Kaivalya Navanitham 1(81-101)
கைவல்ய நவநீதம்
தத்துவ விளக்கப் படலம்
பாடல் : 81
நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும்,
நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான்,
தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும்,
ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே.
பொருள் :
நீ நான் என்று = -நீ என்றும் நான் என்றும்,
இரண்டு இலாமல் = வேறுபாடு தோன்றாமல்,
நிறைந்த பூரணமாய் = நிறைந்த பரிபூரணமாய்,
எங்கும் நானாக = எல்லா இடங்களிலும்
சின்மயனான நானொருவனே உளனாக,
தெளிந்த ஞானம் = அநுபவமாக அறிந்த ஞானம்,
நழுவுமோ குருவே என்றான் = நீங்குமோ ஆசார்யரே, என்று கேட்டான்.
தானாகும் பிரமரூபம் = தன்மயமாகும் பிரஹ்ம ரூபமானது,
சற்குரு நூலால் தோன்றும் = ஸற்குரு உபதேசத்தாலும் சஸ்த்ர விசாரத்தாலும் உண்டாகும்,
ஆனாலும் = இப்படி ப்ரஹ்ம அனுபவம் உளதானாலும்,
தடைகள் உண்டேல் = தடைகள் உண்டாகுமானால்,,
அனுபவம் உறைத்திடாதே = ஏற்பட்ட அனுபவம் நிலைபெறாது.
பாடல் :82
தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள்,
படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே,
உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத்,
திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே.
பொருள் :
தடை எவை எனில் = தடைகள் யாவை என்று கேட்டால்,
அஞ்ஞான சந்தேக விபரீதங்கள் = அஞ்ஞானம் (அறியாமை) ஸந்தேஹம் (ஐயம்) விபரீதம் (திரிபு),
படர்செயும் இந்த மூன்றும் = துன்பத்தைக் கொடுக்கும் இந்த மூன்றும்,
பல சன்மப் பழக்கத்தாலே = முந்திய பல பிறவிகளில் ஏற்பட்ட பதிவுகளால்,
உடன் உடன் வரும் = அடிக்கடி உண்டாகும்,
வந்தக்கால் = அப்படி வந்தால்,
உயர்ஞானம் கெடும் = அத்தைவ ஞானம் மறந்து போகும்.
இவற்றை = இந்த அஞ்ஞான, ஸந்தேஹ, விபரீதங்களை,
கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே = சிரவண, மனன, நிதித்யாஸனங்களாலே,
திடமுடன் கெடுப்பாய் = உறுதியுடன் அழிப்பாய்.
பாடல் : 83
அக்கினி கட்டுப் பட்டால் அற்பமும் சுடமாட் டாது,
மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே வாது,
சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே,
விக்கின மடம்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே.
பொருள் :
அக்கினி கட்டுப்பட்டால் = நெருப்பானது (மணி மந்திர மூலிகைகளினாலே) அடக்கப்படுமானால்,
அற்பமும் சுடமாட்டாது = கொஞ்சமும் விறகு முதலானவற்றை எரிக்க முடியாதது போல,
மக்கின ஞானத்தாலே = அஞ்ஞான ஸந்தேஹ விபரீதங்களிலே மூழ்கிய ஞானத்திலே,
வந்த பந்தமும் வேவாது = அநாதி காலமான தொடர்ந்து வந்துள்ள கர்த்திருத்வம் முதலான பந்தமும் அழியாது.
சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளிதலாலே = (ஆகவே,) நெடுங்காலம் இடைவிடாமல் ச்ரத்தையோடு தொடர்ந்து கேட்டல், சிந்தித்தல், தெளிதல்களாலே,
விக்கின மடம் சந்தேகம் விபரீதம் = ஞானபலமான மோக்ஷத்திற்குத் தடைகளான அறியாமை, ஐயம், திரிபு என்பவற்றை,
போக்குவாயே = அழிப்பாயாக.
பாடல் : 84
பிரமபா வனையை மூடிப் பேதம்காட் டுவதஞ் ஞானம்,
குரவன்வாக் கியம்நம் பாமல் குழம்புவ தாம்சந் தேகம்,
திரமறு சகம்மெய் என்றும் தேகம்நான் என்றும் உள்ளே,
விரவிய மோகம் தானே விபரீதம் என்பர் மேலோர்.
பொருள்:
பிரம பாவனையை மூடி = சிவோகம் என்னும் பாவனையை மறைத்து,
பேதம் காட்டுவது அஞ்ஞானம் = (நான் ஜீவன் என்று) வேறுபடுத்திக் காட்டுவது அஞ்ஞானமாகும்.
குரவன் வாக்கியம் நம்பாமல் = (நீ ப்ரஹ்மமென்று அருளிய) குருவின் உபதேச மொழிகளை நம்பாமல்,
குழம்புவதாம் சந்தேகம் = (நான் ப்ரஹ்மமோ, அலனோ என்று) கலங்குவது ஸந்தேஹம் (ஐயம்) ஆகும்.
திரம் அறு சகம் மெய் என்றும் = நிலையில்லாத உலகை உண்மை என்றும்,
தேகம் நான் என்றும் = அநான்மாவாகிய உடலை நான் என்றும்,
உள்ளே விரவிய மோகம் தானே = மனதில் பரவி இருக்கும் மயக்கமே,
விபரீதம் என்பர் மேலோர் = விபரீதம் என்னும் சொல்வர் மேலோர்.
பாடல் : 85
தத்துவ அநுபோ கம்தான் சாதித்தல் கேட்டல் என்பார்,
ஒத்துள பொருள்ஊ கத்தால் உசாவல்சிந் தித்தல் என்பார்,
சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் தெளிதல் என்பார்,
நித்தமிப் படிச்செய் தக்கால் நிருவாணம் பெறுவாய் நீயே.
பொருள் :
தத்துவ அநுபோகம் = ப்ரஹ்மாகார விருத்தியை,
தான் சாதித்தல் = (வேதாந்த அர்த்த சிந்தனத்தினாலே) தான் அடிக்கடி சிந்தித்து நிற்பதையே,
கேட்டல் என்பார் = சிரவணம் என்பார் (பெரியோர்).
ஒத்துள பொருள் = சிரவணத்தினாலே அறிந்து கொண்ட பொருளை,
ஊகத்தால் = அபேதத்தை நிச்சயிப்பதும், பேதத்தை நீக்குவதும் ஆன யுக்தியினால்,
உசாவல் சிந்தித்தல் என்பார் = ஆராய்தலை மனனம் என்பார் (பெரியோர்).
சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் = மனம் பிரஹ்மாகார மாத்திரமாக நிற்கும் அனுபவத்தை,
தெளிதல் என்பார் = நிதித்தியாயனம் என்பர் (பெரியோர்).
நித்தம் இப்படிச் செய்தக்கால் = என்றும் இவ்வாறு (சிரவணாதிகளை) அனுஷ்டித்து வந்தாயானால்,
நிருவாணம் பெறுவாய் நீயே = (அவ்வஞ்ஞானாதி தடைகள் நீங்கி) நீ மோக்ஷமடைவாய்.
பாடல் : 86
எத்தனை நாள்ஞா தாவும் ஞானமும் இருக்கும் உன்பால்,
அத்தனை நாளும் வேண்டும் அப்பால்ஓர் செயலும் வேண்டா,
நித்தமும் வெளிபோல் பற்றா ஞேயம்மாத் திரமாய்ச் சீவன்,
முத்தர்ஆ னவர்வி தேக முத்திபெற் றிருப்பார் என்றும்.
பொருள் :
எத்தனை நாள் = எவ்வளவு காலம்,
ஞாதாவும் = (ஞானத்தின் கர்த்தாவாகிய) அந்தக்கரணமும் (மனமும் புத்தியும் அஹங்காரமும்)
ஞானமும் = (பிரஹ்மாகாரமான அந்தக்கரண விருத்திரூப) ஞானமும்,
இருக்கும் உன்பால் = உன்னிடத்தில் இருக்குமோ,
அத்தனை நாளும் வேண்டும் = அவ்வளவு காலமும் (அஜ்ஞானாதிப் பிரதிபந்த விரோதிகளான சிரவணாதிகள்) வேண்டும்.
அப்பால் = (அறிபவன், அறிவு எனும் பேதங்கள் இறந்து மஹாவாக்கிய விசாரத்தால் தோன்றிய ஞான விஷயமான ப்ரஹ்மம் மாத்திரமாக நீ நின்ற) பின்னர்,
ஓர் செயலும் வேண்டா = (சிரவணாதி ஸாதனைகளுள்) ஒரு ஸாதனையும் உனக்கு அவசியமில்லை.
நித்தமும் வெளிபோல் = நாள்தோறும் ஆகாயம் போல,
பற்றா ஞேய மாத்திரமாய் = அசங்க சிதாத்மா மாத்திரமாக,
சீவன் முத்தர் ஆனவர் = ஜீவன் முக்தர் ஆனவர்,
விதேக முத்தி பெற்று = விதேஹ முக்தி அடைந்து,
இருப்பார் = எக்காலமும் அதுவாய் இருப்பார்.
பாடல் : 87
ஞானமார் ஜீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்,
வான்நிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன்,
ஆனவர் நாமமும் ஆகும் அவர்களில் பிரம வித்தின்,
தானமும் மற்றை மூவர் தாரதம் மியமும் சொல்வேன்.
பொருள் :
ஞானமார் ஜீவன் முத்தர் = ஞானம் நிறைந்த ஜீவன் முக்தர்கள்,
நால்வகை யாவர் = நான்கு விதமாய் இருக்கின்றனர்.
கேளாய் = அவ்விதங்களை சொல்லக் கேட்பாயாக,
வான்நிகர் பிரமவித்து = ஆகாயத்திற்கு ஒப்பான ப்ரஹ்மவித் எனவும்.
வரன் = வரன் எனவும்,
வரியான் = வரியான் எனவும்,
வரிட்டன் = வரிஷ்டன் எனவும்,
ஆனவர் நாமமும் ஆகும் = அச்சீவன் முக்தர்களின் பெயராகும்.
அவர்களில் பிரமவித்தின் தானமும் = அந்நால்வரில் முதலாவதான ப்ரஹ்மவித்தின் தன்மையையும்,
மற்றை மூவர் = ஏனைய மூவருடைய,
தாரதம்மியமும் = வேறுபட்ட தன்மைகளையும்,
சொல்வேன் = இனிச் சொல்கிறேன்.
பாடல் : 88
தீரராய்ப் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளியு முன்னம்,
வாரமாய் இருந்த தங்கள் வருணமாச் சிரமம் சொன்ன, பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக,
நேரதாச் செய்வர் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர்.
பொருள் : (பிரஹ்மவித்தின் இயல்பு 88 - 90)
தீரராய் = விவேகாதி ஸாதன சதுஷ்டய ஸம்பந்தராய்,
பிரமவித்தாய் = பிரம்ம தத்துவத்தை அறிந்த ஞானிகளாகி,
தெளிந்தவர் = (மோஹம் நீங்கி நான் ஆத்மா எனத்) தெளிந்த அறிவுடையவர்,
தெளியு முன்னம் = அப்படித் தெளிந்ததற்கு முன்னர்,
வாரமாய் இருந்த = உரிமையாய் இருந்த,
தங்கள் = தங்களுடைய
வருணம் ஆச்சிரமம் சொன்ன = வர்ண, ஆச்ரமங்களைப் பற்றிய சாஸ்த்ரங்களில் சொல்லிய தர்மங்கள்,
பார காரியம் ஆனாலும் = கடினமான செயல்கள் ஆனாலும்,
பலர்க்கு உபகாரமாக = மற்ற பலருக்கு உதவும் பொருட்டு,
நேரதாச் செய்வர் = முறைப்படி செய்துவருவர்,
தீர்ந்த நிலைவிடார் = (அப்படிச் செய்துவந்தாலும் சாஸ்த்ரங்கள் சொல்லிய) முடிவான அத்வைதஞான நிச்சயத்தை விட்டுவிட மாட்டார்கள்.
சீவன்முத்தர் = வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே முத்தர்களாக உள்ள ப்ரஹ்மவித்துக்கள்..
பாடல் : 89
காமமா திகள்வந் தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார்,
தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார்,
பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார்,
ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர்.
பொருள் :
காமமாதிகள் வந்தாலும் = ப்ராரப்த (விதி) வலியினால் ப்ரஹ்மவித்துக்களிடத்து காமம் முதலானவை எழுந்தாலும்,
கணத்தில்போம் = கணநேரத்தில் மறைந்து போகும்.
மனத்தில் பற்றார் = அஞ்ஞானிகளை போல அவைகளை மனதில் வாசனையாகப் பற்றமாட்டார்கள்,
தாமரை இலைத் தண்ணீர் போல = தாமரை இலை மேல் உள்ள தண்ணீரைப் போல,
சகத்தொடும் கூடி வாழ்வார் = பற்றில்லாமல் உலக மக்களோடு கூடி வாழ்வார்கள்,
பாமரர் எனக் காண்பிப்பார் = சாமான்ய மனிதரைப் போல் தன்னைக் காட்டிக் கொள்வார்கள்.
பண்டிதத் திறமை காட்டார் = ஞானிகளை போலக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்,
ஊமரும் ஆவார் = மௌனமாக இருப்பார்,
உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர் = மனதில் நிறைவான ஆனத்தத்தை எப்பொழுதும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜீவன் முக்தர்.
பாடல் : 90 புறவாழ்க்கை
பேதகர் மத்தால் வந்த பிரா ரத்தம் நாநா வாகும்,
ஆதலால் விவகா ரங்கள் அவரவர்க் காவ வாகும்,
மாதவம் செயினும் செய்வார் வாணிபம் செயினும் செய்வார், பூதலம் புரப்பார் ஐயம் புகுந்துண்பார் சீவன் முத்தர்.
பொருள் :
பேத கர்மத்தால் வந்த = வேறுபட்ட வினைகளால் விளைந்த,
பிராரத்தம் நாநாவாகும் = செயல்படத்துவங்கிய வினைப்பயன்கள் பலவாக இருக்கும்,
ஆதலால் விவகாரங்கள் = ஆகவே, தற்போதைய செயல்கள்,
அவரவர்க்கு ஆவ ஆகும் = அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப அமையும்,
மாதவம் செயினும் செய்வார் = (துறவியராய் ஓரிடத்தில் இருந்து) பெருமையுடைய தவத்தினைக் செய்தாலும் செய்வார்கள்,
வாணிபம் செயினும் செய்வார் = (வைசியராய் இருந்து) வியாபாரத் தொழில் செய்தாலும் செய்வார்கள்,
பூதலம் புரப்பார் = (க்ஷத்தியராய் இருந்து) அரசாட்சி செய்தாலும் செய்வார்கள்,
ஐயம் புகுந்துண்பார் = பிக்ஷை எடுத்து உண்ணினும் உண்பார்கள்,
சீவன் முத்தர் = ஜீவன் முக்தர்கள்.
பாடல் : 91 அகவாழ்க்கை
சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன் நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய்விண் விழுது வீழ்ந்து பொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா ஒன்றும் பாரார் நன்றுதீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர்.
பொருள் :
சென்றது கருதார் = கடந்த காலத்தை நினைக்க மாட்டார்,
நாளைச் சேர்வது நினையார் = நாளை வருவதைப் பற்றியும் நினைக்க மாட்டார்.
கண்முன் நின்றது புசிப்பார் = நிகழ்காலத்தில் கண்முன்னே வரும் வினைப்பயன்களை ஏற்றுக் கொண்டு அனுபவிப்பார்,
வெய்யில் நிலவாய் = சூரியன் நிலவைப் போல குளிர்ந்து போனாலும்,
விண் விழுது வீழ்ந்து = ஆலமரத்தினைப் போல ஆகாயத்திலிருந்து விழுதுகள் இறங்கி வந்தாலும்,
பொன்றின சவம் வாழ்ந்தாலும் = இறந்த உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தாலும்,
புதுமையா ஒன்றும் பாரார் = வியப்பாக ஒன்றையும் கருதமாட்டார்,
நன்று தீது என்னார் = ஒன்றை இது நன்றென்றும், மற்றொன்றை இது தீதென்றும் சொல்ல மாட்டார்கள்,
சாட்சி நடுவான சீவன் முத்தர் = திரிபுடிக்கு சாட்சியாய் இருக்கும் ஜீவன்முக்தர் ஆனவர்.
பாடல் : 92
பின்னைமூ வரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம்,
தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தம் தானாய், உன்னுவோன் வரன்வேற் றோரால் உணர்பவன் வரியா னாகும்,
அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் வரிட்ட னாமே.
பொருள் :
பின்னை மூவரில் = (வரன், வரியான், வரிஷ்டன் எனும்) ஏனைய மூவர்களில்,
இரண்டு பேர்களும் = (வரன், வரியான்) இருவரும்,
சமாதி யோகம் தன்னை உற்றிருப்பார் = சமாதியோகத்தில் பொருத்தியிருப்பார்கள்.
தேக சஞ்சார நிமித்தம் = உடல் இருப்பதற்கு இன்றியமையாத உணவு முதலியவற்றின்) பொருட்டு,
தானாய் உன்னுவோன் வரன் = பிராரப்த வலிமையினால் சமாதியிலிருந்து விழித்தெழுபவன் வரன் ஆகும்.
வேற்றோரால் உணர்பவன் வரியான் ஆகும் = அருகிலுள்ள சீடர் முதலியோரால் எழுப்பப்பட்டு சமாதியினின்று எழுபவன் வரியான் ஆகும்.
அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் = பிறராலோ, தானாகவோ சமாதி கலையாதவன்,
வரிட்டன் ஆமே = வரிஷ்டன் ஆவான்.
பாடல் : 93
அரிதாகு மிவர்க ளிவ்வாறு அநேக ரானாலு முத்தி, சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால், பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன், வரியானும் வரனு மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார்.
பொருள் :
அரிது ஆகும் இவர்கள் = மூன்று உலகங்களிலும் கிடைப்பதற்கு அரியதான இத்தகைய சீவன் முக்தர்கள்,
இவ்வாறு அநேகர் ஆனாலும் = பிராரப்தத்தால் பலவிதமான விவகாரங்களை உடையவர்களாக இருந்தாலும்,
முத்தி சரியாகும் = (ஞானத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாததால் ஞான பலமான) மோக்ஷம் இவர்களுக்கு ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கும்.
பாடுபட்ட சமாதிக்கு = வரன் முதலானவர் சிரமப்பட்டு அடைந்திருக்கும் நிர்விகல்ப சமாதிக்கு,
பலன் ஏது என்றால் = பலன் என்னவென்று கேட்டால்,
பெரிதான திருஷ்ட துக்கம் = விதிவசத்தால் ஏற்படும் பிறரால் காணக்கூடிய துக்கத்தை (தோற்றத்தை)
பிரமவித்து அநுபவிப்பன் = ப்ரஹ்மவித்து அநுபவிப்பான்.
வரியானும் வரனும் மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார் = மற்றை மூவரும் துக்கன்றி ஜீவன்முக்தி சுகத்தினை உடையவராய் வாழ்வார்கள்.
பாடல் : 94
பிரமஞா னிகளும் கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால்,
திரமுறும் அஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியே தென்றால்,
பரவுமா காசம் ஒன்றில் பற்றாது மற்றை நாலும்,
விரவின தோடும் கூடும் விதமிரு வோரும் ஆவார்.
பொருள் :
பிரம ஞானிகளும் = ஆத்மஞானிகளும்,
கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால் = (பிறவிக்குக் காரணமான அவித்யா, காம) கர்மங்களையுடைய அறிவீனரைப் போலவே, விதிப்படி விவகாரங்களைச் செய்து வாழ்ந்தால்,
திரமுறும் அஞ்ஞானம் போய் = வலிமை பொருந்திய அவித்யா காம, கர்மல்கள் நீங்கி,
செனியாத வழி ஏது என்றால் = மீண்டும் பிறவாதிருப்பதற்குக் காரணம் என்னவென்று கேட்டால்,
பரவும் ஆகாசம் = எங்கும் விரிந்திருக்கும் ஆகாயம்,
ஒன்றில் பற்றாது = ஒன்றிலும் ஒட்டாது.
மற்றை நாலும் = மற்ற வாயு முதலான நான்கு பூதங்களும்,
விரவின தோடும் கூடும் விதம் = தம்மோடு கலக்கும் பொருட்களோடு ஒட்டுவது போல,
இரு வோரும் ஆவார் = ஞானி, அஜ்ஞானி இருவரும் ஆவார்கள்.
பாடல் : 95
சீவன்முத் தரைச்சே வித்தோர் சிவன் அயன் நெடுமா லான, மூவரும் மகிழ நோன்பு முழுவதும் செய்து சன்ம,
பாவன மானா ரென்று பழமறை முழங்கு மிப்பால்,
மேவரும் சீவன் முத்தர் விதேகமுத் தியும்நீ கேளாய்
பொருள் :
சீவன் முத்தரைச் சேவித்தோர் = ஜீவன் முத்தரை வணங்குபவர்கள்,
சிவன் அயன் நெடுமா லான மூவரும் மகிழ = பரமசிவன், ப்ரஹ்மா, பெருமாள் ஆகிய மூவரும் மகிழும்படியாக,
நோன்பு முழுவதும் செய்து = விரதங்கள் அனைத்தையும் குறை வரச் செய்து,
சன்ம பாவனம் ஆனார் என்று = (பாவங்கள் நீங்கி) பிறவி தூய்மையடைந்தவர்கள் ஆனார்கள் என்று,
பழமறை முழங்கும் = அநாதியான வேதங்கள் உரத்தச் சொல்லும்.
இப்பால் = இனிமேல்,
மேவரும் சீவன் முத்தர் = கிடைத்தற்கரிய ஜீவன்முக்தர் (அடையும்),
விதேகமுத்தியும் = விதேஹ கைவல்யத்தையும்,
நீ கேளாய் = நீ (கவனமாகக்) கேட்பாயாக.
பாடல் : 96
பஞ்சினை ஊழித் தீப்போல் பலசன்ம விவித வித்தாம், சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல் சுட்டு வெண்ணீ றாக்கும்,
கிஞ்சிதா காமி யம்தான் கிட்டாமல் விட்டுப் போகும், விஞ்சின பிராரத் தத்தின் வினையது பவித்துத் தீரும்.
பொருள் :
பஞ்சினை = பருத்திப்பஞ்சு முதலியவற்றை,
ஊழித்தீப் போல் = பிரளய கால வடவாமுக நெருப்பு சார்ந்தால் எப்படி எரித்துச் சாம்பலாக்குமோ அது போல,
பலசன்ம விவித வித்தாம் = பல பிறவிகளுக்கு பலப்பலவான விதைகளாகிய,
சஞ்சிதம் எல்லாம் = ஸஞ்சிதவினைகள் அனைத்தையும்,
ஞானத்தழல் = ஞானமாகிய நெருப்பு,
சுட்டு வெண்ணீறு ஆக்கும் = எரித்துச் சாம்பலாகப் பண்ணும்,
ஆகாமியம்தான் = ஞானத்திற்குப் பின் செயும் வினையின் பலன்களானது,
கிஞ்சித் = சிறிதும்,
கிட்டாமல் விட்டுப் போகும் = ஒட்டாமல் விட்டுப் போகும்.
விஞ்சின = மிஞ்சிய,
பிராரத்தத்தின் வினை = பிராரப்த கர்மமானது,
அநுபவித்துத் தீரும் = அனுபவித்து முடியும்.
பாடல் : 97
பொறுமையால் பிராரத் தத்தைப் புசிக்குநாள் செய்யும் கர்மம்,
மறுமையில் தொடர்ந்தி டாமல் மாண்டுபோம் வழியே தென்றால்,
சிறியவர் இகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார், அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெலாம் கைக்கொள் வாரே.
பொருள் :
பொறுமையால் = இன்பதுன்பங்களை ஸமமாகக் காணும் திதிக்ஷை எனும் ஸஹிப்புத்தன்மையால்,
பிராரத்தத்தை = பிராரப்த பலனான இன்பதுன்பங்களை,
மறுமையில் = ஜீவன் முக்தி நிலையில்,
புசிக்குநாள் = அநுபவிக்கும் வேளையில்
செய்யும் கர்மம் = செய்யும் நல்வினை, தீவினைகள்,
தொடர்ந்திடாமல் = அவரைத் தொடராமல்,
மாண்டுபோம் வழி = அழிந்து போகும் வழி
ஏது என்றால் = யாது என்று கேட்பாயாகில்,,
சிறியவர் இகழ்ந்து = விவேகமற்றவர் அவமதித்து,
ஞானி செய்த பாவத்தை = அச்சீவன் முக்தர் உடலினால் செய்த பாவங்களை,
கொள்வார் = ஏற்றுக்கொள்வர்.
அறிவுளோர் = விவேகம் உள்ளவர்,
அறிந்து பூசித்து = ஞானிகள் ப்ரஹ்ம சொரூபம் என்று அறிந்து பூசித்து,
அறமெலாம் = புண்ணியங்களெல்லாம்
கைக்கொள்வாரே = ஏற்றுக்கொள்வர்.
பாடல் : 98
அரியமெய்ஞ் ஞானத் தீயால் அவித்தையாம் உடல்நீ றாகும், பெரியதூ லமும்கா லத்தால் பிணமாகி விழுமந் நேரம்,
உரியசூக் குமச ரீரம் உலையிரும் புண்ட நீர்போல்,
துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே.
பொருள்:
அரிய மெய்ஞ்ஞானத்தீயால் = கிடைத்தற்கரிய தத்துவஞானமாகிய நெருப்பினால்,
அவித்தையாம் உடல் நீறாகும் = அவித்யையாகிய காரண சரீரம் வெந்து சாம்பலாகும் (இல்லாமல் அழிந்து போகும்).
பெரிய தூலமும் = கனமான தூல சரீரமும்,
காலத்தால் பிணம் ஆகி விழும் = விதி முடியும் காலத்தில் இறந்து போகும்.
அந்நேரம் = அப்பொழுது,
உரிய சூக்கும சரீரம் = உரிமையாகிய நுண்ணுடலானது,
உலை இரும்புண்ட நீர்போல் = கொல்லுவையில் காய்ந்த இரும்பு உண்ட நீர் போல,
துரியமாய் = துரியமாயும்,
விபுவாய் = பூரணமாயும்,
நின்ற சொரூபத்தில் = இருக்கின்ற ப்ரஹம சொரூபத்தில்,
இறந்து போமே = லயமாகி விடும்.
பாடல் : 99
கடமெனும் உபாதி போனால் ககனமொன் றானாற் போல, உடலெனும் உபாதி போன உத்தரம் சீவன் முத்தர்,
அடிமுடி நடுவும் இன்றி அகம்புறம் இன்றி நின்ற,
படிதிகழ் விதேக முத்திப் பதம் அடைந் திருப்பர் என்றும்.
பொருள் :
கடமெனும் உபாதி போனால் = குடம் எனும் உயாதியானது உடைந்து போய்விட்டால்,
ககனம் ஒன்றானால் போல = உள்ளும் புறமும் இருக்கும் ஆகாயம் ஒன்றாவது போல,
உடலெனும் உபாதி = காரண, சூக்கும், தூல உடல்கள் எனும் உபாதி,
போன உத்தரம் = நீங்கிய பிறகு,
சீவன் முத்தர் = ஜீவன்முக்தர்கள்,
அடிமுடி நடுவும் இன்றி = முதலும் முடிவும் நடுவும் இல்லாமல்,
அகம்புறம் இன்றி = உள்ளும் புறமும் இல்லாமல்,
நின்றபடி திகழ் = தான் இருந்தபடியே இருக்கின்ற,
விதேக முத்திப் பதம் அடைந்து = விதேக முக்தி (மீண்டும் பிறவா) நிலையை அடைந்து,
என்றும் இருப்பர் = எப்பொழுதும் அப்படியே இருப்பார்கள்.
பாடல் : 100
சொல்லிய மகனே எங்கும் சூழ்வெளி இருக்க மண்ணைக், கெல்லிய பின்பு தோன்றும் கிணற்றின் ஆ காசம் போலே, ஒல்லையாம் பிரம நூலால் உற்றது போலே தோன்றும், எல்லையில் நாமெப் போதும் ஏகமென் றிருந்து வாழ்வாய்.
பொருள் :
சொல்லிய மகனே = (நீ நான் என்று இரண்டிலாமல் நிறைந்த பூரணமாய் எங்கும், நானாகத் தெளிந்த ஞானம்) என்று முன்னே பிரஹ்ம அனுபவம்) கூறிய மைந்தா,
எங்கும் சூழ்வெளி இருக்க = எவ்விடத்தும் நிறைந்துள்ள ஆகாயம் தான் இருந்தபடியே இருக்க,
மண்ணைக் கெல்லிய பின்பு = பூமியை அகழ்ந்த பின்னர்,
தோன்றும் கிணற்றின் ஆகாசம் போலே = (ஆகாயம் பூரணம் என்னும் ஞானம் இல்லாதவனுக்கு புதிதாக அப்போது உண்டானது போலத்) தோன்றுகின்ற கிணற்றின் ஆகாயம் போல,
ஒல்லையாம் பிரம = ஏற்கனவே சித்தமாகவுள்ள ப்ரஹ்மம்,
நூலால் = சாஸ்திர நூலால் (குருவுபதேசத்தாலும்)
உற்றது போலே தோன்றும் = அப்போது புதிதாக அடையப்பட்டது போல இருக்கும்.,
எல்லையில் நாம் = வரையறையில்லாத ( பதியக் அன்னபிரஹ்மமாகிய) நாம்,
எப்போதும் ஏகம் என்று = எக்காலத்திலும் ஒன்றே என்று,
இருந்து வாழ்வாய் = இவ்வண்ணம் இருந்து (ஆநந்தமாக) வாழ்வாயாக.
பாடல் : 101
கானல்நீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாவூர், வானமை கயிற்றில் பாம்பு மலடிசேய் முயலின் கோடு, பீனமாம் தறிபு மானில் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே, ஞானம் மெய் மகனே உன்னை நம்மாணை மறந்தி டாயே.
பொருள்:
கானல்நீர் (இல்)= கானலில் நீர் போலவும்,
கிளிஞ்சில் வெள்ளி = சிப்பியில் வெள்ளி போலவும்,
கந்தர்ப்ப நகர் = கந்தர்வ நகரம் போலவும்,
கனாவூர் = கனவு நகரம் போலவும்,
வானமை = ஆகாயத்தில் நீல நிறம் போலவும்,
கயிற்றில் பாம்பு = கயிற்றில் பாம்பு போலவும்,
மலடி சேய் = மலடியின் மகன் போலவும்,
முயலின் கோடு = முயலின் கொம்பு போலவும்,
பீனமாம் தறி புமான் இல் = பருத்த தடியில் மனிதன் போலவும்,
பிரபஞ்ச மெல்லாம் = (அஹங்காராதி) பிரபஞ்சம் முழுவதும்,
பொய்யே = மித்யையே ஆகும்.
ஞானம் = ஞான ஸ்வரூபமான பிரஹ்மமே,
மெய் = உண்மை ஆகும்.
மகனே = மைந்தா,
உன்னை = இத்தன்மையதான உனது ஆத்மஸ்வரூபத்தை,
நம்மாணை = நம் மேல் ஆணை,
மறந்திடாயே = நீ மறந்துவிடாதே.
தத்துவ விளக்கப் படலம் முற்றிற்று :
Comments