Kaivalya Navanitham - தத்துவ விளக்கப் படலம் (51-101)
கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் பாடல்: 51 இந்தமா யையினால் சீவர்க் கேழவத் தைகளுண் டாகும், அந்தவே ழவத்தை தம்மை அடைவினின் மொழியக் கேளாய், முந்தவஞ் ஞானம் மூடல் முளைத்தல்கா ணாத ஞானம், சந்ததம் கண்ட ஞானம் தழல்கெடல் குளிர்மை ஆதல். பொருள்: இந்த மாயையினால் = சுத்த அசுத்தங்களான இந்த மாயையினால் சீவர்க்கு = உயிர்களுக்கு, ஏழ் அவத்தைகள் உண்டாகும் = ஏழு அவஸ்தைகள் உண்டாகும், அந்த ஏழ் அவத்தை தம்மை = அந்த ஏழு அவஸ்தைகளையும், அடைவினின் மொழியக் கேளாய் = கிராமமாகச் சொல்லுகிறேன் கேட்பாயாக, முந்த அஞ்ஞானம் = முதலாவது அஞ்ஞானம், மூடல் = (இரண்டாவது) மூடல் என்ற ஆவரணம், முளைத்தல் = (மூன்றாவது) தோற்றம் என்ற விக்ஷேபம், காணாத ஞானம் = (நான்காவது) பரோக்ஷ ஞானம், சந்ததம் கண்ட ஞானம் = (ஐந்தாவது) அபரோக ஞானம், தழல்கெடல் = ( ஆறாவது) சோக நிவிர்த்தி, குளிர்மை ஆதல் = (ஏழாவது) குறைவிலா நிறைவு (திருப்தி). பாடல் : 52 பிரமமாம் தனைம றந்த பேதைமை யே அஞ் ஞானம், பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் மூடல், நரனொரு கருத்தால் சீவன் நானென முளைத்தல் தோற்றம், குரவன்வாக் கியத்தால் தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம். பொருள் : பிரமமாம...