Kaivalya Navanitham 2(1-60)
ஓம் கைவல்ய நவநீதம் சந்தேகம் தெளிதல் படலம் பாடல்: 01 நரர்குழி பறித்து மெல்ல நாட்டிய நெடிய கம்பம், உரமுறக் குத்திக் குத்தி உறைப்பிக்கும் உபாயம் போலப், பரமசிற் சொரூபம் தன்னில் பற்றிய மனோவி ருத்தி, திரநிலை பெறச்சந் தேகம் தெளிதலை மொழிகின் றேனே. பொருள்: நரர் = (உலகில்) மனிதர், குழி பறித்து = குழிதோண்டி, மெல்ல நாட்டிய = மெதுவாக அதில் நிறுத்திய, நெடிய கம்பம் = நீண்ட கம்பத்தை, உரம் உற = அசையாமல் உறுதியாக இருக்கும் பொருட்டு, குத்திக் குத்தி = கல் முதலானவைகளை இட்டு குத்திக்குத்தி, உறைப்பிக்கும் உபாயம் போல = நிலைப்படுத்தும் முறைமை போல, பரம சிற்சொரூபம் தன்னில் = மேலான சைதந்ய ஸ்வரூபத்தில், பற்றிய மனோவிருத்தி = (நான் அது எனும் வேறுபாடின்றி) அறிந்த அத்வைத ஞான எண்ணம், திரநிலை பெற = நிலைபெற்று நின்றிட, சந்தேகம் தெளிதலை = சந்தேஹம் தெளிதல் எனும் படலத்தை, மொழிகின்றேனே = இப்போது கூறுகின்றேன். பாடல் : 02 நற்கருத் துடையோ னாகி ஞானவா னாகி நின்றோன், மர்க்கட நியாயம் போல மகாபூத விகாரம் தொட்டு, நிர்க்குண விதேக முத்தி நிலைபரி யந்தம் சொன்ன, சற்குரு வினைவி டாமல் சந்ததம் அநு சரித்தான...