,
உறவாக்கும் = தமக்கு உறவாக்கிக் கொள்ளும்.
துங்க ஞானமே = உயர்வான ப்ரஹ்ம ஆத்ம ஐக்ய ஞானமே,
கரும அஞ்ஞானத்தை = கர்மத்தையும், அஞ்ஞானத்தையும்,
சுடுகின்ற நெருப்பாமே = அழிக்கின்ற தீயாகும்.பாடல் : 71
மனைக்குள் வைத்தபண் டங்களை மறந்தவன் வருடநூறு அழுதாலும்,
நினைத்து ணர்ந்தபின் கிட்டுமப் படியிந்த நின்மல ஆன்மாவும்,
அனர்த்த மானதன் மறதியைக் கெடுத்துத்தன் னறிவினால் காணாமல்,
கனத்த கர்மங்கள் நூறும் செய்யினும் காணுமோ காணாதே.
பொருள் :
மனைக்குள் வைத்த பண்டங்களை = வீட்டினுள் வைத்த (அல்லது புதைத்து வைத்த) பொருட்களை,
மறந்தவன் = வைத்தவிடம் மறந்த மனிதன்,
வருடநூறு அழுதாலும் = நூறு வருடங்கள் அழுது புலம்பினாலும் (கிடைக்காது),
நினைத்து உணர்ந்த பின் கிட்டும் = வைத்த இடத்தை யோசித்து அறிந்த பின்னரே கிடைக்கும்,
அப்படி = அது போலவே,
இந்த நின்மல ஆன்மாவும் = (யாவர்க்கும் நான் என்று அபரோக்ஷமாக எப்பொழுதும் விளங்கிக்கொண்டிருக்கும்) இந்த தூய்மையான ஆத்மாவும்,
அனர்த்தம் ஆன = துன்பத்திற்குக் காரணமான
தன் மறதியைக் கெடுத்து = தனது அறியாமையை (ஆத்ம விசார அறிவினால்) அழித்து,
தன் அறிவினால் காணாமல் = தன் விவேகத்தினால் காணப்படாமல்,
கனத்த கர்மங்கள் = சுமையாகிய கர்மங்கள்,
நூறு (யு)கம் செய்யினும் = அநேக யுகங்கள் செய்தாலும்,
காணுமோ காணாதே = காணப்படுமோ? காணப்படாது.
இந்த ஞானந்தான்(பாடல் 63) முதல் மனைக்குள் வைத்த (பாடல் 71) வரை ஞான சாதனம் கர்மமா ? அல்லது விசாரமா ? என்று எழுந்த சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
பாடல் : 72 (பிரமேய ஸந்தேங்கள்)
நன்மை யாம்குரு வேசுகம் தருவது ஞானமே எனும்வேதம்,
தன்ம பாவமிச் சிரங்களால் தேவர்கள் தருவிலங் குகள்மாந்தர்,
சென்ம மாகுவ சாதிஆ சாரமே செய்தவம் சுகமென்று,
கன்ம காண்டத்தில் விதித்ததென் விதித்துள காரணம் உரையீரே.
பொருள் :
குருவே = குருநாதரே,
நன்மையாம் சுகம் தருவது = ஒப்பற்ற இன்பத்தைத் தரவல்லது,
ஞானமே எனும் வேதம் = ப்ரஹ்ம ஆத்ம ஐக்ய ஞானமே என்று சொல்லும் வேதமானது,
தன்ம, பாவ, மிச்சிரங்களால் = புண்ய கர்மங்கள், பாப கர்மங்கள், புண்ய பாப கர்மங்களால்,
தேவர்கள் = தேவ (பிறவிகளும்)
விலங்குகள் தரு = விலங்குகள் முதல் மரம் வரையிலும்,
மாந்தர் சென்மம் = மனிதப் பிறவிகளும்,
ஆகுவ = உண்டாகும் என்று,
சாதி ஆசாரமே செய் தவம் = அவரவர் பிறப்பு ஒழுக்கமே செய்யத்தக்க தவமாம் என்றும்,
சுகம் என்று = இதனாலே சுகம் உண்டாகும் என்றும்,
கன்ம காண்டத்தில் = வேத பூர்வ பாகத்தில்,
விதித்தது என் = விதித்திருப்பது யாது கருதி,
விதித்துள = இப்படியாக விதித்திருக்கின்ற,
காரணம் உரையீரே = காரணத்தை அருளிச் செய்வீராக!
பாடல் : 73
தினமும் மண்நுகர் பிள்ளைநோய்க்கு இரங்கியே தீம்பண்டம் எதிர்காட்டிக்,
கனமருந்துகள் ஒளித்துவைத் தழைக்கின்ற கருணைநற் றாய்போல,
மனைஅறங்கள்செய் மகங்கள்செய் நன்றென்று மலர்ந்தவா சகம்சொல்லும்,
நினைவு வேறுகாண் சுவர்க்ககா மிகளந்த நிண்ணயம் தெரியாரே.
பொருள் :
தினமும் = நாள்தோறும்,
மண் நுகர் பிள்ளை நோய்க்கு = ( உண்ணத் தகாத) மண் போன்றவற்றை உண்டதால் வந்த தன் குழந்தையின் நோய்க்கு,
இரங்கியே = அன்புடன்,
தீம்பண்டம் எதிர்காட்டிக் = ( அக்குழந்தைக்கு) இனிப்பான திண்பண்டங்களை முன்னே காட்டி,
கனமருந்துகள் ஒளித்து வைத்து = கசப்பான மருந்துகளை மறைத்து வைத்து,
அழைக்கின்ற = (பலமுறை) அழைக்கின்ற,
கருணை நற்றாய் போல = கருணையுடைய நல்ல அன்னையைப் போல,
மனை அறங்கள் செய் = இல்வாழ்க்கையிலிருந்து அறங்களைச் செய்வாயாக,
மகங்கள் செய் = யக்ஞங்களைச் செய்வாயாக,
நன்று என்று = இவற்றால் நன்மை உண்டாகும் என்று,
மலர்ந்த வாசகம் சொல்லும் = மலர்ச்சியான வாக்கியங்களை வேதங்கள் சொல்லும்,,
நினைவு வேறு காண் = ( இவ்வாறு கூறுகின்ற வேதங்களின்) கருத்து வேறானது என்று அறிவாயாக,
சுவர்க்க காமிகள் = ஸ்வர்க்க போகங்களில் ஆசையுடையவர்கள்,
அந்த நிண்ணயம் தெரியாரே = அந்த நிச்சயத்தை அறியார்கள்.
பாடல் : 74
போக மாருயிர் கண்டதை உண்பதும் புணர்வதும் இயல்பேகாண்,
ஆக மங்களும் சுபாவத்தை விதிக்குமோ அத்தனை தெரியாதோ.
காக மேகறுத் திடுநெருப் பேசுடு கசந்திடு வேம்பேநீ,
வேக வாயுவே அசையென ஒருவரும் விதித்திட வேண்டாவே.
பொருள்:
போகம் ஆர் உயிர் = (ஐம்புலன்களாலும்) போக விஷயங்களை நுகரும் ஜீவர்கள்,
கண்டதை உண்பதும் = விரும்பியதை உண்பதும்,
புணர்வதும் = அனுபவிப்பதும்,
இயல்பே காண் = இயற்கையே அன்றி வேறில்லை,
ஆகமங்களும் = வேதங்களும்,
சுபாவத்தை விதிக்குமோ = உயிர்ளுக்கு இயல்பாயுள்ள அவ்வருந்தல், பொருந்தல்களை (விலக்குதல் அல்லாமல்) விதிக்குமா?,
அத்தனை தெரியாதோ = (அனைத்தும் அறிந்த வேதங்களுக்கு) இதன் விளைவுகள் தெரியாதா?,
(ஸ்வபாவமான தர்மங்களுக்கு உதாரணம் கூறுகிறார்)
காகமே கறுத்திடு = காகமே நீ கருப்பாயிருப்பாயாக,
நெருப்பே சுடு = நெருப்பே நீ சுடுவாயாக,
வேம்பே நீ கசந்திடு = வேம்பே நீ கசந்திடுவாயாக,
வேக வாயுவே அசை = வேகமான காற்றே நீ வீசிடு,
என ஒருவரும் = என்று யாரொருவரும்,
விதித்திட வேண்டாவே = விதிக்க வேண்டுவது இல்லையே.
பாடல் : 75
கள்ளும் ஊனும்நீ விரும்பினால் மகங்கள்செய் காமத்தில் மனதானால்,
கொள்ளும் பெண்டொடு கலவிசெய் எனிலிவன் குறையெலாம் தொடான் என்றே,
தள்ளும் வேதத்தின் சம்மதம் சகலமும் தவிர்வதே கருத்தாகும்,
விள்ளு மிவ்விதி யென்னெனில் பூருவ நியமமாம் விதியன்றே.
பொருள் :
கள்ளும் ஊனும் நீ விரும்பினால் = மதுவும் மாம்சமும் நீ உண்ண விரும்பினால்,
மகங்கள் செய் = யாகங்கள் செய்,
காமத்தில் மனதானால் = பெண் போகத்தில் விருப்பமிருந்தால், ,
கொள்ளும் பெண்டொடு கலவிசெய் = திருமணம் புரிந்து அப்பெண்ணோடு கூடல் செய்,
எனில் இவன் = என்று நாம் (வேதம்) விதித்தால் இம்மனிதன்,
குறையெலாம் = மற்ற உணவுகளையும், பெண்களையும்
தொடான் தள்ளும் என்றே = தொடாமல் விலக்கி விடுவான் என்பதே,
வேதத்தின் சம்மதம் = வேதத்தின் எண்ணமாகும்.
சகலமும் தவிர்வதே கருத்து ஆகும் = (உண்மையில்) அனைத்தையும் விடச் செய்வதே அதன் நோக்கமாகும்.
விள்ளும் இவ்விதி என் எனில் = முன் சொன்ன செய் எனும் விதி எதற்கு என்று கேட்பாயாகில்,
பூருவம் நியமமாம் விதி = பூர்வபக்ஷமான விதி ஆகும்,
அன்றே = சித்தாந்தம் அன்றாம்.
பாடல் : 76
மதுஇ றைச்சிகள் உண்ணென்ற சுருதிபின் மணந்துபார் எனல்பாராய்,
மிதுன இச்சையும் புத்திரோற் பத்தியால் விரும்பென்ற விதிபாராய்,
இதையும் விட்டொழி யதிநயிட் டிகவந்நிக் கிகழ்ச்சிஅற் றதும்பாராய்,
அதைஅறிந்துகன் மங்களா சைகள்ஒழிந்து ஆநந்தம் அடைவாயே.
பொருள் :
மது இறைச்சிகள் உண் என்ற சுருதி = (மதுவும் மாம்சமும் உண்ணும் ஆசை வந்தால் நரக துக்கம் வாராமல் இருக்க, யக்கும் செய்து பின் ) மது, இறைச்சிகள் உண் என்று சொன்ன வேதம்,
பின் = பின்னர்,
மணந்து பார் எனல் பாராய் = (யஜ்ஞதலத்தில் மது, மாம்சங்களை உண்ணாமல்) மோந்து மட்டும் பார் என்று கூறியிருப்பதை சிந்தித்துப் பார்ப்பாயாக,
மிதுன இச்சையும் புத்திர உற்பத்தியால் விரும்பு என்ற விதி பாராய் = இணையும் ஆசையையும் மக்கட்பேற்றிற்காக விரும்பு என்ற வேத விதி இருப்பதையும் சிந்தித்துப் பார்ப்பாயாக.
(பாலியல் இச்சையைப் போக்கிக்கொள்ள ஒரு பெண்ணை விவாகம் செய்து என்றும், குறிப்பிட்ட திதிகளில் மட்டும் என்று விதி வகுத்தும், பின்னர் புத்ரோத்பத்திக்காக என்றும் கட்டுப்படுத்தியும் வேதம் விதித்திருப்பதை பார்க்க வேண்டும்.)
இதையும் விட்டொழி = மதுவையும், மாம்சத்தையும். மனைவி புத்ராதிகளையும் விட்டொழி என்ற விதியையும் பார்ப்பாய்,
யதி நயிட்டிக வந்நிக்கு இகழ்ச்சி அற்றதும் பாராய் = (ஆசைகளையும், யக்ஞாதி கர்மங்களையும் துறந்த ) ஸந்நியாஸி, நைஷ்டிக பிரஹ்மச்சாரிகளை இகழாமல் இருப்பதையும் ஆராய்ந்து பாராய்.
அதை அறிந்து = உலக சுகங்களை (அநுபவிக்க ஸாதனம் சொல்லும் வேதம்) அவற்றை நிந்தித்திருப்பதையும் அறிந்து,
அவற்றை விடுதலைப் புகழ்தலையும் அறிந்து,
கன்மங்கள் ஆசைகள் ஒழிந்து = (யஜ்ஞாதி ஸகல) கர்மங்களையும், (மது, மாம்ச, ஸ்திரி,புத்ர, தனாதி ) ஆசைகளையும் ஒழித்து,
ஆநந்தம் அடைவாயே = சிரவணாதி ஸாதனங்களைப் பின்பற்றி ஆத்ம ஞான வாயிலாக) ஒப்பற்ற ஆநந்தத்தை அடைவாயாக.
பாடல் : 77
உலக மானவஞ் ஞானமும் கருமமும் உறவென்ற வழிகூடும்,
பலவு மானவஞ் ஞானமும் ஞானமும் பகைஎன்ப துளதானால்,
நிலவி லேமறுப் போலவஞ் ஞானமும் நிமலஞா னத்தோடே,
குலவி நின்றிந்தச் சிருட்டிகள் செய்யவும் கூடுமோ குருமூர்த்தி.
பொருள் :
உலகம் ஆன அஞ்ஞானமும் கருமமும் = உலக ரூபமான அஞ்ஞானமும் கர்மங்களும் ,
உறவு என்ற வழி கூடும் = ஒன்றற்கொன்று (பகையன்று,) உறவு என்று கூறுவது (70வது செய்யுள்) பொருந்தும்,
பலவும் ஆன அஞ்ஞானமும் ஞானமும் = பலவும் தானான அஞ்ஞானமும் ஞானமும்,
பகை என்பது உளதானால் = விரோதமானது என்பது உண்மையானால்,
நிலவிலே மறுப்போல = சந்திரனிடத்தில் இருக்கும் களங்கம் போல,
அஞ்ஞானமும் நிமலஞானத்தோடே குலவி நின்று = அஞ்ஞானமும் நிர்மலமாகிய ஞானத்தோடு சேர்ந்திருந்து,
இந்தச் சிருட்டிகள் செய்யவும் கூடுமோ = இந்த உலகப் படைப்புகளைப் பண்ணவும் முடியுமா?
குருமூர்த்தி = குருநாதரே!
பாடல் : 78
சொரூப ஞானமும் விருத்திஞா னமுமென்று சோதிஞானமும் இரண்டாம்,
சொரூப ஞானமே விருத்தியின் ஞானமாய்த் தோன்றும்வே றிலைமைந்தா,
சொரூப ஞானம்அஞ் ஞானசத் துருவன்று சுழுத்தியில் கண்டாயே,
சொரூப ஞானத்தில் மருவுமஞ் ஞானத்தைச் சுடும்விருத் தியின்ஞானம்.
பொருள் :
மைந்தா = ஸத்புத்திரனே,
சோதிஞானமும் = பிரகாசமான ஞானமானதும்,
சொரூபஞானமும் விருத்திஞானமும் என்று இரண்டு ஆம் = ஸ்வரூபஞானம் எனவும் விருத்திஞானம் எனவும் இரண்டு வகை ஆகும்.,
சொரூப ஞானமே = ஸ்வரூபஞானம் தான்,
விருத்தியின் ஞானமாய்த் தோன்றும் = விருத்திஞானமாக உண்டாகும்,
வேறிலை = (விருத்தி ஞானம்) வேறானது இல்லை,
(ஆனாலும்),
சொரூபஞானம் அஞ்ஞான சத்துரு அன்று = ஸ்வரூப ஞானம் அஞ்ஞானத்திற்கு பகையானது இல்லை,
சுழுத்தியில் கண்டாயே = ஆழ்வுறக்கத்தில் (இரண்டும் சேர்ந்திருக்க அநுபவத்தில்) பார்க்கிறாய் அல்லவா?
சொரூபஞானத்தில் மருவும் அஞ்ஞானத்தை = ஸ்வரூப ஞானத்தைச் சர்ந்திருக்கும் அஞ்ஞானத்தை,
விருத்தியின் ஞானம் சுடும் = விருத்தி ஞானம் எரிக்கும்.
(ஆகவே, விருத்திஞானமும் அஞ்ஞானமுமே எதிரிகளாகும்.)
பாடல் : 79
துருத்தி மாயையைச் சுழுத்தியில் சுடாததற் சொரூபஞா னம்தானே,
விருத்தி ஞானமாய்ச் சுட்டதெப் படிஎனில் வெய்யிலால் உலகெங்கும்,
பரித்த சூரியன் சூரிய காந்தத்தில் பற்றிஅக் கினியாகி,
எரித்த வாறுபோல் சமாதியில் விருத்தியால் எரிக்கும்என் றறிவாயே.
பொருள் :
துருத்தி மாயையை = துருத்தியைப் போலும் (சுருங்கி விரியும்) மாயையை,
சுழுத்தியில் சுடாத தற்சொரூப ஞானம் தானே = ஆழ்வுறக்கத்தில் அழித்திடாத தன் ஸ்வரூப ஞானமே,
விருத்தி ஞானமாய்ச் சுட்டது எப்படி எனில் = (தற்சொரூபத்தைப் பற்றிய) விருத்தி ஞானமாய் இருக்கும் பொழுது (அஞ்ஞானத்தை) எரித்து அழிப்பது எப்படி என்று கேட்பாயாகில்,
வெய்யிலால் உலகெங்கும் பரித்த சூரியன் = தன் வெப்பத்தால் உலக மனைத்தையும் காக்கும் சூரியன்,
சூரியகாந்தத்தில் பற்றி அக்கினியாகி எரித்தவாறு போல் = சூரியகாந்தக் கல்லில் பற்றியிருந்து தீயாகி எரிப்பது போல,
சமாதியில் விருத்தியால் எரிக்கும் என்றறிவாயே = சமாதியில் அகண்டாகார ஞானவிருத்தியால் அவித்யையை எரிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!
பாடல் : 80
அருளும் ஐயனே திரிவித கரணத்தால் ஆகிய தொழிலெல்லாம்,
கரும மல்லவோ விருத்திஞா னமுமந்தக் கரணகா ரியமன்றோ,
உரிய கர்மமஞ் ஞானத்தைக் கெடுக்குமென் றோதினால் ஆகாதோ,
பெரிய ஞானமென் றதற்கொரு பெயரிட்ட பெருமையை உரையீரே.
பொருள் :
அருளும் ஐயனே = அடியேனின் ஐயங்கள் அனைத்தையும் நீக்கி அருளும் ஸற்குருவே,
திரிவித கரணத்தால் = மனம், வாக்கு, காயம் எனும் முக்கரணங்களால்,
ஆகிய தொழிலெல்லாம் = செய்யப்படும் வேலைகளை எல்லாம்,
கருமம் அல்லவோ = கர்மம் அல்லவா?,
விருத்திஞானமும் = (அஹம் ப்ரஹ்மம் எனும்) விருத்தி ஞானமும்,
அந்தக்கரண காரியம் அன்றோ = மனதின் (பரிணாமம் ஆதலால்) செயல் அல்லவா,
உரிய கர்மம் அஞ்ஞானத்தைக் கெடுக்கும் = (அஹம் ப்ரஹ்மாஸ்மி எனும்) மானஸ கர்மம் அறியாமையை அழிக்கும்,
என்று ஓதினால் ஆகாதோ = என்று சொன்னால் (அது சாஸ்திரத்திற்கும், பெரியோர்களுக்கும் ஸம்மதம்) ஆகாதா?,
பெரிய ஞானம் என்று = மஹத்தான ஞானம் என்று,
அதற்கொரு பெயரிட்ட பெருமையை = அதற்கொரு பெயர் வைத்த காரணத்தை,
உரையீரே = விளக்கி அருள்வீராக!
பாடல் : 81
விருத்தி ஞானமந் தக்கர ணத்தொடு விருத்தியா கிலும்மைந்தா,
ஒருத்தி மக்களே தங்களிற் பகைக்கின்ற துலகெங்கும் கண்டோமே,
கருத்த னாகிய புருடதந் திரங்களாம் கருமங்கள் அவைபோல,
அருத்த ஞானமோ புருடதந் திரமன்று வஸ்துதந் திரம்ஆமே.
பொருள் :
மைந்தா = மகனே,
விருத்தி ஞானம் = (நான் பிரஹ்மமாக இருக்கிறேன் எனும்) விருத்திஞானமானது,
அந்தக்கரணத்தொடு விருத்தியாகிலும் = மனதின் பரிணாமம் (செயல்) ஆனாலும்,
ஒருத்தி மக்களே = ஒரு அன்னையின் புதல்வர்களே,
தங்களில் பகைக்கின்றது = தங்களுக்குள் மாறுபட்டு இருப்பதை,
உலகு எங்கும் கண்டோமே = உலகில் எல்லா இடங்களிலும் பார்க்கின்றோம்,
கருமங்கள் = செயல்கள் ஆனவை,
கருத்தன் ஆகிய புருட தந்திரங்கள் ஆம் = கர்த்தா - செய்பவன் - ஆகிய மனிதனின் சுதந்திரம் ஆகும்.
அவைபோல = செயல்கள் போல,
அருத்த ஞானமோ = விஷயங்களைப் பற்றிய அறிவோ,
புருடதந்திரம் அன்று = மனிதனின் வசமானவை இல்லை,
வஸ்து தந்திரம் ஆமே = விஷயத்தின் வசமானவை ஆகும்.
பாடல் : 82
வகுத்த கருமங்கள் செய்யவும் தவிரவும் மற்றொன்றாக் கவும்கூடும்,
மிகுத்த ஞானமப் படியன்று தியானமும் விவேகஞான மும்வேறே,
செகத்தில் ஒன்றையொன் றாவிவன் பாவிக்கும் தியானங்கற் பிதயோகம்,
முகத்த மாக்கண்ட ஞானமே வாஸ்தவம் மோகமாய் மயங்காதே.
பொருள் :
வகுத்த கருமங்கள் = (சாஸ்த்ர நூல்களில்) விதித்த மானஸக்கிரியா ரூபமான உபாஸனைகள்,
செய்யவும் = தனக்கு விருப்பமானதைச் செய்யவும்,
தவிரவும் = விருப்பமில்லாவிடில் செய்யாமல் தவிர்க்கவும்,
மற்று ஒன்று ஆக்கவும் = வேறு விதமாகச் செய்யவும்,
கூடும் = இயலும் (இதில் முடிவெடுக்கும் சுதந்திரம் மனிதனுக்கு உண்டு),
மிகுந்த ஞானம் அப்படி அன்று = மேலான ஞானமானது (பிரமாண, பிரமேயங்களின் வசமாக இருப்பதால் செய்யவும், தவிர்க்கவும், மாற்றிச் செய்யவும்) கர்த்தாவினது சுதந்திரத்தில் உள்ளது இல்லை,
தியானமும் விவேகஞானமும் வேறே = (மானஸக்கிரியா ரூபமான) தியானமும், (விசாரஜந்நிய) விவேகஞானமும் வேறானதுதான்,
செகத்தில் = உலகில்,
ஒன்றையொன்றா இவன் பாவிக்கும் தியானம் = ஒன்றை வேறொன்றாக இவன் பாவிக்கும் தியானமானது,
கற்பித யோகம் = கற்பித ஸாதனையாகும்,
முகத்தமாக் கண்ட ஞானமே வாஸ்தவம் = பிரத்யக்ஷமாகக் கண்ட ஞானமே உண்மையாகும்,
மோகமாய் மயங்காதே = இவற்றில் தெளிவில்லாதவனாகக் கலக்கத்தை அடையாதே.
பாடல் : 83
கண்ட றிந்தது ஞானம்கேட் டதுதனைக் கருதுபா வனையோகம்,
கண்ட பேர்சொலக் கேட்டது மறந்துபோம் கண்டது மறவாதே,
கண்ட வஸ்துமெய் தியானவஸ் துக்கள்பொய் கறுவிஅஞ் ஞானத்தைக், கண்ட அக்கணம் கொல்வது ஞானமே கருமமன்று றிவாயே.
பொருள் :
கண்டு அறிந்தது ஞானம் = ஒன்றை நேரே பார்த்து அனுபவித்து அறிவது ஞானத்தின் ஸ்வரூபம் ஆகும்,
கேட்டதுதனைக் கருது பாவனை யோகம் = (சாஸ்திரம், குரு சொல்லக் கேட்டு) கேட்ட அதனை மனதில் கேட்டபடியே எண்ணுவது தியான யோகத்தின் ஸ்வரூபம் ஆகும்,
கண்ட பேர் சொலக் கேட்டது மறந்து போம் = அனுபவித்துச் சொன்ன ஆசார்யர்கள் சொல்லக்கேட்டது மறந்து போய்விடும்,
கண்டது மறவாதே = பிரத்யக்ஷமாகக் கண்டு அனுபவித்தது ஒரு பொழுதும் மறக்காது.
கண்ட வஸ்து மெய் = ஞானத்தால் அறிந்த பொருட்கள் உண்மை,
தியான வஸ்துக்கள் பொய் = தியான விஷயமான ரூபங்கள் பொய்யாகும்,
கறுவி அஞ்ஞானத்தை = கோபித்து அஞ்ஞானத்தை,
கண்ட அக்கணம் = பார்த்த அப்பொழுதே,
கொல்வது ஞானமே = அதை அழித்து விடுவது விருத்திஞானமே ஆகும்,
கருமம் அன்று அறிவாயே = உபாஸனை எனும் மானஸ கர்மம் அல்ல என்று அறிவாயாக!
பாடல் : 84
சருவ முத்தியைத் தருகின்ற தியானமும் சத்திய மன்றென்றால்,
சருவ முத்தியும் சத்திய மன்றென்று சங்கியா தேநீகேள்,
உருவம் கேட்டவன் தியானிக்கும் பொழுதிலவ் வுருவம்வாஸ் தவமன்றே,
உருவ மாகுமப் பொழுதுகண் ணாற்கண்ட உருவம்வாஸ் தவமாமே.
பொருள் :
சருவ முத்தியைத் தருகின்ற தியானமும் = எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுதலையைத் தருகின்ற (நிர்குணப்பிரஹ்ம) தியானமும்,
சத்தியம் அன்று என்றால் = உண்மையல்ல என்று கூறினால்,
சருவ முத்தியும் சத்தியம் அன்று என்று = முற்றிலும் விடுபட்டு - ப்ரஹ்ம அவஸ்தான ரூபமும் - ப்ரஹ்மமாக இருக்கும் நிலையும் - உண்மை இல்லையென்று,
நீ சங்கியாதே = நீ ஐயமுறாதே,
கேள் = (இதைக்) கேட்பாயாக,
உருவம் கேட்டவன் = இறைவனின் உருவத்தை குரு, சாஸ்த்ரத்தின் வாயிலாகக் கேட்டு அறிந்தவன்,
தியானிக்கும் பொழுதில் = தியானம் செய்யும் வேளையில்,
அவ்வுருவம் வாஸ்தவம் அன்றே = அவ்வுருவம் (கற்பனையாகக் காணப்படுவதால்) உண்மையில்லை,
உருவம் ஆகும் அப்பொழுது = திடபாவனையால் அவ்வுருவமாய் மனம் ஆகும் பொழுது,
கண்ணால் கண்ட உருவம் = ( இறைவன் நேரே தோன்றி பிரத்யக்ஷம் ஆகும் பொழுது) கண்ணால் நேரே காணுகின்ற அவ்வுருவம்,
வாஸ்தவம் ஆமே = உண்மை ஆகும்.
(அது போலப் பிரஹ்மத்தைக், குரு வாயிலாக வேதாந்த சாஸ்த்ரத்தை விசாரம் செய்து அறிந்தவன், அதைத் தியானிக்கும் போது பாவனை மாத்திரமாக பிரஹ்மமாக இருப்பதால் ,அப்பாவனா ரூபப் பிரஹ்மம் உண்மையல்ல; தியானம் முதிர்கின்ற பொழுது ஏற்படும் ப்ரஹ்ம அவஸ்தான ரூபம் உண்மையாகும்.)
பாடல் : 85
சடம தாகிய தியானம்மெய் யாகிய சர்வமுத் தியைநல்கும்,
திடம தானதெப் படியெனில் அவரவர் தியானமே பிறப்பாகும்,
உடலமாசையால் தியானிக்கின் தியானித்த உடல்களா குவர் மைந்தா,
தொடர்ப வம்கெடச் சொரூபமே தியானிக்கில் சொரூபமா குவர்மெய்யே.
பொருள் :
சடமது ஆகிய தியானம் = பாவனையான நிர்க்குணத் தியானமானது,
மெய் ஆகிய சர்வ முத்தியை நல்கும் = உண்மையான விடுதலையைக் கொடுக்கும்,
திடமது ஆனது எப்படி எனில் = உறுதியை - நிச்சயத்தை - உடையது எப்படி என்றால்,
அவரவர் தியானமே பிறப்பாகும் = (மரண காலத்தில் இருக்கும் ) அவரவர் பாவனைக்கேற்பவே அடுத்த பிறவியானது உண்டாகிறது,
மைந்தா உடலம் ஆசையால் தியானிக்கின் = (ஆகவே, புத்திரனே, ஸகுணப் பிரஹ்ம அடைவின் ஆசையால் (ஸகுணப்பிரஹ்மத்தைத்) தியானம் செய்தால்,
தியானித்த உடல்கள் ஆகுவர் = தியானித்த ஸகுணப் பிரஹ்மம் ஆகுவார்கள்,
தொடர் பவம் கெட = அநாதியாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற பிறவியானது முடிவை அடைய,
சொரூபமே தியானிக்கில் = (நிர்குணப் பிரஹ்ம அடைவின் ஆசையோடு) ப்ரஹ்மமான ஆத்மஸ்வரூபத்தையே ஒருவன் தியானம் செய்தால்,
சொரூபம் ஆகுவர் = அந்நிர்க்குணப் பிரஹ்மமே ஆகுவர்,
மெய்யே = இது ஸத்தியமே.
பாடல் : 86
பிரம ரூபத்தைத் தியானித்த பேர்களும் பிரமமா குவரென்றால்,
நரச ரீரமாம் குரவனே விசாரமேன் ஞானமேன் என்னாதே,
பரம பாவனை பரோட்சமாம் பின்பந்தப் பரோட்சமே அபரோட்சம்,
திரவி சாரமாம் ஞானமாம் முத்தியாம் தீர்வைஈ தறிவாயே.
பொருள் :
பிரம ரூபத்தைத் தியானித்த பேர்களும் = நிர்குணப் பிரஹ்மத்தை தியானிக்கும் ஜீவர்களும்,
பிரமம் ஆகுவர் என்றால் = இறுதியில் பிரஹ்மம் ஆகுவார்கள் என்றால்,
நரசரீரம் ஆம் குரவனே = அருள் கொண்டு மனிதவுருவில் வந்திருக்கும் குருமூர்த்தியே,
விசாரம் ஏன் = சாஸ்த்ர விசாரம் எதற்காக ?
ஞானம் ஏன் = ஞானம் எதற்காக?,
என்னாதே = என்று நீ நினைக்காதே,
பரம பாவனை = பிரஹ்மத் தியானமானது,
பரோட்சம் ஆம் = (முன்னே தியானிக்கும்போது பிரதிபந்தத்தோடு கூடியிருப்பதால்) பரோக்ஷ ஞானம் ஆகும்,
பின்பு அந்தப் பரோட்சமே அபரோட்சம் = தியானித்த பின்னர் அந்த பரோக்ஷ ஞானமே (பிரதிபந்த நிவிர்த்தியால்) அபரோக்ஷ ஞானம் ஆகும்,
திர விசாரம் ஆம் = (அதுவே) திடமான விசாரமாகும்,
ஞானம் ஆம் = (அதுவே) அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானமும் ஆகும்.
முத்திஆம் = (அதுவே) மோக்ஷமும் ஆகும்,
ஈது தீர்வை அறிவாயே = இதுவே ஸித்தாந்தம் என்று அறிவாயாக!
பாடல் : 87
வீட தாம்பரி பூரண சொரூபத்தில் விருத்திஞா னமும்கூடிச்,
சேடமா கினால் அகண்டமாம் அநுபவ சித்தியெப் படியென்றால்,
சாடி நீர்மண்ணைப் பிரித்ததேற் றாம்பொடி தானும்மண் ணொடுமாயும்
ஊடி ஞானமும் அறிவிலா மையைக்கெடுத் தொக்கவே கெடுந்தானே.
பொருள் :
வீடதாம் பரிபூரண சொரூபத்தில் = முக்தி வடிவான பரிபூர்ண ப்ரஹ்ம சொரூபத்தில்,
விருத்தி ஞானமும் கூடி சேடம் ஆகினால் = அந்தக்கரணத்தில் அகண்டாகார எண்ண வடிவமான ஆத்மஞானமும் கூடி (த்வைத பிரபஞ்சம் விலகி) மிச்சமாக இருந்தால்,
அகண்டமாம் அநுபவ சித்தி = அத்வைத பிரஹ்மாநந்த அனுபவ ஸித்தி,
எப்படி என்றால் = எப்படி ஏற்படும் என்று கேட்பாயாகில்,
சாடிநீர் மண்ணைப் பிரித்த தேற்றாம் பொடி = குடத்தில் (மண்ணால் கலங்கி) உள்ள நீரைப் பிரித்த தேற்றாம் பொடி,
தானும் மண்ணொடு மாயும் = (மண்ணை நீக்கிக் கலங்கத்தைத் தெளிவித்து) அம்மண்ணோடு சேர்ந்து தானும் நீங்கி விடும், (அதுபோல),
ஞானமும் ஊடி அறிவிலாமையைக் கெடுத்து = தத்துவஞானமும் பகைத்து அஞ்ஞானத்தை அழித்து,
ஒக்கவே தானே கடும் = (அவ்வஞ்ஞானத்தோடு) கூடவே தானும் நீங்கிவிடும்.
பாடல் : 88
இந்த நிச்சய முத்தருள் அனுபவ மிருப்பதெப் படியென்றால்,
சிந்தை யற்றபூ மண்டல இராசனும் சிசுவும்போல் சுகமாவர்,
பந்த முத்திகள் மறந்துபோம் உண்டென்று பலர்சொலில் நகையாகும் (வர்)
அந்த ரத்தையுண் டுமிழ்ந்ததோர் கொசுகெனு மவர்களை நகையாரோ.
பொருள் :
இந்த நிச்சய அனுபவம் = இந்த நிச்சயமான அகண்ட அனுபவமானது,
முத்தருள் இருப்பது = ஜீவன்முக்தரிடத்தில் எவ்வாறு இருக்கும்,
எப்படி என்றால் = என்று நீ கேட்டால்,
சிந்தை அற்ற = கவலையற்ற,
பூமண்டல இராசனும் சிசுவும் போல் = அரசனையும் குழந்தையையும் போல சுகம் ஆவர் = ஆநந்தமாக இருப்பர்,
பந்த முத்திகள் மறந்து போம் = பந்த எண்ணமும் முக்தி எண்ணமும் இல்லாமல் போய்விடும்,
உண்டென்று = (ஆத்மாவுக்கு பந்தமும் முக்தியும்) உண்டு என்று,
பலர்சொலில் நகை ஆகும் (ஆவர்) = அறியாத பல (மதத்தவ)ர் சொன்னால் சிரிப்பு உண்டாகும் (சிரிப்பர்),
ஓர் கொசுகு = ஒரு கொசுவானது,
அந்தரத்தை உண்டு உமிழ்ந்தது = ஆகாயத்தை விழுங்கிப் பிறகு துப்பியது,
எனும் அவர்களை நகையாரோ = என்று கூறும் அறியாதவர்களை (பார்த்து யார்தான்) சிரிக்காமல் இருப்பார்கள்.
பாடல் : 89
மலடி மைந்தனும் தாணுவிற் புருடனும் வான்மலர் முடிசூடி,
இலகு கந்தர்ப்ப நகரிலே சுத்திகை இரசதம் விலைபேசிக்,
கலக மாய்முயற் கொம்பினால் குத்தியே களைத்திரு வரும்மாண்டார்,
அலகை யாயினா ரெனும்விவ காரத்தை அறிந்தவன் மயங்கானே.
பொருள் :
மலடி மைந்தனும் = குழந்தையில்லாத ஒரு பெண்ணின் மகனும்,
தாணுவிற் புருடனும் = கட்டையில் தோன்றிய மனிதனும்,
வான்மலர் முடிசூடி = வானத்தில் தோன்றிய மலர்களை அலங்காரமாக தலையில் சூடி,
இலகு கந்தர்ப்ப நகரிலே = (கந்தர்வர்கள் வசிக்கும் நகரம் போன்று) ஆகாயத்தில் மேகங்களால் தோன்றும் நகரத்தில்,
சுத்திகை இரசதம் விலை பேசி = சிப்பியில் தோன்றும் வெள்ளியை விலைபேசி,
கலகம் ஆய் = சண்டை உண்டாகி,
முயல் கொம்பினால் குத்தியே = முயலின் கொம்பினால் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு,
களைத்து இருவரும் மாண்டார் = களைத்துப் போன இருவரும் மரணத்தை அடைந்து,
அலகை ஆயினார் = (துர்மரணம் என்பதால்) பேயாயினர்.
எனும் விவகாரத்தை அறிந்தவன் மயங்கானே = என்று கூறும் கதையை (பொய்யென்று அறிந்தவன்) மயங்க மாட்டான் (இறந்து விட்டார்களே என்று வருந்த மாட்டான்).
பாடல் : 90 - சிறுவர் கதை போல உலகம் எப்படிப் பொய்யாகும் ?
மாயை என்பது பொய்யெனில் அதுபெற்ற வகையெலாம் பொய்யாமே,
தாயை யன்றிமக் களுக்கொரு பிறவியும் சாதியும் வேறுண்டோ,
சேய சொர்க்கமும் நரகமும் நன்மையும் தீமையும் பாராமல்,
தூய சத்துச்சித் தாநந்த பூரண சொரூபமாய் இருப்பாயே.
பொருள் :
மாயை என்பது பொய் எனில் = (உலகிற்கு உபாதான காரணமாக இருக்கின்ற) மாயை என்பது (சுருதி, யுக்தி, அனுபவங்களால்) மித்யை என்று சொல்லப்படுமானால்,
அது பெற்ற வகை எலாம் பொய் ஆமே = அம்மாயையின் காரியங்களாகிய (உலக மனைத்தும்) மித்யா ஆகும்,
தாயை அன்றி மக்களுக்கு = தாயைப் போல அல்லாமல் குழந்தைகளுக்கு,
ஒரு பிறவியும் சாதியும் வேறுண்டோ = ஒரு இனமும், குணமும் வேறாக உண்டாகுமா?,
சேய சொர்க்கமும் நரகமும் = சேய்மையான - தூரமான - சொர்க்கலோகமும், நரகலோகமும்,
நன்மையும் தீமையும் பாராமல் = உலகிலுள்ள நன்மைகளையும், தீமைகளையும் (சத்தியமாகக்) கருதாமல் (மித்யை என்று விலக்கி),
தூய சத்துச் சித்து ஆநந்த பூரண சொரூபமாய் இருப்பாயே = நித்ய சுத்தமான ஸச்சிதாநந்தமான பரிபூர்ணமான ப்ரஹ்ம சொரூபமே நானென்று எப்பொழுதும் இருப்பாயாக!
பாடல் : 91
பங்க யாசனன் முதற்பல தேவரும் பாருள பெரியோரும்
கங்கை யாதியாம் தீர்த்தமும் தேசமும் காலமும் மறைநாலும்,
அங்க மாறும்மந் திரங்களும் தவங்களும் அசத்தியம் எனச்சொன்னால்,
எங்கள் நாயக னேயத னாற்குற்றம் இல்லையோ மொழியீரே.
பொருள் :
பங்கய ஆசனன் முதல் பல தேவரும் = பிரம்மம் முதலிய பற்பல தேவர்களும்,
பார் உள பெரியோரும் = உலகில் வாழ்ந்த, வாழும் (பற்பல) மஹான்களும்,
கங்கை ஆதி ஆம் தீர்த்தமும் = கங்கா முதலான புண்ணிய நீர்நிலைகளும்,
தேசமும் காலமும் = பற்பல புண்ணிய தேசங்களும், நற்காலங்களும், நான்கு மறைநாலும் = ரிக், யஜுஸ், ஸாம, அதர்வண எனும் நான்கு வேதங்களும்,
அங்கம் ஆறும் = சிக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம், ஜ்யோதிஷம் ஆகிய ஆறு அங்கங்களும்,
மந்திரங்களும் = பஞ்சாக்ஷரம் முதலிய மந்திரங்களும்,
தவங்களும் = விரதம் முதலான தவங்களும்,
அசத்தியம் எனச்சொன்னால் = பொய் - மித்யை - என்று சொன்னால்,
எங்கள் நாயகனே = எங்கள் தலைவனே,
அதனால் = (ஜீவர்கள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பத்தை அடைவதற்கும், புண்யபாபங்களில் இருந்து விடுபட்டு முக்தியை அடையவும் ஸாதனங்களாக இருக்கும் தெய்வம், வேதம் போன்ற உயர்வான உலக விஷயங்களையும்) பொய் என்று சொல்வதனால்,
குற்றம் இல்லையோ = குற்றம் - பாபம் - இல்லையா ?
மொழியீரே = அதன் உண்மையை உரைத்தருள்வீராக!
வேதத்தின் ஆறு அங்கங்கள் :
1. சீக்ஷா - சிட்சை - ஒலியியல் - வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
2. வியாகரணம் - இலக்கணம் - சொல்லியல் - சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது. ,
3. சந்தஸ் - யாப்பு - செய்யுளியல் - செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
4. ஜ்யோதிஷம் - சோதிடம் - கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
5. நிருக்தம் - அகராதி - வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
6. கல்பம் - செயல் முறைகளை உரைக்கும் நூல்,
பாடல் : 92
சொற்பனந்தனில் கண்டதைப் பொய்யென்று சொல்வது பிழையானால்,
அற்ப மாயையில் தோன்றிய சகங்களை அசத்தெனல் பிழையாமே,
சொற்ப னந்தனில் கண்டதைப் பொய்யென்று சொல்லலா மெனில்மைந்தா,
அற்ப மாயையில் தோன்றிய சகம்மெலாம் அசத்திய மெனலாமே.
பொருள் :
சொற்பனந்தனில் கண்டதை = கனவு நிலையில் பார்த்ததை (உயர்ந்த உலகங்களையும், விஷயங்களையும்)
பொய் என்று சொல்வது பிழையானால் = (விழித்தவன்) பொய் என்று சொல்வது தவறானால்,
அற்ப மாயையில் தோன்றிய சகங்களை = (பிரஹ்மத்தின் சக்தியாக) ஏகதேசமாகவுள்ள மாயையினால் கற்பிதமாகத் தோன்றியுள்ள உலகங்களை,
அசத்து எனல் பிழை ஆமே = பொய்யென்று சொல்லுதல் பிழை ஆகும்.
சொற்பனந்தனில் கண்டதை = கனவில் (பொருத்தமானதால, தேச, உபகரணங்கள் இன்றி அவித்யையினால் மனக்கற்பிதமாக) பார்த்த உலகங்களை,
பொய் என்று சொல்லலாம் எனில் = விழித்தவன் பொய் என்று சொல்வது சரியே என்றால்,
மைந்தா = மகனே,
அற்ப மாயையில் தோன்றிய சகம் எலாம் = ஏக தேச மாயையினால் தோன்றியுள்ள உலகம் அனைத்தையும்,
அசத்தியம் எனல் ஆமே = ஆத்மஸ்வரூபத்தை அறிந்த ஞானி பொய்யென்று சொல்லலாம் (சொல்வதில் குற்றம் இல்லை).
பாடல் : 93
பொய்யை மெய்யென்ற மூடர்புண் ணியரென்று புராணம்கூப் பிடுமானால்,
மெய்யை மெய்யென்ற ஞானிக்குக் குற்றங்கள் விதித்தசாத் திரமுண்டோ,
பொய்ய தேதெனில் நாமரூ பங்களாம் பூதமா கியமாயை,
மெய்ய தேதெனில் சச்சிதா நந்தமாய் வியாபிக்கும் ஆன்மாவே.
பொருள் :
பொய்யை மெய் என்ற மூடர் = மித்யை (என்று ஶ்ருதி யுக்தி அனுபவங்களால் நிச்சயிக்கப்பட்ட) உலகத்தை ஸத்தியம் என்று கூறும் (துவைத மதவாதிகளை) மூடர்களை,
புண்ணியர் என்று = தர்மவான்கள் என்று,
புராணம் கூப்பிடுமானால் = புராணங்கள் கூறுமானால்,
மெய்யை மெய் என்ற ஞானிக்கு = (ஶ்ருதி முதலானவைகளால் அத்வைதத்தை) ஸத்தியம் என்றறிந்த ஞானிக்கு,
குற்றங்கள் விதித்த சாத்திரம் உண்டோ = அபராதத்தை விதித்த சாஸ்த்ரங்கள் இருக்கின்றனவா? (இல்லை).,
பொய்யது ஏதெனில் = பொய்யானவை எவை என்று கேட்டால்,
நாம ரூபங்களாம் பூதம் ஆகிய மாயை = பெயர், வடிவங்களாகிய பஞ்ச பூதங்களும் பூத காரியங்களும் ஆகிய மாயை ஆகும்,
மெய்யது ஏது எனில் = பரம ஸத்தியம் எது என்று கேட்டால்,
சச்சிதாநந்தமாய் வியாபிக்கும் ஆன்மாவே = ஸச்சிதாநந்தமாக ஸர்வவியாபகமாக இருக்கும் ஆத்மாவே ஆகும்.
பாடல் : 94
மாயை என்பதேது உடையரார் எப்படி வந்தது வருவானேன்,
மாயை என்பது பிரமத்தின் வேறெனின் வஸ்துவும் இரண்டாமே,
மாயை என்பதும் பிரமமும் ஒன்றெனில் வஸ்துவும் பொய்யாமே,
மாயை என்றமே கங்களுக் கொருசண்ட மாருத குருமூர்த்தி.
பொருள் :
மாயை என்பது ஏது = மாயை என்று சொல்லப்படுவதன் சொரூபம் என்ன?
உடையர் ஆர் = மாயை உடையவர் யார் ?
எப்படி வந்தது = மாயை எப்படித் தோன்றியது?
வருவான் ஏன் = மாயை தோன்றுவதற்கான காரணம் என்ன ?
மாயை என்பது பிரமத்தின் வேறு எனின் = மாயை பிரஹ்ரமத்திற்கு வேறானது என்றால்,
வஸ்துவும் இரண்டாமே = (உண்மைப் பொருள்கள்) இரண்டு என்று ஆகுமே.
மாயை என்பதும் பிரமமும் ஒன்றெனில் = மாயையும், பிரஹ்மமும் ஒன்று என்றால்,
வஸ்துவும் பொய்யாமே = மாயை போல் பிரஹ்மமும் அஸத்தியம் ஆகி விடுமே,
மாயை என்ற மேகங்களுக்கு = மாயை எனும் மேகங்களைப் போக்குவதற்கு,
ஒரு சண்டமாருத குருமூர்த்தி = (உபாயத்தை அறிந்த) ஒப்பற்ற பெருங்காற்றான குருநாதரே!
பாடல் : 95
அதனை இன்னதென்று உரைத்திடப் படாமையால் அவாச்சிய வடிவாகும், இதுத னக்குள துடலியான் உலகுமெய் யெனுமவ ருடையோர்கள்,
கதையி லாதபொய் வந்ததிப் படியென்று கண்டபேர் இலைமைந்தா,
விதன மாயையேன் வந்ததென் றால்புத்தி விசாரமற் றதனாலே.
பொருள் :
அதனை = அந்த மாயையை,
இன்னது என்று = இப்படியான இயல்புடையது என்று,
உரைத்திடப் படாமையால் = நிர்ணயித்துக்களமுடியாத காரணத்தினால்,
அவாச்சிய வடிவாகும் = அநிர்வசநீய சொரூபம் ஆகும்.
இது தனக்கு உளது = இவை என்னுடையன,
உடல் இயான் = இவ்வுடலே நான்,
உலகு மெய் = உலகம் உண்மையானது,
என்பவர் உடையோர்கள் = என்ற அபிமானமுடைய ஜீவர்களே (அம்மாயையை) உடையவர்கள் ஆவர்,
கதை இலாத பொய் = சொல்ல முடியாத ஸ்வரூபமுடைய பொய்யான மாயை,
வந்தது இப்படி என்று = (அநாதியாதலால்) இந்தவாறு வந்தது என்று,
கண்டபேர் இலை = அறிந்தவர் ஒருவரும் இல்லை,
மைந்தா = சீடனே,
விதன மாயை ஏன் வந்தது என்றால் = (அஸத், ஜட,) துக்க வடிவான மாயை எதனால் தோன்றிற்று என்று கேட்டால்,
புத்தி விசாரம் அற்றதனாலே = (நான் யார், உலகம் எது எனும்) விவேக விசாரம் இன்மையினால்.
பாடல் : 96
அருவ மாகும்மா யாவிவித் தைகள்விளை யாடுமுன் தெரியாவே,
உருவ மாம்பல கந்தர்ப்ப சேனையாய் உதித்தபின் வெளியாகும்,
பிரம சத்திக ளநந்தமாம் அதைக்கண்டு பிடித்திடல் கூடாதே,
பரவு பூதங்கள் கண்டநு மானத்தால் பலருக்கும் வெளியாமே.
பொருள் :
மாயாவி = இந்திரஜாலம் (மாயாஜாலம்) செய்பவனுடைய,
அருவம் ஆகும் வித்தைகள் = கண்ணுக்குத் தெரியாத மாயாசக்திகள்,
விளையாடு முன் = (அவன்) காட்டுவதற்கு முன்னர்
தெரியாவே = ஒருவருக்கும் காண முடியாததாகும்,
உருவம் ஆம் பல கந்தர்ப்ப சேனையாய் = கண்ணுக்குத் தெரியும் பலவிதமான கந்தர்வர்களுடைய படைகளாக,
உதித்தபின் வெளியாகும் = தோன்றிய பின்னரே தெரியும்.
பிரம சத்திகள் அநந்தமாம் = (அதுபோல) பிரஹ்மத்தின் சக்திகள் பலவிதமாகும்.
அதைக் கண்டு பிடித்திடல் கூடாதே = அதனை (வெளிப்படும் முன்னர்) அறிந்திடுதல் ஒருவருக்கும் இயலாது,
பரவு பூதங்கள் கண்ட = எங்கும் பரவி விரிந்திருக்கின்ற (ஆகாசம் முதலான பஞ்ச) பூதங்களைக் கண்டு அது மானித்த,
அநுமானத்தால் பலருக்கும் வெளிஆமே = காரிய ஞானத்தால் அனைவருக்கும் (அச்சக்திகள்) வெளிப்படையாகத் தெரியும்.
பாடல் : 97
காரி யங்களும் சத்தியா தாரமும் காணுமற் றதுமாயம், பாரில் நின்றமா யாவியும் சேனையும் பார்ப்பவர் கண்காணும்,
வீரி யம்திகழ் வித்தையா யினசத்தி வெளிப்படா ததுபோலப்,
பேரி யற்பிர மத்துக்கும் உலகுக்கும் பிறிதுசத் திகளுண்டே.
பொருள் :
பாரில் நின்ற மாயாவியும் = பூமியில் நிற்கின்ற மாய வித்தைக்காரனும்,
சேனையும் = ( அவனது) மாயவித்தையினால் ஆகாயத்தில் தோன்றிய கந்தர்வப்) படைகளும்,
பார்ப்பவர் கண் காணும் = காண்பவர்களுடைய கண்களுக்குத் தெரியும்,
வீரியம் திகழ் = பராத்திரமமாக விளங்குகின்ற,
வித்தை ஆயின சத்தி = மாயவித்யை வடிவ சக்தியானது,
வெளிப்படாதது போலப் = பார்ப்பவர்களுக்குத் தெரியாதது போல,
சத்தி காரியங்களும் = (ஈச்வரரின்) மாயா சக்தியின் (ஆகாசாதி படைப்புகளும்),
(சத்தி) ஆதாரமும் = மாயா சக்திக்கு ஆதாரமான பிரஹ்மமும்,
காணும் = (பார்ப்பவர்களுக்குத்) தெரியும்.
மற்றது மாயம் = மாயாசக்தியானது காணப்படாது,
பேரியல் பிரமத்துக்கும் = மறைத்தான இயற்கையுடைய (ஆதாரமான) பிரஹ்மத்திற்கும்,
உலகுக்கும் = (காரியமான) உலகத்திற்கும்,
பிறிது சத்திகள் உண்டே = வேறான (அநந்த) சக்திகள் உள்ளன ஆகும்.
பாடல் : 98
சத்தி சத்தனைத் தவிரவே றன்றுகாண் சத்தனாம் மாயாவி, வித்தை காட்டிய இந்திர சாலம்பொய் வித்துவான் மெய்போலப்,
புத்தி மைந்தனே சத்திமா னாகிய பூரண ஆன்மாவின்,
வத்து நிர்ணயம் சொன்னதிட் டாந்தத்தின் வழிகண்டு தெளிவாயே.
பொருள் :
சத்தி = (மாயாஜால சக்தியானது,
சத்தனைத் தவிர = மாயாஜாலக்காரனைத் தவிர,
வேறன்று காண் = வேறாக இராது என்று அறிந்து கொள்,
சத்தனாம் மாயாவி = மாயாசக்தியையுடைய மாயாவி,
வித்தை காட்டிய இந்திர சாலம்பொய் = மாயவித்தையால் தோற்றுவித்த மாயாஜாலம் பொய்யாகும்.
வித்துவான் மெய்போல = (ஆனால்,) மாயாவி உண்மையாக இருப்பது போல,
புத்தி மைந்தனே = விவேகமுள்ள சீடனே,
சத்திமானாகிய = சர்வ சக்திமானாகிய,
பூரண ஆன்மாவின் = பரிபூர்ண ஆத்மாவினுடைய,
வத்து நிர்ணயம் சொன்ன = வாஸ்தவ ஸ்வரூபத்தைச் சொன்ன,
திட்டாந்தத்தின் வழி = உதாரணத்தின் வாயிலாக,
கண்டு = தார்ஷ்டாந்தத்தின் உண்மையை அறிந்து,
தெளிவாயே = ஸந்தேஹம் தெளிவாயே.
கேள்வி
மாயை என்பது பிரமத்தின் வேறெனின் வஸ்துவும் இரண்டாமே, மாயை என்பதும் பிரமமும் ஒன்றெனில் வஸ்துவும் பொய்யாமே (பாடல் 94) என்பது ஸந்தேஹம்.
பதிலின் தாத்பர்யம்
பிரஹ்மத்தின் சக்தி மாயை. மாயையின் காரியம் உலகம். சக்தியும் சக்தனும் (மாயையும் பிரஹ்மமும்) வேறன்று. சக்தியின் காரியம் வேறானாலும் அது மெய்யல்ல. ஆகவே வஸ்து இரண்டல்ல. மாயாகாரியம் பொய்யானாலும் மாயாவி மெய்யே.
பாடல் : 99
இல்லை ஆகிய சத்தியை உண்டென்ப தெப்படி எனக்கேட்கில்,
புல்லை யாதியாம் அசேதனப் பொருளெலாம் பூத்துக்காய்ப் பனபாராய்,
நல்லை யாமக னேஅதில் சிற்சத்தி நடந்திடா திருந்தக்கால்,
தொல்லை யாய்வரும் சராசர உயிர்க்கெலாம் சுபாவங்கள் வேறாமே.
பொருள் :
இல்லை ஆகிய சத்தியை = (பிரஹ்மத்தை விட்டு வேறாக) இல்லாத மாயா சக்தியை,
உண்டு என்பது எப்படி எனக்கேட்கில் = இருக்கிறது என்று சொல்வது எப்படி என்று கேட்டால்,
புல்லை ஆதிஆம் அசேதனப் பொருள் எலாம் = புல் முதலான ஜடப்பொருள்கள் அனைத்தும்,
பூத்துக் காய்ப்பன பாராய் = (அததற்குரிய பருவத்தில்) பூப்பதுவும், காய்ப்பதுவும் (எதனால்) என்று சிந்தித்துப் பார்ப்பாயாக!
நல்லை ஆம் மகனே = நற்குணங்களையுடைய மைந்தனே,
அதில் சிற்சத்தி = ஜடப்பொருள்களில் பிரஹ்மத்தின் சக்தியானது,
நடந்திடாது இருந்தக்கால் = வெளிப்படாது இருந்தால்,
தொல்லையாய் வரும் = அநாதியாய் வரும்,
சராசர உயிர்க்கெலாம் = நகர்கின்ற நகராத உயிர்கள் அனைத்திற்கும்,
சுபாவங்கள் வேறாமே = இயல்பு வேறாகிவிடும்.
பாடல் : 100
கருப்பை முட்டையுள் பறவைகள் பலநிறம் கலந்தசித் திரம்பாராய்,
அருப்ப மாம்சக்தி நியமில் லாவிடில் அரசிலா நகர்போலாம்,
நெருப்பு நீரதாம் கசப்புமே மதுரமாம் நீசனும் மறையோதும், பொருப்பு மேகமாம் கடலெலாம் மண்களாம் புவனமிப் படிப்போமே.
பொருள் :
கருப்பை முட்டையுள் = கருப்பையுள் முட்டையாக இருக்கும்போது ஒன்றாக இருந்து,
பறவைகள் = பின் பறவைகளாகும் போது,
பல நிறம் கலந்த சித்திரம் பாராய் = பல நிறங்களோடு கூடி வரும் அதிசயத்தைப் பார்ப்பாயாக.
அருப்பம் ஆம் சக்தி = அருவமாகிய சக்தியின்,
நியமம் இல்லா விடில் = கட்டுப்பாடு இல்லாவிட்டால்,
அரசிலா நகர் போலாம் = அரசன் இல்லாத நகரம் போல பிரபஞ்ச ஒழுங்கு மாறுபட்டுப் போகும்,
(அஃது அப்படி என்றால்)
நெருப்பு நீரது ஆம் = (வெப்ப இயல்புள்ள) தீயானது (குளிர்ந்த தன்மையுள்ள) நீரைப் போலாகும்.
கசப்புமே மதுரம் ஆம் = கசப்புத்தன்னையுள்ளது (வேம்பு முதலானவை) இனிப்புத் தன்மையுள்ளதாகும்.
நீசனும் மறை ஓதும் = சண்டாளனும் வேதம் படிப்பான்,
பொருப்பு மேகம் = (அசலமான) மலைகள் மேகங்கள் (போல சலனமுடையன) ஆகும்.
கடல் எலாம் மண்கள் ஆம் = (திரவத்தன்மையுள்ள) கடல்கள் அனைத்தும் (திடத்தன்மையுள்ள) நிலம் போலாகிவிடலாம்.
புவனம் இப்படிப் போமே = (இப்படி) உலகமெல்லாம் தம்தம் இயல்பு மாறிப்போகும். (நியமிக்கும் சக்தி இல்லாமல் போனால், எது எப்படி வேண்டுமானாலும் ஆகலாம்).
பாடல் : 101
ஆர்க்கும் காணவும் அறியவும் படாதென்றும் அவாச்சிய வடிவென்றும்,
சேர்க்கும் நாமரூ பப்பயிர் வித்தென்றும் செப்பிய சிற்சத்தி,
பேர்க்கு மாறெங்ஙன் பிரித்திடப் படாதெனில் பிரமபா வனையொன்றாப்,
பார்க்கு மாறெங்ஙன் முத்தியா குவதெங்ஙன் பரமசற் குருமூர்த்தி
பொருள் :
பரமசற் குருமூர்த்தி = மேலான ஸற்குருநாதனே!,
ஆர்க்கும் = எவருக்கும்,
காணவும் அறியவும் படாது என்றும் = (புறத்திலுள்ள குடம் முதலானவைகளைப் போல புலன்களால்) பார்க்கவும், (அகத்திலுள்ள அன்பு முதலானவை போல மனதால்) அறியவும் முடியாது எனவும் (பாடல்கள், 96, 97),
அவாச்சிய வடிவு என்றும் = (இப்படிப்பட்டதென்று விவரிக்க முடியாதது ஆகையால்) வாக்கிற்கு எட்டாத வடிவமுடையது என்றும் (பாடல் 95),
நாம ரூபப் பயிர் சேர்க்கும் வித்தென்றும் = பெயர், வடிவம் எனும் பயிர்களை உருவாக்கும் விதை என்றும் (பாடல்கள் 99, 100),
செப்பிய சிற்சத்தி = சொல்லப்பட்ட சித்தினுடைய மாயாசக்தியை,
பேர்க்கும் ஆறு எங்ஙன் = நீக்கும் வழி என்ன?,
பிரித்திடப்படாது எனில் = (அல்லது) நீக்கு முடியாது என்றால்,
பிரமபாவனை ஒன்றாப் பார்க்கும் ஆறு எங்ஙன் = (பிரஹ்ம விசாரத்தால்) பிரஹ்மத்தை ஒன்றாக அறியும் வழி எப்படி?,
முத்தி ஆகுவது எங்ஙன் = முக்தி உண்டாவது எப்படி?.
பாடல் : 102
வாயுத் தம்பனம் சலத்தம்ப னம்மணி மந்திர மருந்தாலே,
தேயுத் தம்பனம் செய்திடில் அதிலதில் சிறந்தசத் திகளெங்கே,
நீயச் சச்சிதா நந்தமாய் வேறொன்றும் நினைத்திடா திருப்பாயேல்
மாயச் சத்திபோம் ஈதன்றி மந்திரம் மறைகளில் காணோமே.
பொருள் :
வாயுத் தம்பனம் = வாயுவைக் கட்டுதலும்,
சலத் தம்பனம் = நீரைக் கட்டுதலும்,
தேயுத் தம்பனம் = தீயைக் கட்டுதலும்,
மணி மந்திரம் மருந்தாலே செய்திடில் = மணியாலும், மந்திரங்களாலும், மூலிகையினாலும் (மந்திரவாதியினாலே) செய்யப்படுமானால்,
அதில் அதில் சிறந்த சத்திகள் எங்கே = அவ்வப்பொருள்களில் உள்ள அததற்கான சிறப்பு சக்திகள் எங்கே காணப்படும், (காணப்படாததுபோல)
நீ அச்சச்சிதாநந்தமாய் = நீயும் (மாயைக்கு ஆதாரமான) ஸத் சித் ஆனந்த சொரூபமான ப்ரஹ்மமாக,
வேறொன்றும் நினைத்திடாது இருப்பாயேல் = வேறு எதையும் எண்ணாமல் இருப்பாயே ஆனால், (திருஷ்ய விஶ்மரணம்)
மாயச் சத்தி போம் = அந்த மாயாசக்தியானது நீங்கிப் போய்விடும்.
ஈது அன்றி = (த்ருஷ்ய விஶ்மரணமெனும்) இந்த ஸாதனை இல்லாமல்,
மந்திரம் மறைகளில் காணோமே = (மாயை நிவிர்த்திக்கு) மந்திரம் (முதலான வேறு ஸாதனங்களை) ச்ருதிகளில் யாம் காணவில்லை.
பாடல் : 103
மேவும் மண்ணிலவ் வியத்தமே வியத்தமாம் விவகரித் திடவேண்டில்,
நாவி னால்மண்ணைக் குடமென்பர் அக்குடம் நசிப்பது நாவாலே,
பாவு நாமரூ பங்களை மறந்துமண் பார்ப்பதே பரமார்த்தம்,
சீவ பேதகற் பிதங்களை மறந்துநீ சின்மய மாவாயே.
பொருள் :
மேவும் மண்ணில் = திரண்ட மண்ணில்,
அவ்வியத்தமே வியத்தம் ஆம் = வெளிப்படாதிருந்த (கடசக்தியே) (குலாலனால் கடமாக) வெளிப்படும்,
விவகரித்திட வேண்டில் = பயன்படுத்திட வேண்டுமானால்,
நாவினால் மண்ணைக் குடம் என்பர் = வாக்கினால் மண்ணைக் குடம் என்ற பெயரால் அழைப்பர்,(மண்ணுக்கு வேறாக குடம் இல்லை என்பதால் மண்ணையே குடம் என்று அழைக்கிறோம்).
அக்குடம் நசிப்பதும் நாவாலே = அந்தக் குடம் அழிந்தது எனும் செயலும் (குடம் உண்மையில் இல்லை என்பதால்) வாக்கு மாத்திரத்தினாலே ஆகும்,
பாவும் நாம ரூபங்களை மறந்து = சக்தியின் விரிவாகும் நாம ரூபங்களை வெறும் தோற்ற மாத்திரமென விலக்கி,
மண் பார்ப்பதே பரமார்த்தம் = (குடத்தை) மண்ணென்று பார்ப்பதே மெய்யறிவாகும்,
சீவபேத கற்பிதங்களை மறந்து = அது போல (சிருஷ்டிக்கு முன் வெளிப்படாத தன்மையில் இருந்து
பின் ஈச்வர ஸங்கல்பத்தினால் நாம ரூப மாத்திரமாகத் தோன்றிய) ஜீவ வேறுபாடுகளைக் கற்பிதங்கள் என விலக்கி,
நீ சின்மயம் ஆவாயே = நீ (கற்பிதங்களுக்கு ஆதாரமான) சித்மாத்திரமாக இருப்பாயாக!
பிரமத்திற்கு வேறாக மாயை இல்லை . பிரஹ்மத்தின் சக்தியாக மாயை இருக்கிறது
பிரஹ்மம் மாயை இரண்டுக்கும் வேறாக உலகம் இல்லை. பிரம்மம் + மாயை காரணம், உலகம் காரணம்.
பிரஹ்மம் அபின்ன நிமித்த உபாதான காரணமாகவும் மாயை பரிணாமி உபாதான காரணமாகவும் இருக்கிறது.
காரணத்திற்கு வேறாகக் காரியம் இல்லை. ஆகவே
பிரம்மமே இருக்கிறது.
இந்த ஞானத்தை தொடர்ந்து சிந்தித்து மனதை அதிலேயே வைப்பாயாக!
பாடல் : 104
பூரிக் கும்கன சச்சிதா நந்தத்தில் பொய்சடம் துயர்மூன்றும்,
தூரத் தாயினும் தோன்றுபாழ் விபரீதம் துடைப்பதெப் படி வென்றால்,
நீரில் தோன்றும்தன் நிழல்தலை கீழதாய் நின்றுஅலை யினும் நேராய்ப்,
பாரில் தோன்றிய தன்னைநோக் கிடில்அந்தப் பாழ்நிழல் பொய்யாமே.
பொருள் :
பூரிக்கும் = (நாம, ரூபங்களில்) நிறைந்திருக்கும்,
கன சச்சிதாநந்தத்தில் = பரிபூரணமாகிய ஸச்சிதாநந்த ப்ரஹ்மத்தில்,
பொய்சடம் துயர்மூன்றும் = அஸத், ஜட, துக்க வடிவமான மாயையின் அம்சங்கள் மூன்றும்,
தூரத்து ஆயினும் = (இல்லாமல் விலகி) தூரமாய் இருப்பதாக இருந்தாலும்,
தோன்று பாழ் விபரீதம் = (இருப்பதாகத்) தோன்றி நிற்கும் இல்லாததான மாறுபட்ட (தோற்ற மாத்திரமான உலகத்தை),
துடைப்பது எப்படி என்றால் = நீக்குவது எப்படி என்றால்,
நீரில் தோன்றும் தன் நிழல் = தண்ணீரில் தெரிகின்ற தன்னுடைய நிழவானது,
தலை கீழதாய் நின்று அலையினும் = தலைகீழாகத் இருந்து அலைந்தாலும்,
நேராய்ப் பாரில் தோன்றிய = நேராக நிலத்தில் நிற்கின்ற,
தன்னை நோக்கிடில் = தன்னைப் பார்க்கும் பொழுது,
அந்தப் பாழ்நிழல் பொய்யாமே = அந்த (தோற்ற மாத்திரமான) நிழல் பொய்யானதாகும்.
அதுபோலக் காரண ஞானத்தால் காரியம் மித்யை (அஸத்) எனும் ஞானம் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் ஞானத்தையே அத்வைத ஸித்தாந்தத்தில் புருஷார்த்தம் என்று ஒப்பினார்கள்.
பாடல் : 105
ஞானம் காரணம் அறிபொருள் காரியம் நாமரூ பப்பேய்கள்,
ஆன தெப்படி அழிந்த தெப்படியென ஆய்குதல் பலனன்றே,
மான மைந்தனே தீர்க்கசொப் பனசகம் வந்ததும் பாராமல்,
போன தும்நினை யாமல்உன் போதமாய்ப் பூர்ணமாய் இருப்பாயே.
பொருள் :
ஞானம் காரணம் = அறிவாகிய பொருள் காரணம் ஆகும்,
அறிபொருள் காரியம் = அறியப்படும் பொருள்கள் காரியமாகும்,
நாம ரூபப் பேய்கள் = பெயர், வடிவங்கள் (கற்பனைத் தோற்றங்களான) பேய்கள்,
ஆனது எப்படி = உண்டானது எப்படி?
அழிந்தது எப்படி = அறிந்து போவது எப்படி?
என ஆய்குதல் = என்று ஆராய்தல்,
பலன் அன்றே = பயனற்றதாகும்.
மான மைந்தனே = பெருமையுடைய சீடனே,
தீர்க்க சொப்பன சகம் = நீண்ட கனவு எனும் உலகம்,
வந்ததும் பாராமல் = எப்படி வந்தது என்று யோசியாமல்,
போனதும் நினையாமல் = எப்படி எங்கே போனது என்றும் யோசியாமல்,
உன் போதமாய் = உன் யதார்த்த ஸ்வரூபமான சிதாத்மாவாக,
பூர்ணமாய் = பரிபூர்ணமான பிரஹ்மமாக,
இருப்பாயே = இருக்கக் கடவாய்!
பாடல் : 106
அசத்தில் எம்மட்டுண் டம்மட்டும் பராமுகம் ஆகினா லம்மட்டும்,
நிசத்தில் உள்விழிப் பார்வையாம் இப்படி நிரந்தரப் பழக்கத்தால்,
வசத்தில் உன்மனம் நின்றுசின் மாத்திர வடிவமா யிடில்மைந்தா,
கசத்த தேகத்தி லிருக்கினும் ஆநந்தக் கடல்வடி வாவாயே.
பொருள் :
அசத்தில் = பொய்யான ( மித்யையான) பெயர் வடிவத்தில்,
எம்மட்டு உண்டு = எவ்வளவு (பற்றுதல்) உண்டோ,
அம்மட்டும் பராமுகம் ஆகினால் = அவ்வளவு விலகிய மனமுடையவன் ஆனால்,
அம்மட்டும் = அவ்வளவு,,
நிசத்தில் = மெய்வடிவான ப்ரஹ்மத்தில்,
உள்விழிப் பார்வையாம் = மனம் உள்முகமாகும்.,
இப்படி நிரந்தரம் பழக்கத்தால் = இவ்வாறு நெடுங்காலம் முயற்சியோடு செய்யும் பயிற்சியால்,
வசத்தில் உன்மனம் நின்று = மனம் உன் வசத்தில் இருந்து,
சின்மாத்திர வடிவம் ஆயிடில் = சைதந்யமாத்திரமாக இருக்கும் நிலை ஏற்பட்டால்,
மைந்தா = சீடனே,
கசத்த தேகத்தில் இருக்கினும் = (அதன் பின்னர்) வெறுக்கத்தக்க துன்ப வடிவான இந்த உடலில் இருந்தாலும்,
ஆநந்தக் கடல்வடிவு ஆவாயே = இன்ப ஸமுத்திரமாக இருப்பாய்!
பாடல் : 107
தானன்றி வேறொன்று மில்லாத பூரண
சச்சிதாநந்த குணமாம்
ஊனின்ற உயிர்தோறும் ஒன்றாகு மென்றால்
அஃதொக்கின்ற படிகண்டி லேன்
நானென்ற சீவன்கள் சத்தான வகையொக்கும்
ஞானங்கள் வெளிகண்டதால்
ஆநந்த மிதுபோல வெளியாக உதியாத
அடைவேது குருநாதனே.
பொருள் :
குருநாதனே = ஸத்குரவே,
தான் அன்றி வேறொன்றும் இல்லாத = தானல்லாமல் தனக்கு வேறாக ஒன்றும் இல்லாத ஆத்மா,
பூரண சச்சிதாநந்த குணமாம் = பூர்ண ஸச்சிதாநந்த ஸ்வபாவமாய்,
ஊன்நின்ற உயிர் தோறும் = உடலில்,
ஒன்று ஆகும் என்றால் = ஒன்றேயாக இருக்கும் என்று கூறப்படுமேயானால்,
அஃது ஒக்கின்றபடி கண்டியேன் = அந்த ஆத்மா அவ்வாறு (அனைத்துள்ளும் ஒன்றாக) இருக்கின்ற தன்மையைக் நான் (அனுபவத்தில்) அறியவில்லை.,
நான் என்ற சீவன்கள் = (நான் பார்த்தேன், நான் உண்டேன்) என்று விவகரிக்கும் ஜீவர்கள்,
சத்தான வகை ஒக்கும் = (இருப்பு அறியப்படுவதால்) சத்தென்னும் தன்மை ஏற்றுக்கொள்ளப்படும்,
ஞானங்கள் வெளிகண்டது = ( தனது இருப்பை அறியும்) ஞானமும் அனுபவமாக அறியப்பட்டது,
(ஆல் = அசைச் சொல்)
ஆநந்தம் = ஆனந்தமானது,
இதுபோல = இந்த ஸத்து, சித்து போல,
வெளியாக உதியாத = வெளிப்படையாக எப்பொழுதும் தோன்றாத,
அடைவு ஏது = முறை (காரணம்) யாது?
பாடல் : 108 அது நியமமில்லை
உருவங்கள் இரதங்கள் பரிசங்கள் ஒருபூவில்
ஒன்றாகும் என்றாலுமே
கரணங்கள் ஓரொன்றில் ஓரொன்று தெரியும்
கணக்கன்றி வாராதுகாண்
அருமந்த சச்சிதா நந்தச் சுபாவங்கள்
ஆன்மாவின் வடிவாகிலும்
பிரபஞ்ச மயமாம்வி ருத்திபே தத்தினால்
பேதங்க ளாமைந்தனே.
பொருள் :
ஒருபூவில் = ஒரு மலரில்,
உருவங்கள் இரதங்கள் பரிசங்கள் = ரூப, ரஸ, ஸ்பர்ச, கந்தங்கள் (வடிவம், சுவை, தொடு உணர்வு, வாஸனை) ஆகிய இவைகள்,
ஒன்றாகும் என்றாலுமே = ஒரு வஸ்துவிலேயே இருக்கின்றன என்றாலும்,
கரணங்கள் ஓர் ஒன்றில் = புலன்கள் ஒவ்வொன்றில்,
ஓர் ஒன்று தெரியும் = ஒரு குணம் (மட்டும்) தெரியும்,
கணக்கன்றி = தோன்றும் அளவினது அன்றி,
வாராது காண் = ஒரு புலனுக்கே அனைத்து குணங்களும் தெரியாது (அதுபோல)
அருமந்த = அருமருந்து (அமுதம்) ஒப்ப
சச்சிதாநந்தச் சுபாவங்கள் = ஸத் சித் ஆனந்த குணங்கள்,
ஆன்மாவின் வடிவாகிலும் = ஆத்மாவின் ஸ்வரூபம் என்றாலும்,
பிரபஞ்சமயம் ஆம் = பிரபஞ்ச வடிவான,
விருத்தி பேதத்தினால் = எண்ணங்களின் வேறுபாட்டினால்,
பேதங்கள் ஆம் = (வெளிப்படுதலில்) வேறுபாடுகள் தோன்றும்,
மைந்தனே = மகனே.
பாடல் :109 விருத்தி பேதங்கள்
தாமதம் இராசதம் சாத்துவித முக்குணத்
தால்வரும்வி ருத்திமூன்றாம்
ஆமவைகள் மூடமும் கோரமும் சாந்தமும்
அபிதான மாகுமகனே
ஏமுறவி ருக்கின்ற சச்சிதா நந்தங்கள்
என்றென்றும் ஒன்றாகிலும்
நாமுரைக் கும்விருத் திப்பிரிவி னால்சொரூப
ஞானாதி பிரிவாகுமே.
பொருள் :
தாமதம் இராசதம் சாத்துவிகம் முக்குணத்தால் = தாமஸம், ராஜஸம், ஸாத்விகம் என்ற முக்குணங்களால்,
வரும் விருத்தி மூன்றாம் = உண்டாகும் எண்ணங்கள் மூன்று வகையாகும்.
ஆம் அவைகள் = அம்மூவகை எண்ணங்களும் முறையே,
மூடமும் கோரமும் சாந்தமும் = மூடவிருத்தி என்றும், கோர விருத்தி என்றும், சாந்த விருத்தி என்றும்,
அபிதானம் ஆகும் = பெயர் பெறும்.
ஏமுற இருக்கின்ற சச்சிதாநந்தங்கள் = அடைந்தோர் இறுமாப்புடன் இருக்கின்ற ஸத் சித் ஆநந்தங்கள்,
என்றென்றும் ஒன்றாகிலும் = என்றைக்கும் ஆத்மாவின் ஒன்றேயான ஸ்வரூபமாக இருந்தாலும்,
நாம் உரைக்கும் விருத்திப் பிரிவினால் = நாம் கூறும் (மூட கோர, சாந்தம் எனும்) எண்ணப்பிரிவினால்,
சொரூப ஞானாதி பிரிவாகுமே = ஆத்மாவின் ஸ்வரூப ஸச்சிதாநந்தங்கள்,
பிரிவு ஆகும் = வேறுபாடாக வெளிப்படும்.
பாடல் : 110
சடமான மூடத் தருக்கல்லு மண்களில்
சத்தொன்று மேதோன் றுமால்
விடமான காமாதி கோரத்தில் ஆநந்தம்
விளையாது மற்றவைகளாம்
திடமான ஒழிவாதி சாந்தத்தி லேசச்சி
தாநந்தம் மூன்றும்வெளியாம்
மடமான மூடங்கள் கோரங்கள் விடுசாந்த
மனமாகில் ஆநந்தமே.
பொருள் :
சடம் மூடம் ஆன தரு கல்லு மண்களில் = ஜடமும் மூடமுமான மரங்களில், கற்களில், மண்ணில்,
சத்தொன்றுமே தோன்றும் = ஸத் அம்சம் மட்டுமே வெளிப்படும்,
விடமான காமாதி கோரத்தில் = (விஷம் போலும் மனிதனை மயக்கும்) காமம் குரோதம் போன்ற அறிவின் கோர விருத்தியில் - (ராஜஸ எண்ணங்களிலும் மோஹம், பயம் போன்ற மனதின் தாமஸ விருத்தியிலும்)
ஆநந்தம் விளையாது = ஆத்மாவின் ஆநந்த ஸ்வரூபம் வெளிப்படாது,
மற்றவைகள் ஆம் = ஸத்தும் சித்தும் வெளிப்படும்,
திடமான ஒழிவு ஆதி சாந்தத்திலே = திடமான வைராக்யம், பொறுமை, அன்பு போன்ற (மனதில் சாந்த எண்ணங்களில்)
சச்சிதாநந்தம் மூன்றும் வெளியாம் = ஸத், சித், ஆநந்தம் மூன்றும் வெளிப்படும்,
மடமான மூடங்கள் கோரங்கள் விடு = அறியாமையின் விளைவாகிய மூட, கோர (தாமஸ, ராஜஸ) எண்ணங்களை விட்ட,
சாந்த மனமாகில் ஆநந்தம் ஆம் = அமைதியடைந்த உள்முக எண்ணங்கள் உண்டானால் மனதில் ஆத்மாவின் ஆநந்தம் வெளிப்படும் (விளங்கும்).
பாடல் : 111
இகமான குருநாத னேசச்சி தாநந்த
மெனு மிலக்கணமறிகிலேன்
அகலாத சத்தாவ தேதுசித் தாவதேது
ஆநந்தம் ஏதென்றிடில்
மிகுகாலம் மூன்றுங் கெடாதிருப் பதுசத்து
வேறுபா டறிதல்சித்தாம்
மகிழ்காம நுகர்போது சுகமாகும் அனுபூதி
வாழ்வென்ப தாநந்தமே.
பொருள் :
இகம் ஆன குருநாதனே = இகத்தில் (அருளுருவாய்) எழுந்தருளிய குருநாதனே,
சச்சிதாநந்தம் எனும் = ஸச்சிதானந்தம் என்ற ஆத்மாவின்
இலக்கணம் அறிகிலேன் = இலக்கணத்தை (நான்) அறியவில்லை,
அகலாத சத்தாவது ஏது = எப்போதும் நீங்காது இருக்கின்ற ஸத்தின் இலக்கணம் யாது?
சித்தாவது ஏது = சித்தின் இலக்கணம் யாது?
ஆநந்தம் ஏது = ஆநந்தத்தின் இலக்கணம் யாது?
என்றிடில் = என்று கேட்பாயாகில்,
மிகுகாலம் மூன்றும் கெடாதிருப்பது சத்து = நேற்று இன்று நாளை எனும் மூன்று காலத்திலும் அழியாமல் இருப்பது எதுவோ, அது ஸத்து ஆகும்,
வேறு பாடறிதல் சித்தாம் = வேறுபடுத்தி அறியும் அறிவு சித்து ஆகும்.
மகிழ்காமம் நுகர்போது சுகம்.ஆகும் = மகிழ்ச்சியைத் தரும் காம விஷயங்களை அனுபவிக்கும் போது (சாந்த விருத்தியில்) ஏற்படுவது சுகம் ஆகும்,
அனுபூதி வாழ்வு என்பது ஆநந்தமே = ஞானநிஷ்டையோடு கூடிய வாழ்வே ஆநந்தமாகும்.
பாடல் : 112
நாசச் சரீரத் திருக்கும் சரீரிதனை
நால்வேத மாவாக்கியம்
நீசச்சி தாநந்நம் என்றிடினும் ஆசிரியர்
நீபிரம மாகுமெ னினும்
மாசற்ற சச்சிதா நந்தநா னென்னவிவன்
மன்னுமநு பவமெங்ஙனே
கோசப் புரங்களை இடித்துத் தகர்க்கும்மத
குஞ்சரக் குருநாதனே.
பொருள் :
நாசச் சரீரத் திருக்கும் சரீரிதனை = அழியக்கூடிய உடலில் நான் என்று பற்றுக் கொண்டிருக்கும் உடலை உடையவனை (சரீரியை),
நால்வேத மாவாக்கியம் = நான்கு வேதங்களின் மஹாவாக்கியங்களும்,
நீ சச்சிதாநந்நம் என்றிடினும் = நீ ஸச்சிதாநந்த ஆத்மா என்று கூறினாலும்,
ஆசிரியர் நீ பிரமமாகும் எனினும் = குருவானவர் நீ (ஆத்மா) ஸச்சிதாநந்தப் பிரஹ்மம் என்று உபதேசித்தாலும்,
மாசற்ற சச்சிதாநந்தம் நான் என்ன = குற்றமற்ற - நித்ய சுத்தமான - ஸச்சிதாநந்த ஆத்மா நான் என்று,
இவன் மன்னும் அநுபவம் எங்ஙனே = என்னிடத்து - உடல் கொண்டிருக்கின்ற இச்சீவனிடத்து - நிலை பெற்ற (நான் ஸச்சிதானந்தப பிரஹ்மம் எனும்) அனுபவம் தோன்றுவது எவ்வாறு ?
கோசப் புரங்களை = பஞ்சகோசங்களாகிய நகரங்களை,
இடித்துத் தகர்க்கும் = (அது நீயல்லவென்று) இடித்துப் பொடியாக்கும்,
மதகுஞ்சரக் குருநாதனே = (ஞான) மதயானையாகிய குருநாதனே !
பாடல் : 113
சென்மாந்த ரஞ்செய்த வினைகளுடல் தருமெனில்
செல்கால மிவனுண்டலோ
கன்மாநு பவநரக சொர்க்கமெனில் வருகின்ற
காலத்து மிவனுண்டலோ
உன்மாத யாதனா உடல்கடவு ளுடல்மநுட
உடல்மாறி மாறியழியும்
தன்மாய உடல்கெடினும் இவனிருப் பதுகொண்டு
சத்தென்ப தொக்குமகனே.
பொருள் :
சென்மாந்தரம் செய்த வினைகள் = பிற (முந்திய) பிறவிகளின் செய்த செயல்கள்,
உடல் தரும் எனில் = (ஜீவனுக்கு) புதிய உடலைத் தரும் என்றால்,
செல்காலம் இவன் உண்டலோ = இறந்த காலத்திலும் இச்சீவன் இருந்திருக்கிறான் அல்லவா?
கன்ம அநுபவ நரக சொர்க்கம் எனில் = (இப்பிறவியில் இச்சீவன் செய்கின்ற) வினையின் பயன் அனுபவமாக நரக சொர்க்கம் (வரும் காலத்தில்) உண்டு என்றால்,
வருகின்ற காலத்தும் இவன் உண்டலோ = எதிர்காலத்திலும் இவன் இருப்பான் அல்லவா?
உன்மாத யாதனா உடல் = மனப்பிரமைக்குக் காரணமான யாதனா உடலும்,
கடவுள் உடல் = தேவ உடலும்,
மநுட உடல் = மனித உடலும்,
மாறி மாறி அழியும் = பலவாக வேறு வேறாகத் தோன்றி அழிவை அடையும்,
தன்மாய உடல்கெடினும் = தன்னுடைய மாயாமயமான, உடல்கள் தோன்றி அழிந்தாலும்,
இவன் இருப்பது கொண்டு = இந்த ஜீவன் தொடர்ந்து மூன்று காலத்திலும் இருப்பதால்,
சத் என்பது ஒக்கும் மகனே = (இவனை) ஸத் என்று சொல்வது அனைவருக்கும் ஏற்புடையதாகும் மைந்தனே!
பாடல் : 114
இருளாக மூடுஞ்சு ழுத்தியில் இராத்திரியில்
இரவிசுட ரற்றபொழுது
மருளாமல் இருளையும் பொருளையும் தெரிகின்ற
வகைகொண்டு சித்தாகுமே
பெருவாழ்வு மிக்கதா னேதன்னி டத்தினில்
பேராத பிரியமதனால்
அருகாத பிரியஞ்சு கத்தில்வரு மாதலால்
ஆநந்தமாம்மைந்தனே.
பொருள் :
இருள் ஆக மூடும் சுழுத்தியில் = இருள் போல (யாதொரு விஷயமும் தோன்றாமல்) மறைந்திருக்கும் உறக்கத்தில்,
மருளாமல் இருளையும் பொருளையும் = மயங்காமல் (அவித்யையாகிய) இருளையும், (அதில் பிரதிபலித்திருக்கும்) ஆநந்தமாகிய பொருளையும்,
இரவிசுடர் அற்றபொழுது = சூரியன் முதலான ஒளிகள் இல்லாத பொழுது,
இராத்திரியில் = இரவில் (விழித்திருக்கும் நிலையில்),
மருளாமல் இருளையும் பொருளையும் = மயங்காமல் இருட்டையும், கை முதலானவைகளால் தொட்டு உணரத்தக்க பொருட்களையும்,
தெரிகின்ற வகை கொண்டு = அறிகின்ற தன்மையால்,
சித்தாகுமே = சித்தென்பது அநுபவம் ஆகும்.
பெருவாழ்வு மிக்க = பேரின்பத்தால் ஒப்புயர்வற்ற,
தானே தன்னிடத்தினில் = தான் தானே தன்னிடத்து,
பேராத பிரியம் அதனால் = மாறாத அன்பு இருக்கின்ற காரணத்தினால்,
அருகாத பிரியம் சுகத்தில் வரும் ஆதலால் = குறைவற்ற அன்பு இன்பத்திலேயே உண்டாவது உலக அனுபவம் ஆதலால்,
ஆநந்தம் ஆம் = இவன் ஆநந்தன் என்பது அனுபவமாகும்.
மைந்தனே = சிஷ்யனே !
பாடல் : 115
அன்னபா னாதிசுக சாதனம தாகையால்
ஆர்க்குவெகு பிரியமாகும்
இன்னவா றான்மாவும் ஆநந்த சாதனம்
எனக்கருதல் பொருளல்லவே
சொன்னவான் மாவைவொரு சுகசாத னங்களொடு
சொல்லுவா யாகில் மகனே
உன்னதா நந்தம்வே றேதநுப விப்பதார்
உபயவான் மாவுமுளவோ.
பொருள் :
அன்ன பான ஆதி = அன்னம் பானம் முதலானவை,
சுக சாதனம் அது ஆகையால் = இன்பத்திற்கு கருவியாதலால்,
ஆர்க்கும் வெகு பிரியம் ஆகும் = அனைத்து ஜீவர்க்கும் அவை மிகுந்த பிரியத்திற்கு உரியவை ஆகும்,
இன்னவாறு = இப்படி,
ஆன்மாவும் ஆநந்த சாதனம் என = ஆத்மாவும் ஆநந்தத்திற்கு ஸாதனமாகும் என்று,
கருதல் பொருள் அல்லவே = நினைப்பது வேதாந்த நூல்களின் பொருள் இல்லை (சுருதிக்கு விரோதமாகும்),
சொன்ன ஒரு ஆன்மாவை = சுகஸ்வரூபம் என்று கூறிய ஆத்மாவை,
சுக சாதனங்களொடு = (அந்நபானாதி) சுகஸாதனங்களோடு,
சொல்லுவாய் ஆகில் = சேர்த்துச் சொல்லுவாய் என்றால்,,
மகனே = மைந்தனே,
உன்னது ஆநந்தம் வேறே ஏது = உனக்கு விருப்பமான ஆநந்தம் வேறு எது?
அநுபவிப்பது ஆர் = (அதை) அனுபவிப்பவர் யார் ?
உபய ஆன்மாவும் உளவோ = (விஷயமாகவும் விஷயீயாகவும்) இரண்டு ஆத்மாக்கள் உள்ளனவா?
பாடல் : 116
விடயசுக மதில்வருதல் பிரியமாத் திரமாகும்
வெகுபிரியம் ஆன்மாவிலாம்
விடயசுகம் வருபிரியம் மாறிவரும் ஆன்மாவில்
வெகுபிரியம் மாறாதுகாண்
விடயசுகம் விடலுமாம் கொளலுமாம் ஆன்மாவை
விடுவதெவர் கொள்வ தெவர்பார்
விடயசுக போகங்கள் விடுமவனை அவனால்
விடப்படா தொருநாளுமே.
பொருள்:
விடயசுகம் அதில் வருதல் = விஷய அனுபவ சுகத்தால் தோன்றுவது,
பிரிய மாத்திரம் ஆகும் = (விஷயத்தின் மேல் ஏற்படுவது) தாற்காலிக அன்பு மட்டும் ஆகும்,
ஆன்மாவில் வெகு பிரியம் ஆம் = ஆத்மாவில் (தன்னிடத்தில்) ஏற்படுவது (நிரந்தர) ஒப்பற்ற அன்பு ஆகும்.
விடய சுகம் வருபிரியம் மாறி வரும் = விஷய சுகத்தின் மேல் வரும் அன்பு மாறுபடும்,
ஆன்மாவில் வெகுபிரியம் மாறாது காண் = தன்னிடத்தில் உள்ள ஒப்பற்ற அன்பு மாறாது எப்பொழுதும் இருக்கிறது என்பதை சிந்தித்து அறிவாயாக!,
விடய சுகம் விடலும் ஆம் கொளலும் ஆம் = விஷய சுகம் ஒன்றை விடுவதும் ஒன்றைப் பற்றுவதுமாக இருக்கும்,
ஆன்மாவை விடுவது எவர் கொள்வது எவர் பார் = தன்னை விடுபவர் யார்? எடுப்பவர் யார்?,
விடயசுக போகங்கள் விடும் அவனை = விஷய சுக அனுபவங்களை விடுகின்ற தன்னை,
அவனால் விடப்படாது ஒருநாளுமே = தன்னால் ஒரு நாளும் விட முடியாது.
பாடல் : 117
வேகின்ற கோபங்க ளாலென்னை நான்கொன்று
விடுகிறே னென்று சிலபேர்,
சாகின்ற படியினால் தன்னையே தான்கொன்று
சாவனெனல் சங்கை அலவே
தேகம்த னைக்கொல்லு மவனால் விடப்பட்ட
தேகமவ னல்லன் மகனே
ஆகந்த னிற்கோப மலதுதனை ஒருநாளும்
ஆன்மாவெ றுப்ப திலையே.
பொருள் :
வேகின்ற கோபங்களால் = ( ஒரு மரமானது தான் அடைந்த தீயால் வேகுவது போல நோய் போன்றவைகளால் உடல்) வேகின்ற கோபம், வெறுப்பு போன்றவைகளால்,
என்னை நான் கொன்று விடுகிறேன் என்று = என்னை யான் கொன்று விடுகிறேன் என்று,
சில சாகின்ற படியினால் = சில போர் மரணத்தை தழுவிக் கொள்கின்ற காரணத்தினால்,
தன்னையே தான் கொன்று = தற்கொலை செய்து கொண்டு,,
சாவன் எனல் = இறப்பேன் என்று சொல்லுதல்,
சங்கை அலவே = ஸந்தேஹம் இல்லை,
தேகம் தனைக் கொல்லும் அவனால் = உடலின் துன்பத்தைத் தாங்க முடியாமல் அதனைக் கொல்லும் அந்த ஜீவனால்,
விடப்பட்ட தேகம் = விடப்பட்டட உடல்,
அவன் அல்ல = அவன் அல்ல,
மகனே = மைந்தனே,
ஆகம் தனில் கோபம் அலது = (தனக்கு வேறாகத் தனது என்று கருதப்படும்) உடலில் தான் வெறுப்பு உள்ளதே அல்லாமல்,
தனை ஒருநாளும் = தன்னை ஒருபோதும்,
ஆத்மா வெறுப்பது இலையே = தான் வெறுப்பது இல்லை.
(ஆத்மா- தான் - புறப்பொருள் போல பிரியத்துக்குரிய விஷயமோ, வெறுப்புக்குரிய விஷயமோ, உபேட்சைக்குரிய விஷயமோ இல்லை.)
பாடல்: 118
தாகப்ப டும்பொருளி லும்மகன் பிரியமாம்
தனயனிலும் உடல்பிரியமாம்
ஆகத்தி லும்பிரியம் இந்திரிய மாம்கரணம்
அதனிலும் பிரியமுயிராம்
ஏகப்பி ராணனிலும் வெகுபிரிய மான்மாவில்
இந்தஆன் மாமுக்கியம்
ஊகத்தி னால்கௌணம் மித்தைகர்த் தாமூன்றும்
ஓரொன்றில் அதிகமகனே.
பொருள் :
தாகப்படும் பொருளிலும் = அனைவராலும் விரும்பப்படும் செல்வத்திலும்,
மகன் பிரியமாம் = மகன் அதிகப் பிரியமுடையவன் ஆகும்.
தனயனிலும் = புத்ரனிலும்,
உடல் பிரியமாம் = தன்னுடல் அதிகப் பிரியமுடையதாகும்,
ஆகத்திலும் = தன் உடலைக்காட்டிலும்,
பிரியம் இந்திரியம் ஆம் = அதிகப் பிரியத்திற்கு உரியது புலன்களாகும்,
கரணம் அதனிலும் = புலன்களை விடவும்,
பிரியம் உயிராம் = அதிகப் பிரியத்திற்கு உரியது பிராணன் ஆகும்,
ஏகப் பிராணனிலும் = மனதோடு கூடிய உயிரை விடவும்,
ஆன்மாவில் வெகு பிரியம் = ஆத்மாவிடத்தில் அதிகப் பிரியம் உளதாகும்,
இந்த ஆன்மா முக்கியம் = ( ஆகவே,) இந்த ஆத்மாவே முதன்மையானதாகும்,
ஊகத்தினால் = அருதிக்கு விரோத இல்லாத நியாயத்தினால்,
கௌணம் மித்தை கர்த்தா மூன்றும் = கெளணாத்மா, மித்யாத்மா, கர்த்தாத்மா (முக்யாத்மா) ஆகிய மூன்றும்
மகனே = மைந்தனே,
ஓரொன்றில் அதிகம் = ஓரோர் சமயத்தில் முக்கியமானதாகும்.
குணத்தை அடிப்படையாகக் கொண்டது கெளணம். ஆத்மா சரீர ஸம்பந்தத்தினால் கர்த்தா, போக்தாவாகக் கருதப்படுகிறது. தன் சுகத்திற்காக ஜீவன் கர்மம் செய்வது போல் புத்திரனும் தனக்காக(தந்தைக்காக) செய்வதால், அக்குணத்தின் அடிப்படையில் புத்ரனும் ஆத்மாவாகக் கருதப்படுகிறான். ஆகவே புத்ரன் கௌண ஆத்மா.
உடல், மனம் (ஸ்தூல சூக்ஷ்ம சரீரங்கள்) ஆத்மா மேல் கற்பிக்கப்பட்டு ஆத்மாவாக பொய்யாகக் கருதப்படுவதால் அவை மித்யா ஆத்மா.
அனைத்துள்ளும் ஆதாரமாக ஒரே மெய்ப்பொருளாக இருப்பதால் அனைத்திற்கும் சாக்ஷியான ஆத்மா முக்ய ஆத்மா எனப்படும்.
பாடல் : 119
கெவுணவான் மாமுக்கியம்விடலாத உடலம்ப ரிக்கும்நாள் உடலான
மித்தையான் மாமுக்கியம்திடமான நன்மைகதி வேண்டினால் கர்த்தனாம்
சீவவான் மாமுக்கியம்சடமாயும் முத்தியினில் ஞானவான் மாவான
தானேம காமுக்கியம்.
பொருள் :
கெடல் ஆன பொழுது = ஒருவனுக்கு மரணம் வரும்பொழுது,
இவன் காணிக்கு மகனான = இவனுடைய பூமி முதலானவற்றை ஆளுதற்குரிய புத்திரனாகிய,
கெவுண ஆன்மா முக்கியம் = கௌணாத்மா முக்கியமாகும்,
விடலாத உடலம் பரிக்கும் நாள் = விடத்தக்கதல்லாத அந்நமயகோசமான உடலை (தான் சுகமாக இருக்க வேண்டுமென்று ஆஹாராதிகளை புத்திராதிகளைச் சேர்க்காமல் தானேவுண்டு) பாதுகாக்கும் வேளையில்,,
உடலான மித்தை ஆன்மா முக்கியம் = உடலாகிய மித்யாத்மா முக்கியமாகும்,
திடமான நன்மை கதி வேண்டினால் = நிலையான அமிர்தம் முதலானவை கிடைக்கும் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களை அடைய விரும்பினால்,
கர்த்தனாம் சீவான்மா முக்கியம் = (மனோமயாதி கோச அபிமானியாகிய) ஜீவாத்மா முக்கியமாகும்,
சடமாயும் முத்தியினில் = ஜடமாகிய அஞ்ஞானம் (அதன் காரியங்களோடு) அழிந்து போகும் மோக்ஷ நிலையில்,
ஞான ஆன்மாவான தானே மகாமுக்கியம் = சித் ஸ்வரூப ஆத்மாவாகிய தானே மிகவும் முக்கியமானதாகும்.
பாடல்: 120
புலியுமநு கூலமெனில் இட்டமாம் பகைசெயின்
புதல்வனெனி னும்வெறுப்பாம்
உலகிலிரு வகையுமல் லாதபுல் லாதியில்
உதாசீன மாமாதலால்
மலினமறு சின்மயன் பலவகையும் இப்படி
மகிழ்ச்சியில் விருப்பமிகழான்
அலகிலா நந்தவடி வாகுமுன் சொரூபத்தை
ஆராய்ந்து பார்மைந்தனே.
பொருள் :
புலியும் அநுகூலம் எனில் இட்டமாம் = (ஆபத்தான தனது துக்கத்திற்கு காரணமான) புலியும் (தனது சுகத்திற்கு ஆதரவாக இருக்கும்) என்றால் விருப்பமுடையதாகும்,
பகைசெயில் புதல்வன் எனினும் வெறுப்பாம் = (தனது சுகத்திற்கு) எதிராக இருக்கிறது என்றால் மைந்தன் ஆனாலும் வெறுப்புக்குரிய விஷயமாகும்,
உலகில் இருவகையும் அல்லாத = உலகத்தில் (தனது சுகத்திற்கோ துக்கத்திற்கோ) காரணமல்லாத,
புல் ஆதியில் = (விருப்பு வெறுப்புக்கு விஷயமாகாத) புல் முதலானவைகளில்,
உதாசீனம் ஆம் = நடுநிலை ஆகும்,
ஆதலால் = ஆகவே,
மலினம் அறு சின்மயன் = தூய்மையான சின்மயமான ஆத்மா,
பலவகையும் இப்படி = பலவிதங்களிலும் இப்படி (விருப்பு, வெறுப்பு, நடுநிலை என மாறுபடும் விஷயமாகாமல்,
மகிழ்ச்சியில் விருப்பம் இகழான் = (தன்னிடத்தில்) ஒரு பொழுதும் விருப்பம் இல்லாதவன் ஆகான்.
அலகில் ஆநந்த வடிவாகும் = இப்படி எல்லையில்லாத ஆநந்த ஸ்வரூபமா,
உன் சொரூபத்தை = உன்(உண்மை) வடிவை,
ஆராய்ந்து பார் மைந்தனே = (பஞ்சகோசங்களிலிருந்து வேறுபடுத்தி சாஸ்த்ர, குரு உதவியோடு) ஆராய்ந்து பார்ப்பாய் மகனே!
Comments